யாராலும் நேற்றை சரிசெய்ய முடியாது. ஆனால், நாளை புதிதாக உருவாக்க முடியும்.

மந்திரச்சொல்

கடந்த காலத்தை மாற்றும் சக்தி எந்த மனிதருக்கும் இல்லை. ஆனால், நாளை எடுக்கவேண்டிய முடிவுகளை சாதகமாக்கும் சக்தி இருக்கிறது.

மனிதர்கள் பொதுவாக தங்களுடைய பழைய தவறுகள், தோல்விகள், ஏமாற்றங்கள் அல்லது இழப்புகளை மீண்டும் மீண்டும் நினைத்து வருந்திக்கொண்டே இருக்கிறார்கள். இது மன அழுத்தம், கவலை, தன்னம்பிக்கைக் குறைவை அதிகரிக்கிறது. மாற்றமுடியாத விஷயத்தில் மனம் சிக்கிக்கொண்டு போராடுகிறது.

இதில், மனிதர்கள் படிக்கவேண்டிய பாடம் ஒன்றுதான். அது, கடந்த காலத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள், எதிர்காலத்தை புதிதாக உருவாக்க முயற்சி செய்யுங்கள். இதுவே ஆரோக்கியமான மனநிலை. கடந்த காலம் ஒரு பாடமாக இருக்க வேண்டுமே தவிர, வாழ்க்கை முழுவதும் பாரமாக இருக்கக் கூடாது.

நான் தோற்றுவிட்டேன் என்று நினைப்பதற்குப் பதிலாக, நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன் என்று நினைப்பவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுகிறார்கள். நாளை நல்லதாக விடியும் என்ற நம்பிக்கை உருவாகும்போது, மூளை புதிய திட்டங்களை வகுக்கத் தொடங்குகிறது. செயல்படுவதற்கான உற்சாகம் அதிகரிக்கிறது. இதனால் கவலை குறைந்து, நம்பிக்கை அதிகரிக்கிறது.

நேற்று என்பது ஒரு நினைவு. நாளை என்பது ஒரு வாய்ப்பு. நேற்று நடந்ததை மாற்ற முடியாது. ஆனால், இன்று எடுக்கும் ஒரு நல்ல முடிவு, நாளைய வாழ்க்கையை முழுமையாக மாற்றும் திறன் கொண்டது.

எனவே, கடந்த காலப் பாடங்களுடன் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதே வெற்றிக்கு வழி. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.  

Leave a Comment