சூப்பர் பிரேக் ஃபாஸ்ட்
தமிழர்களுக்குப் பிடித்த உணவுகளில் மிகவும் முக்கியமான ஒன்று இட்லி. பஞ்சு போன்ற இட்லியுடன் இரண்டு வகை சட்னி, சாம்பார் ஊற்றி சாப்பிட்டால், சொர்க்கத்தைப் பார்த்தது போன்ற சுவை இருக்கும்.
தமிழ் மற்றும் கர்நாடக வரலாற்று நூல்களில் கி.பி. 8–10ஆம் நூற்றாண்டுகளிலேயே இட்லி போன்ற உணவு பற்றிய குறிப்புகள் உள்ளன. பழங்காலத்தில் இன்றைய மாதிரி அல்லாமல் வேறுவிதமாக தயாரிக்கப்பட்டதாக உணவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திலும் இட்லிதான் நல்லது என்பதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்தியப் பெருநகரங்களில் காலை உணவாக எடுத்துக்கொள்ளப்படும் உணவுகளை எல்லாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார்கள்.
சத்துக்கள் அதிகம்
மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லிவாசிகள் மைதா, கோதுமை உணவுகளைத்தான் காலையில் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த உணவில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது என்றாலும் போதிய அளவுக்கு புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து இல்லையாம். ஆனால் சென்னைவாசிகள் காலையில் சாப்பிடும் இட்லி, சாம்பாரில் அதிக சத்துக்கள் இருக்கிறதாம்.
அரிசியும், உளுந்தும் புரோட்டீன்கள் நிறைந்தது. சாம்பாரில் உள்ள பருப்பு மற்றும் காய்கறிகளும் சாத்தானவை. அதனால் தினமும் காலையில் இட்லி சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
நோ எண்ணெய்
இட்லி எண்ணெய் மிகக் குறைவாக பயன்படுத்தப்படும் உணவு என்பதால் எளிதில் ஜீரணமாகிறது. அரிசி மற்றும் உளுந்து புளிப்புச் செயலில் (Fermentation) கலந்து தயாரிக்கப்படுவதால் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகி குடல்நலத்துக்கும் உதவுகிறது.
பொரித்த உணவுகளைப் போல அல்லாமல், இட்லி நீராவியில் வேகுவதால் கொழுப்பு மிகக் குறைவாக இருக்கும். அதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பரிந்துரைக்கப்படும் உணவாக உள்ளது.
இந்திய விண்வெளி மற்றும் உணவியல் ஆராய்ச்சிகளில், நீண்ட நேரம் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய மற்றும் எளிதில் ஜீரணமாகும் உணவாக இட்லி குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் சத்துத்தன்மை காரணமாக இது “சூப்பர் பிரேக்பாஸ்ட்” என அழைக்கப்படுகிறது.
