நல்ல சொற்கள் பயணத்திற்கு நல்ல சாலைகள்

மந்திரச்சொல்

வாழ்க்கைப் பயணம் சிறப்பாகவும் வேகமாகவும் செல்லவேண்டும் என்றால், மனித உறவுகள் நன்றாக அமையவேண்டும். நெரிசல் இல்லாத நல்ல சாலையில் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்ய முடியும். அப்படிப்பட்ட நல்ல சாலைகள் போன்றவே, நாம் பேசும் நல்ல சொற்கள்.

யாகாவார் ஆயினும் நாகாக்க என்றார் வள்ளுவர். நாம் பேசும் வார்த்தைகளுக்கு மனித மனங்களை குணப்படுத்தும் ஆற்றலும் உண்டு, காயப்படுத்தும் நச்சுத்தன்மையும் உண்டு. அதில் நல்வார்த்தைகளைப் பேசுவதால் நமக்கு அறிவியல் மற்றும் உளவியல் ரீதியான நன்மைகள் கிடைக்கின்றன.

மகிழ்ச்சி ஹார்மோன்கள்

நாம் பிறரிடம் கனிவாகப் பேசும்போது, நம்முடைய மூளையிலும் கேட்பவரின் மூளையிலும் டோபமைன் (Dopamine) மற்றும் ஆக்ஸிடோசின் (Oxytocin) போன்ற நரம்பியல் கடத்திகள் (Neurotransmitters) சுரக்கின்றன. இது உடனடி மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரும்.

மன அழுத்தம் குறைதல்

கசப்பான சொற்கள் உடலின் ‘கார்டிசோல்’ (Cortisol) என்ற அழுத்த ஹார்மோனை அதிகரிக்கும். மாறாக, நல்ல வார்த்தைகளைப் பேசும்போதும் கேட்கும்போதும் இதயத் துடிப்பு சீராகி, இரத்த அழுத்தம் (Blood Pressure) கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.

சமூக நன்மைகள்

குடும்பத்திலோ அல்லது பணியிடத்திலோ ஒரு பதற்றமான சூழல் நிலவும்போது, கோபப்படாமல் நிதானமாகப் பேசப்படும் ஒரே ஒரு நல்ல வார்த்தை, அந்தப் பிரச்சினையை ‘அவுட் ஆஃப் கண்ட்ரோல்’ போகாமல் தடுத்துவிடும்.

பணியிடத்தில் அதிகாரத்தோடு கட்டளையிடும் மேலாளர்களை விட, “உங்களால் முடியும்”, “நன்றாகச் செய்திருக்கிறீர்கள்” என்று ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பேசும் தலைவர்களுக்கே (Leaders) ஊழியர்கள் அதிக ஒத்துழைப்பு தருவார்கள்.

உலகில் காசு கொடுத்து வாங்கத் தேவையில்லாத, முதலீடே இல்லாத ஒரே சொத்து ‘நல்ல வார்த்தை’ மட்டும்தான். ஆனால், அது நமக்குக் கொண்டு வந்து சேர்க்கும் நிம்மதியும் லாபமும் கோடிகளுக்குச் சமம்!

மகிழ்ச்சி என்பது உங்கள் பிறப்புரிமை, யாருக்காகவும் அதை விட்டுக் கொடுக்காதீர்கள்.

Leave a Comment