இப்படி ஒரு ஆபத்து..
இன்று நிறைய பேர் பாப்கார்ன் சாப்பிடவே சினிமா தியேட்டருக்குப் போகிறார்கள். அத்தனை பெரிய பாஸ்கெட்டில் இருக்கும் பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே சினிமாவை ரசிப்பது ஒரு தனி ஸ்டைல்.
பொதுவாக பாப்கார்ன் உடலுக்கு எந்த தீமையும் செய்யாது. இன்னும் சொல்லப்போனால் நன்மையே செய்யும். ஏனென்றால் இதில் நிறைய நார்ச்சத்து இருக்கிறது. அதேநேரம், கலோரியும் கொஞ்சம்தான்.
மேலும், வைட்டமின், பாஸ்பரஸ், மாங்கனீசு போன்ற சத்துக்களும் சோளத்தில் இருக்கின்றன. ஆனால் இதெல்லாம் இயற்கை முறையில் சோளத்தைப் பொரித்து சாப்பிடும்போது மட்டும்தான். கடைகளிலும் தியேட்டர்களிலும் மிஷின் வைத்துப் பொரித்துக் கொடுக்கிற பாப்கார்னிலும் வீட்டில் உடனடியாக தயாரிக்கக்கூடிய இன்ஸ்டன்ட் பாப்கார்ன்களும் உடலுக்கு நல்லதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பாப்கார்ன் சுவையாக இருக்கவேண்டும் என்பதற்காக எண்ணெய், வெண்ணெய், மசாலா சேர்த்துத்தான் பொரித்து விற்பனை செய்கிறார்கள். அதனால் இந்த பாப்கானில் கொழுப்பும் கலோரியும் அதிகம்.
மேலும் பாப்கார்ன் பெரிதாக பொரிந்து வருவதற்கும், நல்ல மணம் கிடைப்பதற்கும் ‘டைஅசிட்டைல்’ என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது நுரையீரலுக்கு கேடு விளைவிக்கலாம். அதனால் சுவையும் மணமும் குறைவாக இருந்தாலும் சோளம் வாங்கி பொரித்து சாப்பிடுங்கள்.
மேலும், சினிமா தியேட்டரில் விற்பனை செய்யப்படும் பாப்கார்ன் விலை எக்கச்சக்கம். அந்த விலையில் இயற்கை சோளம் ஒரு மாதத்திற்கு மேல் வாங்கி சாப்பிடலாம். அதனால் சினிமா தியேட்டருக்குப் போனால் சினிமா பாருங்கள், பாப்கார்ன் வேண்டாம்.
