உண்மை சம்பவம்
உயிர், ஆன்மா இரண்டும் வேறல்ல ஒன்றுதான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இறந்தபின் மனிதர்கள் என்ன ஆகிறார்கள் என்பது குறித்து குருஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு விளக்கம் சொல்கிறார் இறைவன் கிருஷ்ணர்.
ந த்வேவாஹம்ஜாது நாஸம்ந த்வம் நேமே ஜனாதி பா
நசைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத;பரம் – என்று சொல்கிறார்.
அதாவது, நீ எவர் அழிவார் என்று நினைக்கிறாயோ, அவர்கள் அழிவதே இல்லை. அவர்கள் மட்டுமல்ல, இந்த உடல் தோன்றுவதற்கு முன்னும் நாம் அனைவரும் இருந்தோம். இந்த உடல் அழிந்தபிறகும் நாம் இருப்போம். உடல் அழிவதால் ஆத்மா நாசமுறாது. ஆகவே அழிந்துவிடுவார்களோ என்று வருத்தப்படுவது சரியல்ல என்று உபதேசம் செய்தார் பரந்தாமன்.
உயிர், ஆன்மா பற்றி எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் மக்களுக்கு இறப்பு குறித்து பயமும், அச்சமும் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் இறப்புக்குப் பின் என்ன ஆகும் என்பதுதான் யாருக்கும் தெரியாத கேள்வியாக இருக்கிறதே.
இந்த உலகத்தில் எத்தனையோ பேர் மரணம் வரை சென்று மீண்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் சொல்வது, உடலில் இருந்து உயிர் தனியே பிரிந்து சென்றது. என் உடலுக்கு என்ன ஆகிறது என்பதை நான் வேடிக்கை பார்த்தேன். எனக்கு வலி இல்லை… வேதனை இல்லை. சந்தோஷமாக இருந்தது என்கிறார்கள்.
மரியா என்ற வாஷிங்டன் நகரைச் சேர்ந்த பெண் 1977ம் ஆண்டு தன் நண்பர்களைக் காண முதல்முறையாக சியாட்டில் நகருக்கு வருகிறாள். திடீரென அவளுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படவே அவள் ஹார்பர்வியூ மருத்துமனைக்குக் கொண்டுசென்றார்கள். அங்கே அவளுக்கு செயற்கை முறையில் இருதயத்தை இயங்கவைக்க முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள்.
உயிர் பிழைத்த பின்னர் மரியா சொன்ன செய்திகள்தான் பரபரப்பானவை. ‘என்னை டாக்டர் சோதனை செய்தபோது திடீரென எனக்கு புதிய அனுபவம் ஏற்பட்டது. நான் என் உடலைவிட்டு தனியாக மிதந்துகொண்டு இருந்தேன். நாலாவது மாடியின் மேற்கூரையில் இருந்து என் உடலுக்கு நடக்கும் சோதனைகளைப் பார்க்க முடிந்தது’ என்று சொன்னார்.
முதலில் அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை. ஆனால், அந்த நாலாவது மாடியில் ஒரு அவசர வழி இருந்ததாகவும், ஒரு கிழிந்துபோன ஷூ ஜன்னல் ஓரத்தில் இருந்ததைப் பார்த்ததாகவும் சொன்னார். அதனை பரிசோதித்த டாக்டர்கள், அவை எல்லாமே அவர் வர்ணித்தபடியே இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.
மரியாவை முதன்முதலாக மயங்கிய நிலையில்தான் அந்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்தார்கள் என்பதால், அவராக கற்பனையில் அப்படி சொல்வதற்கு சாத்தியமே இல்லை. மேலும் அவர் தலைமாட்டில் இருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் எப்படி செயல்பட்டார்கள் என்பதையும் அச்சுப்பிசகாமல் சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். இதனை கற்பனையாகச் சொல்லி இருப்பார் என்று சிலர் நிராகரித்தாலும், உண்மை என்றே நம்புகிறார்கள். உயிர் பற்றி பேசுவது எல்லாமே ஆச்சர்யங்கள்தான்.
