பணமே மந்திரம்
ஒரே நேரத்தில் ஏழை வீட்டில் பிறக்கும் குழந்தை ஏழையாகவும் பணக்கார வீட்டில் பிறக்கும் குழந்தை பணக்காரராகவும் இருக்கிறது. அந்த வகையில் ஏழை நாடுகளில் பிறப்பவர்கள் பெரும்பாலோர் ஏழைகளாகப் பிறந்து ஏழைகளாகவே மறைகிறார்கள். இவர்களில் பணக்காரராக மாறுபவர்கள் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவர்களுக்கு கார், பங்களா என்று பணக்காரராக மாறும் ஆசை இருந்தாலும் அவை எளிதாக நிறைவேறுவதில்லை. ஏன் தெரியுமா?
ரிஸ்க் முக்கியம்
ஏழைகள் உழைக்கத் தயாராக இருக்கிறார்களே தவிர, ரிஸ்க் எடுப்பதற்கு முயற்சி செய்வதில்லை. வாய்ப்பு கிடைக்கும் நேரத்திலும் பயந்துபோய் கோட்டை விடுகிறார்கள். ஏழை ஒருவரிடம் மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் தரும் வேலை வேண்டுமா அல்லது புதிய தொழில் தொடங்க முதலீடு வேண்டுமா என்று கேட்டுப் பாருங்கள். ஏழைகள் என்றால் எந்த யோசனையும் இல்லாமல் 1 லட்சம் ரூபாய் சம்பளத்தையே தேர்வு செய்வார்கள். ஏனென்றால், வேலை செய்வதில் எந்த ரிஸ்க்கும் இல்லை.
புதிய தொழில் தொடங்கினால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம், நிறைய பேருக்கு 1 லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கலாம் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. அந்த அளவுக்கு தொழில் பற்றி பயம் இருக்கிறது. லாபம் சம்பாதிப்பதை விட தொழிலில் ரிஸ்க் அதிகம் என்ற எண்ணம் அவர்கள் நெஞ்சில் ஊறியிருக்கிறது. அதனாலே வாழ்நாள் முழுவதும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
சம்பளம் ஏழைகளுக்கு சாப்பாடு போடும். ஆனால் தொழிலில் கிடைக்கும் லாபம் மட்டுமே ஒருவரை பணக்காரராக மாற்றும். அதனால் தான் மாதச் சம்பளம் வாங்குபவர்களால் ஒரு போதும் பணக்காரராக முடிவதில்லை. ரிஸ்க் எடுக்கும் மனப்பான்மையை ஏழைகள் வளர்த்துக்கொண்டால் அவர்களும் பணக்காரர்களாக மாறலாம் என்பதே உண்மை.
