ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : தாய், தந்தையரை நிஜமான தெய்வங்களாக வணங்கினால் போதுமா..? இதற்கு கடவுள் ஆசிர்வாதம் கிடைக்குமா..?
- எஸ்.கணேசன், கழுகுமலை.
ஞானகுரு :
பல தத்துவங்களும், மதங்களும், அறநெறி நூல்களும் தாய்–தந்தையரை மனித வாழ்வின் முதல் தெய்வங்களாகப் போற்றுகின்றன. உயிர் கொடுத்து, வளர்த்து, வழிகாட்டி, பல தியாகங்களைச் செய்து நம்மை உருவாக்கியவர்கள் என்பதால் அவர்களை மதிப்பதும், நன்றியுடன் நடத்துவதும் மிகப் பெரிய அறமாகக் கருதப்படுகிறது.
அதேநேரம், தெய்வம் என்பதற்கு மக்களின் இலக்கணம் என்ன தெரியுமா? கேட்பதை எல்லாம் கொடுக்க வேண்டும், நோய் நொடியில் இருந்து காப்பாற்ற வேண்டும், துன்பம் நேர்கையில் ஆறுதலாக இருக்க வேண்டும். இதையெல்லாம் தாய், தந்தையர் செய்து கொடுப்பதால் தெய்வமாக வணங்கலாமா என்று கேட்கிறீர்கள்.
வணங்குவது என்பதன் அர்த்தம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதாவது கைகூப்பி அல்லது காலில் விழுவது உண்மையான வணக்கம் அல்ல. பெற்றோரை அன்புடன் நடத்துவது, அவர்களின் தேவைகளை கவனிப்பது. முதுமையில் அவர்களுக்கு துணையாக இருப்பது, அவர்களின் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது. அவர்கள் செய்த தியாகங்களை மறக்காமல் நன்றியுடன் வாழ்வதுதான் வணங்குதல்.
தாய் தந்தையரை மதிப்பது மட்டுமின்றி மற்ற மனிதர்களிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவதோடு, கருணை, நேர்மை, நன்றியுணர்வுடன் நடந்துகொள்வதே உண்மையான ஆன்மிகப் பயணம். இதற்கு கடவுள் ஆசிர்வாதம் தேவையில்லை என்பதை இந்த ஆன்மிகப்பயணமே உணர்த்திவிடும்.
…………
கேள்வி : இறைக்கிற கிணறு ஊறும் என்கிறார்கள். அப்படியென்றால் செலவு செய்துகொண்டே இருந்தால் வருமானம் வருமா?
- எம்.முத்துமணி, சாத்தூர்.
ஞானகுரு :
சரியான நேரத்தில், சரியான முதலீட்டில் செலவு செய்துகொண்டே இருந்தால் நிச்சயம் பணம் ஊறிக்கொண்டே இருக்கும். ஆடம்பரத்திற்கும் பிறர் புகழவேண்டும் என்பதற்கும் செலவு செய்தால் பாழுங்கிணற்றில் விழுந்த கதையாக மாறிப்போகும்.
