ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்

வார்த்தைகளே வரம்.

வார்த்தைகள் காதில் மட்டும் விழுவதில்லை; அவை மனதிற்குள் விதையாக விழுகின்றன. அதனாலே அது நம்பிக்கை கொடுக்கும் மருந்தாக அல்லது கோபம் தரும் காயமாக மாறுகிறது.

மனிதர்களின் மூளை, வார்த்தைகளை வெறும் ஒலியாக மட்டும் பதிவு செய்வதில்லை. அவற்றை உணர்ச்சிகளுடன் இணைத்தே சேமிக்கிறது. அதனால்தான் சிறு வயதில் ஆசிரியர் கூறிய ஒரு பாராட்டு வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையை உருவாக்குகிறது. அதே சமயம், “உன்னால் எதுவும் முடியாது” என்று கூறப்பட்ட ஒரு அவமான வார்த்தை பல ஆண்டுகள் தன்னம்பிக்கையை சிதைக்கக்கூடும்.

வெல்லும் சொல்

ஒரு மருத்துவர் நோயாளியிடம், “பயப்படாதீர்கள். நல்ல மருந்துகள் வந்துவிடன, நீங்கள் விரைவில் குணமாவீர்கள்.” என்று சொன்னால், அந்த வார்த்தை மருந்தைப் போல நம்பிக்கையை உருவாக்குகிறது.

அதேபோன்றுஒரு ஆசிரியர், “உன்னிடம் திறமை இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய்.” என்று ஊக்கம் கொடுத்தால் சாதாரண மாணவர் கூட சாதனையாளராக மாறலாம்.

ஒரு தாய், “நான் உன்னை நம்புகிறேன், தைரியாக இரு…” என்று கூறினால், அந்த நம்பிக்கை குழந்தையின் மனதில் வாழ்நாள் முழுவதும் வேரூன்றி நிற்கிறது. இந்த உலகத்தில் பல வெற்றிகளுக்குப் பின்னால் ஒரு ஊக்கமளித்த வார்த்தை இருக்கும்.

கொல்லும் சொல்

அதே நேரத்தில் வார்த்தைகள் விஷமாகவும் துன்புறுத்துகின்றன. ‘நீ ஒரு முட்டாள்’, ‘உன்னால் எதுவும் செய்யமுடியாது’ என்பது போன்ற வார்த்தைகள் மனதை காயப்படுத்திக் கொல்லும் விஷமாக மாறுகின்றன.

உடல் காயம் சில நாட்களில் ஆறிவிடும். ஆனால் அவமானப்படுத்திய வார்த்தைகள், அவை கூறப்பட்ட இடம், நேரம், முகம், எல்லாமே மனதில் ஆண்டுகள் கடந்தும் பதிந்திருக்கும். இதுவே பலருக்கு தாழ்வு மனப்பான்மை, பயம், மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாகிறது.

உறவுக்கு எது தேவை?

உளவியலில் இதை “Self-fulfilling Prophecy” என்று கூறுகிறார்கள். ஒருவரிடம் தொடர்ந்து, “நீ புத்திசாலி.” என்று கூறினால், அவர் அந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுவார். ‘இதெல்லாம் உன்னால் முடியாது’ என்று சொன்னால் அதையும் நம்பி, முயற்சி செய்வதையே கைவிடுவார்.  

ஒரு கணவன் அல்லது மனைவி அன்புடன் பேசும் ஒரு வார்த்தை, உறவை பல ஆண்டுகள் நிலைநிறுத்தும். அதே சமயம் கோபத்தில் கூறப்பட்ட ஒரு அவமான வார்த்தை, பல ஆண்டு உறவையே உடைக்கக்கூடும். ஒரு மேலாளர் ஊழியரைப் பாராட்டினால் திறமை மலரும். அவமானப்படுத்தினால் திறமை மறைந்துவிடும்.

ஒரு அரசியல் தலைவர் அல்லது சமூகத் தலைவர் பேசும் வார்த்தைகள், ஒரு சமூகத்தை அமைதிப்படுத்தவும் முடியும்; தூண்டிவிட்டு மோதலுக்குக் கொண்டு செல்லவும் முடியும்.

வார்த்தைகள் காற்றில் கரைந்துபோகும் ஒலிகள் அல்ல. அவை மனதில் பதியும் நினைவுகள். சில வார்த்தைகள் கண்ணீரை வரவழைக்கின்றன; சில வார்த்தைகள் கனவுகளை உருவாக்குகின்றன. சில வார்த்தைகள் உறவுகளை உடைக்கின்றன; சில வார்த்தைகள் உடைந்த இதயங்களை இணைக்கின்றன.

எனவே பேசுவதற்கு முன் சிந்தியுங்கள். ஏனெனில் ஒரு நல்ல வார்த்தை ஒருவரின் வாழ்க்கையை வெல்லச் செய்யும்; ஒரு தவறான வார்த்தை அவரது உள்ளத்தையே கொல்லும்.

Leave a Comment