காதலில் ஆண்கள் வேட்டை நாய்கள்..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : சுயநலத்தில் இருந்து பொதுநலத்திற்கு மாற முடியுமா? ஏன் மனிதர்களிடம் இத்தனை சுயநலம்?

  • ஏ.கருப்பையா, கூமாபட்டி.

ஞானகுரு :

கடவுள் மனிதனாகப் பிறந்து வந்தால்கூட, சுயநலத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார். ஏனென்றால் உயிர்களின் அமைப்பே அப்படித்தான். அதனால் சுயநலம் என்பது தவறு கிடையாது.

அதேநேரம், சுயநலத் தேவைகள் நிறைவேறியதும் பொதுநலத்திற்கு மாறுவது நல்ல மனிதனுக்குரிய அறிகுறி. ஆனால், தன்னுடைய சுயநலத் தேவைகள் நிறைவேறியதுகூட தெரியாமல் மனிதன் கடைசி மூச்சு வரை, தனக்காகவே பரிதாபமாக வாழ்ந்துகொண்டு இருப்பதுதான் பரிதாபம்.

ஒரே ஒரு கணம், இனியும் எனக்கு இதெல்லாம் தேவையா என்று கேட்டுக்கொண்டால், சுயநலச் சேற்றில் இருந்து மீண்டுவிட முடியும். மரணத்திற்குப் பிறகு மனிதரின் பணத்தைத் தவிர எதையும் யாரும் பாதுகாப்பதில்லை.

கேள்வி : காதல் திருமணங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?

  • டி.சகுந்தலா, அருப்புக்கோட்டை

ஞானகுரு :

வேட்டை நாயைப் போன்றவன் ஆண். தன்னுடைய ஆசைக்காக காதல் வலை வீசி பெண்ணை பிடிக்கிறான். திருமணம் முடியும் வரையிலும் சொன்னதைக் கேட்கும் நாய்க்குட்டி போன்று தலையாட்டுகிறான். திருமணம் முடிந்ததும்  பொய்மையில் இருந்து வெளியேறி, தன் நிஜ வேட்டை முகத்தைக் காட்டுகிறான். அதனை தாங்கிக்கொள்ளும் சக்தி பல பெண்களிடம் இருப்பதில்லை.

மேலும் இன்று பொருளாதார ரீதியில் எவரையும் சார்ந்திருக்கத் தேவை இல்லாத நிலையை பெண் அடைந்துவிட்டதால், சட்டென வெளியேறி விடுகிறாள். மிக குறைவான எண்ணிக்கையில் பெண்களும் நயவஞ்சகமாக ஆண்களை மயக்கி திருமணம் வரை கொண்டுசெல்வதுண்டு. எதிர்பாராத ஏமாற்றங்களே திருமண முறிவுக்குக் காரணமாகிறது.

இயல்பான முகத்துடன் காதல் செய்தவர்கள் எந்தக் காலத்திலும் பிரிவதில்லை. பொய், பகட்டுக்கு ஆசைப்பட்டு காதலில் விழுந்தவர்களே, பிரிந்தும் போகிறார்கள்.

Leave a Comment