காவிரி ஆற்றின் முழு வரலாறு
மழை பொய்த்துப்போகும் ஆண்டுகளில் எல்லாம் காவிரி தண்ணீருக்கு தமிழகமும் கர்நாடகாவும் மோதிக்கொள்வது காலம் காலமாக நடந்துவருகிறது.
வரலாற்றில் நீண்ட காலம் காவிரி நீர் தமிழகத்துக்கு மட்டுமே அதிகம் பயன்பட்டு வந்தது. காவிரி ஆற்றின் மொத்த நீரில் தமிழ்நாடு சுமார் 602 டி.எம்.சி (TMC) நீரைப் பயன்படுத்தி வந்தது. 20ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை கர்நாடகாவிற்கு 138 டி.எம்.சி மட்டுமே கிடைத்து வந்தது.
மேட்டூர் அணை
தமிழ்நாட்டில் மேட்டூர் அணை கட்டப்பட்டதைத் தொடர்ந்து 1924-இல் 50 ஆண்டுக்கால ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் தமிழ்நாட்டின் பாசனப் பரப்பு 11 லட்சம் ஏக்கரும், கர்நாடகாவின் பாசனப் பரப்பு 7 லட்சம் ஏக்கரும் அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
1974-ல் ஒப்பந்த காலம் முடிந்ததும், கர்நாடகா புதிய அணைகளைக் கட்டத் தொடங்கியதால் இரு மாநிலங்களுக்கும் இடையே சர்ச்சை வெடித்தது. இதையடுத்து தமிழ்நாட்டின் வலியுறுத்தலால் 1990-ல் காவிரி நீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

காவிரி நீர் தீர்ப்பாயம்
காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு (2007) 17 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு, பயன்பாட்டிற்குரிய 740 டி.எம்.சி நீரில் தமிழ்நாடு 419 டி.எம்.சி, கர்நாடகா 270 டி.எம்.சி, கேரளா 30 டி.எம்.சி, புதுச்சேரி 7 டி.எம்.சி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 14 டி.எம்.சி ஒதுக்கப்பட்டது. இயல்பான மழைக் காலங்களில் கர்நாடகா ஆண்டுக்கு 192 டி.எம்.சி நீரைத் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்குக் குறிப்பிட்ட மாதவாரிக் கணக்கில் திறந்து விட வேண்டும் என்றும், மழை பற்றாக்குறை ஏற்படும் வறட்சி ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களும் விகிதாச்சார அடிப்படையில் நீரைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு (2018)-ல் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பெங்களூருவின் குடிநீர் தேவையை முன்னிறுத்தி கர்நாடகாவிற்கான நீர் பங்கீட்டை 284.75 டி.எம்.சி ஆக உயர்த்தியது. தமிழ்நாட்டிற்கான பங்கீட்டை 404.25 டி.எம்.சி ஆகக் குறைத்தது (நிலத்தடி நீராக 10 டி.எம்.சியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது). கேரளா மற்றும் புதுச்சேரிக்கான பங்கீட்டில் மாற்றமில்லை.
மேகதாது அணை
இப்போது பெங்களூருவில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில், காவிரி நதி தமிழ்நாட்டிற்குள் நுழையும் இடத்திற்கு அருகே ராமநகரா மாவட்டத்தில் ரூ.6,000 கோடி மதிப்பீட்டில் 48 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணைக் கட்டுவதற்கு கர்நாடகா திட்டமிட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால், வறட்சி நிலவும் காலங்களில் கர்நாடகா நீரைக் கட்டுப்படுத்தும்; இதனால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தண்ணீர் கடுமையாகப் பாதிக்கப்படும்.
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எப்படியாவது தன்னுடைய காலத்தில் அணையைக் கட்டி செல்வாக்கு பெற நினைக்கிறார். இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறார், பிரதமரை பாராட்டுகிறார்.
விஷயம் இப்போது நீதிமன்றத்தில் இருந்தாலும் ஆரம்பக் கட்டுமானப்பணிகள் நடப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் காவிரியின் பயணம் பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம்.
காவிரியின் பயணம்
காவிரியின் பயணம் கர்நாடகாவின் குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவிரியில் தொடங்குகிறது. காவிரி பல துணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள், துணையாறுகள், அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இணைந்த மிகப்பெரிய ஆற்றுப்படுகை. ஹாரங்கி, ஹேமாவதி, லட்சுமண தீர்த்தா ஆகியவை தனித்தனி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உருவாகின்றன. இவற்றின் நீர் வெவ்வேறு இடங்களில் காவிரியுடன் இணைந்து, இறுதியாக கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது.

கபினி கேரளாவின் வயநாடு பகுதியில் உருவாகி, கர்நாடகாவிலுள்ள கபினி அணையில் சேமிக்கப்படுகிறது. பின்னர் டி.நரசிபுரா அருகே காவிரியுடன் இணைகிறது. அதாவது, கபினி அணையிலிருந்து வெளியேறும் நீர் முதலில் கே.ஆர்.எஸ். அணைக்குச் செல்வதில்லை. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து வெளியேறும் காவிரியும், கபினி அணையிலிருந்து வரும் நீரும் டிநரசிபுரா பகுதியில் தான் ஒன்றாக இணைகின்றன.
இதற்குப் பிறகு சிம்ஷா, அர்க்காவதி, சுவர்ணவதி மற்றும் வழியிலுள்ள பிற சிறிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து வரும் நீரும் காவிரியில் சேர்கிறது. இவ்வாறு பல்வேறு ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து சேர்ந்த மொத்த காவிரி நீர், கர்நாடகா–தமிழ்நாடுஎல்லையிலுள்ள பிலிகுண்டுலுவில் அளவிடப்படுகிறது.
பிலிகுண்டுலு ஓர் அணை அல்ல. அது மத்திய நீர்வள ஆணையத்தின் முக்கிய நீர் அளவீட்டு நிலையம். கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை மட்டும் கூட்டிப் பார்த்து, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் கிடைத்தது என்று கூற முடியாது. வழியிலுள்ள துணையாறுகளின் நீர்வரத்து, மழை, பயண நேரம் மற்றும் ஆற்றின் உண்மையான ஓட்டம் அனைத்தும் இதில் அடங்கும். அதனால்தான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த உண்மையான நீரின் அளவு பிலிகுண்டுலுவில் பதிவாகும் நீரோட்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
தமிழ்நாட்டுக்குள் காவிரி
பிலிகுண்டுலுவைக் கடந்த காவிரி, தமிழ்நாட்டிற்குள் நுழைந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைகிறது. மேட்டூரில் சேமிக்கப்படும் நீர், தேவையின் அடிப்படையில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கீழே திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணைக்குக் கீழே பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன. எனவே, இந்த ஆறுகளின் நீர் மேட்டூர் அணையை நிரப்பாது. ஆனால் மேட்டூருக்குக் கீழே காவிரியின் ஓட்டத்திற்கும், டெல்டா பகுதிகளின் தேவைக்கும் அவை கூடுதல் பங்களிப்பை வழங்குகின்றன. அதன்பிறகு முக்கொம்பு மேலணைப் பகுதியில் காவிரி – கொள்ளிடம் நீர்ப் பிரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.
கல்லணையில் இருந்து காவிரி டெல்டாவின் பல்வேறு கால்வாய்கள் மற்றும் ஆறுகளுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே, காவிரி டெல்டாவிற்குக் கிடைக்கும் நீர் என்பது ஏதாவது ஓர் அணையின் இருப்பை மட்டும் சார்ந்ததல்ல. அது பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரோட்டம், மேட்டூர் அணையின் இருப்பு மற்றும் வெளியேற்றம், தமிழ்நாட்டின் பவானி – நொய்யல்–அமராவதி துணையாறுகள், உள்ளூர் மழை மற்றும் நீர் மேலாண்மை ஆகிய அனைத்தையும் சார்ந்துள்ளது.
மனிதர்கள் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும் இயற்கை கருணை காட்டத் தயங்குவதில்லை. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தின் தேவையை விட அதிகமான அளவுக்குத் தண்ணீர் கடலில் கலக்கிறது. இதை தேக்கி வைப்பதற்கு போதிய வசதியான பகுதி என்பதே உண்மை.
எனவே, விவசாயிகளை இயற்கையால் மட்டுமே காப்பாற்ற முடியும்.
