ஞானகுரு பதில்கள்
கேள்வி : ஏஐ தொழில்நுட்பத்தில் வாழ்க்கை அவசரயுகமாகக் கழிகிறது. எதையும் அனுபவிக்க முடியவில்லையே?
- கே.ராசாத்தி, சூலக்கரை மேடு.
ஞானகுரு :
மனிதர்கள் இப்போது தொழில்நுட்பத்தின் கையில் சிக்கியிருக்கிறார்கள். அதை விரும்பவும் செய்கிறார்கள். அதிலிருந்து விடுபட யாரும் விரும்புவதில்லை, அதேநேரம், தொழில்நுட்பத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
புதிய தொழில்நுட்பங்கள் கூர்மையான கத்தியைப் போன்றது. நன்மையும் செய்யும், தீமையும் செய்யும். நீங்கள் கத்தியின் எந்த பக்கத்தைக் கையில் பிடித்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே பலன் இருக்கும்.
எல்லோருக்கும் காலம் ஒன்றுபோல் நகர்கிறது. உங்களுக்கு மட்டும் சூரியன் சீக்கிரம் எழுவதில்லை, மறைவதும் இல்லை. எனவே, காலவோட்டத்தில் புத்தம்புது மாறுதல்களை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த ஓட்டத்தையும் மாற்றத்தையும் ரசிக்க முடியும். இதுவும் நல்ல அனுபவம் என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.
கேள்வி : இந்த உலகில் நிம்மதியாக வாழும் மனிதர்கள் உண்டா?
- டி.வாசுகி, மைட்டான்பட்டி.
ஞானகுரு :
கட்டில், மெத்தை, கொசுவர்த்திச் சுருள் போன்ற எந்த வசதிகளும் இல்லாமல் ரோட்டோரங்களில், ஓடும் வாகனங்களில், பணி நேரங்களில் தூங்கும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். படுத்தவுடன் தூங்கும் அத்தனை பேரும் நிம்மதியாக வாழ்பவர்கள்.
