சிந்திக்கும் மனிதரே வளர்ச்சி அடைகிறார்.

வார்த்தைகளே வரம்

நல்ல வார்த்தைகள் என்பது மனித மனதை மாற்றும் அமைதியான புரட்சி. பேச்சு மற்றும் வாசிப்பின் மூலம் நல்ல வார்த்தைகள் வசப்படுகிறது.

இனிமையான பேச்சு, நல்ல வாழ்க்கையை கற்றுத்தரும் மிகப் பெரிய ஆசிரியன் புத்தகம். ஒரு நல்ல நண்பன் நம்மை சில நேரங்களில் மட்டுமே வழிநடத்துவான்; ஆனால் ஒரு நல்ல புத்தகம் வாழ்நாள் முழுவதும் நம்மை வழிநடத்திக் கொண்டே இருக்கும்.

புத்தகம் என்பது அறிவின் ஒளி மற்றும் மனதின் தோழன் என்ற கருத்து இன்றும் காலத்தால் அழியாத உண்மை. ஒரு புத்தகத்தை திறப்பது இன்னொரு உலகத்தின் கதவைத் திறப்பதற்கு சமம். நாம் வாழாத வாழ்க்கைகளை வாழச் செய்கிறது. நாம் சந்திக்காத மனிதர்களை அறிமுகப்படுத்துகிறது. நாம் சிந்திக்காத கோணங்களில் சிந்திக்க வைக்கிறது.

இன்றைய தலைமுறை வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அலைபேசியில் விரல்கள் ஓடுகின்றன; ஆனால் புத்தக பக்கங்களில் கண்கள் ஓடுவது குறைகிறது. இதனால் மனிதர்களின் சிந்தனையையும் பொறுமையையும் மெதுவாகக் குறைந்து வருகிறது. ஏனெனில் வாசிப்பு என்பது வெறும் தகவல் சேகரிப்பு அல்ல; அது மனதை வடிவமைக்கும் ஒரு பயிற்சி. தொடர்ந்து வாசிக்கும் மனிதனின் பேச்சிலும், சிந்தனையிலும், முடிவெடுப்பிலும் தனி நிதானம் உருவாகிறது.

ஒரு நல்ல புத்தகம் மனிதனுக்கு தன்னம்பிக்கை கொடுக்கிறது. தோல்வியில் துவண்டுபோன ஒருவரை மீண்டும் எழுந்து நிற்க வைக்கிறது. வாழ்க்கையில் வழி தெரியாமல் நிற்கும் ஒருவருக்கு திசை காட்டுகிறது. அதனால் தான் உலகின் பெரும்பாலான வெற்றியாளர்கள் புத்தக வாசிப்பை தங்களுடைய தினசரி பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

புத்தகம் சாதாரண காகிதம் அல்ல, தொடர்ந்து படிப்பவருக்கு அதுவே பேராயுதம். வாசிப்பு மனிதனை அறிவாளியாக மட்டும் மாற்றுவதில்லை; நல்ல மனிதனாகவும் மாற்றுகிறது. மற்றவர்களின் வலியை உணரக் கற்றுக்கொடுக்கிறது. பொறுமையைக் கொடுக்கிறது. கோபத்தை குறைக்கிறது. தனிமையில் கூட துணையாக நிற்கிறது.

புத்தகங்கள் மனிதனின் உள்ளத்தை மெதுவாக செதுக்கும் சிற்பிகள். ஒரு ஆசிரியர் சில ஆண்டுகள் மட்டுமே பாடம் நடத்துவார்; ஆனால் ஒரு புத்தகம் தலைமுறைகளை கற்றுக்கொடுக்கும். அதனால் தான் புத்தகங்களை நேசிக்கும் மனிதர்கள் வாழ்க்கையை ஆழமாகப் புரிந்துகொள்கிறார்கள்.

இன்று குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய பரிசு விலையுயர்ந்த பொருட்கள் அல்ல; வாசிக்கும் பழக்கம். ஏனெனில் புத்தகம் படிக்கும் குழந்தை நாளை சிந்திக்கும் மனிதனாக வளரும். சிந்திக்கும் மனிதர்களே நல்ல சமுதாயத்தை உருவாக்குவார்கள்.

ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது வெறும் நேரத்தை செலவிடுவது அல்ல; நம்மையே புதிதாக உருவாக்கிக் கொள்வது. அதனால் வாழ்க்கையில் நண்பர்களை தேர்ந்தெடுப்பது போல புத்தகங்களையும் தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டும். ஏனெனில் சில புத்தகங்கள் நம்மை மகிழ்விக்கும்; சில புத்தகங்கள் நம்மை மாற்றிவிடும்.

வார்த்தைகள் மரணமில்லாதவை. ஒரு மனிதன் இறக்கலாம், ஆனால் அவன் விதைத்த நம்பிக்கைச் சொல் காலம் கடந்து அடுத்த தலைமுறையை வாழ வைக்கும்.

Leave a Comment