ஹோட்டல் வெற்றி ரகசியம்
மிகவும் லாபகரமான தொழிலாக நிறைய பேர் கண்ணுக்குத் தெரிவது ஹோட்டல் தொழில் மட்டும்தான். ஏனென்றால், ஒரு ஹோட்டலில் விற்பனை செய்யப்படும் இட்லி, தோசை போன்ற உணவு வகைகள் தயாரிக்க எவ்வளவு செலவு ஆகும் என்பதை எல்லோரும் எளிதாக கணக்கு போட முடியும். அதிக விலை வைத்தாலும் ஹோட்டலுக்கு ஆட்கள் அதிகம் வருவதைப் பார்க்கிறார்கள். எனவே, சிம்பிளாக கணக்கு போட்டுப் பார்த்தால் எக்கச்சக்க லாபம் வருவது உறுதியாகத் தெரியும். அதனாலே புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் பலரும் சட்டென ஹோட்டல் தொழிலை தேர்வு செய்கிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா..? ஹோட்டல் தொழிலில் தான், நிறைய பேர் நஷ்டப்பட்டு வெளியேறுகிறார்கள். இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 80% என்று சொல்லப்படுகிறது.
நிறைய பேர் இந்த தொழிலை தேர்வு செய்வதற்கு என்ன காரணமோ, அதுவே நஷ்டமடைவதற்கான காரணமாகவும் இருக்கிறது.
சுவை போதுமா?
ஏனென்றால் ஹோட்டல் தொழிலை எல்லோரும் மேம்போக்காகவே பார்க்கிறார்கள். அதாவது, சுவையாகக் கொடுத்தால் எங்கிருந்தாலும் மக்கள் தேடி வருவார்கள் என்று நம்புகிறார்கள். அதோடு தனக்கு சுவை உணர்வு அதிகம், நல்ல கைப்பக்குவம் உண்டு என்றெல்லாம் நம்புகிறார்கள். ஆனால், இது மட்டும் போதாது.
கணக்கு போட்டுப் பார்க்கும்போது நல்ல லாபம் இருப்பது தெரியும். அது ஓரளவு உண்மைதான். அதாவது சமையல் பொருட்கள், வாடகை, மின்சாரம், வேலையாட்கள் சம்பளம் போன்றவற்றை கணக்கில் கொண்டுவந்துவிட முடியும். ஆனால் ஹோட்டல் வெற்றிக்கு சுவை, அன்பான உபசரிப்பு, சுற்றுச்சூழல் போன்றவையும் முக்கியம். இவற்றை கணக்கு போட்டு பார்க்க முடியாது.
நிறைய பேர் ஹோட்டல் தொடங்கிய முதல் மாதமே லாபம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதிகபட்சம் மூன்று மாதங்களில் லாபம் வரவில்லை என்றால் மூடிவிடுகிறார்கள். ஒரு ஹோட்டல் இருப்பது நன்கு பரவலாகத் தெரிந்து, ரெகுலர் கஸ்டமர் வருவதற்கு குறைந்தது 6 மாதங்களிலிருந்து 1 வருடம் வரை ஆகலாம். அதுவரையிலும் நஷ்டம் வருவதையும் கணக்கிட்டே ஹோட்டல் தொழில் தொடங்க வேண்டும்.
விலை மாற்றம்
அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகளின் விலை அன்றாடம் மாறிக்கொண்டு இருக்கும். ஹோட்டல் பண்டங்களின் விற்பனை விலையை அதற்கேற்ப மாற்றிக்கொண்டே இருக்க முடியாது. குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சுவை மாறாமல் கொடுக்கும் திறமை வேண்டும். அதோடு, விலை மாற்றத்தினால் ஏற்படும் நஷ்டத்தையும் கணக்கு போட வேண்டும்.
எல்லோரும் பல கடைகளில் சாப்பிட்டு ஒப்பிட்டுப் பார்த்தே ஒரு கடையைத் தேர்வு செய்கிறார்கள். எனவே, ருசி, விலை, கவனிப்பு ஆகியவை ஆட்களுக்கு ஏற்ப, நேரத்துக்கு ஏற்ப மாறினால் கஸ்டமர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
நோ ஸ்டாக்
மற்ற தொழில்களில் விற்பனையாகாத பொருளை அடுத்த நாள் ஸ்டாக் வைக்க முடியும். ஆனால், ஹோட்டலில் விற்பனையாகாத உணவுப் பொருட்களை குப்பையில் மட்டுமே போட வேண்டும். முதல் நாள் செய்த உணவுப் பண்டங்களை புதிய பொருட்களுடன் கலந்து விற்பனை செய்ய முயன்றால், வாடிக்கையாளர்கள் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். அப்படி செய்தது தெரிந்துவிட்டால் அது நெகடிவ் விளம்பரமாக மாறிவிடும். எனவே, வீணாகும் பொருட்களால் வரும் நஷ்டத்தையும் கணக்கிட வேண்டும்.
இத்தனை பேர் வருவார்கள் என்று கணக்குப் போட்டு சமைத்து வைத்திருக்கும் நேரத்தில் பெரிய மழை பெய்துவிட்டால், நிறைய பேர் வீட்டிலேயே சாப்பிட்டுக் கொள்வார்கள். எனவே, எதிர்பாராத நஷ்டத்தை தாங்கிக்கொள்ள வேண்டும்.
வேலைக்கு ஆட்கள் தேவை
புரோட்டா மாஸ்டர், சர்வர், கிளீனர்கள் திடீர் திடீரென தொழில் மாறுவது ஹோட்டல் தொழிலில் சகஜம். எனவே, ஒரு நல்ல சமையல்காரரை மட்டும் நம்பி தொழில் தொடங்கக்கூடாது. யார் இருந்தாலும், இல்லை என்றாலும் ஒரே சுவை கிடைக்கும் வகையில் தயாரிக்கும் அனுபவம் மிகவும் முக்கியம். தினம் ஒரு டேஸ்ட் என்றால், அது வாடிக்கையாளரை அதிருப்தியடைய வைத்துவிடும். அதேபோல் பார்க்கிங் பிரச்னை இருந்தாலும் ஆட்கள் வருவது குறைந்துவிடும்.
நிறைய பேர் அன்றாடம் கணக்கு பார்ப்பதில்லை. தினமும் பணம் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பதால் நஷ்டம் கண்ணுக்குத் தெரியாது. என்றாவது ஒரு நாள் கணக்கு பார்த்தால், எழுந்தரிக்க முடியாத அளவுக்கு மிகப்பெரும் நஷ்டத்தில் மாட்டியிருப்பது புரியும்.
ரிஸ்க் கணக்கு
இப்படியெல்லாம் சொல்வதால், ஹோட்டல் தொழிலில்தான் அதிக ரிஸ்க் என்பதில்லை. எல்லா தொழிலிலும் ரிஸ்க் உண்டு. இந்த தொழிலை சாதாரணமாக எடுத்துக்கொண்டு நிறைய பேர் நுழைவதால், நிறைய பேர் தோற்றுப்போகிறார்கள். அதேநேரம், ஹோட்டல் தொழில் மீது மிகவும் ஆர்வமும் கவனமும் வைத்து 24 மணி நேரமும், வெற்றிக்கான வழிகளை யோசிப்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
சுருக்கமாக சொல்வது என்றால் சுவை, ரசனையைத் தாண்டி பணம் மேலாண்மை பற்றித் தெரிந்தவர்களுக்கு ஹோட்டல் நிச்சயம் லாபம் தரும் தொழில். யாராக இருந்தாலும் சின்னச்சின்ன நஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த நஷ்டத்தை பாடமாக எடுத்துக்கொண்டு முன்னோக்கி நகர்பவர் ஹோட்டல் தொழிலில் கொடி கட்டிப் பறக்கலாம்.
