ஹிட்லரின் காதல் எப்படிப்பட்டது..?

காலமெல்லாம் காதல்

இன்று காதல் சகஜமான விஷயமாகிவிட்டது. ஆணும் பெண்ணும் சம்பாதிக்கும் இடங்களில் காதல் பெருகி வளர்கிறது. மிகவும் தீவிரமாக காதல் செய்கிறார்கள். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் மணம் முடிக்கிறார்கள். இஷ்டப்பட்ட வகையில் திருமணம் முடிந்ததும் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று கேட்டால்… இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

காதல் செய்த நேரத்தில் இருந்த அன்பும்… பாசமும் இல்லை என்றுதான் பெரும்பாலான தம்பதிகள் குமுறிக்கொண்டு இருக்கிறார்கள். பொறுக்கவே முடியாத பலர் சண்டை போட்டு பிரிந்து விவாகரத்து வாங்கிவிடுகிறார்கள். இவர்கள் திருமண வாழ்க்கை முறிந்துபோனதற்குக் காரணம் என்ன தெரியுமா?

காதல் புரிதல்

காதல் பற்றிய புரிதல் இல்லாததுதான். ஒரு குட்டி நகைச்சுவையைக் கேளுங்கள்.

கணவனிடம், ‘செப்டம்பர் 7ம் தேதியை ஞாபகம் இருக்கா?’ என்று கேட்டாள் ஒரு காதல் மனைவி. ‘அதெப்படி மறப்பேன்… அன்றுதானே முதன்முதலாக உன்னை சந்தித்தேன். நான் கடைசியா சிரிச்சது அன்னைக்குத்தான்’ என்றான் கணவன். இந்த நிலையில்தான் இருக்கிறது, பெரும்பாலான காதல் தம்பதியரின் நிலைமை. திருமணத்துக்குப் பிறகு காதல் காணாமல் போய்விடுகிறது.

சரி, உண்மையான காதல் எப்படி இருக்கவேண்டும்?

ஹிட்லரின் காதலியான ஈவா பிரவுனின் உறுதியான காதலைப் போன்று இருக்கவேண்டும். புகைப்பட நிறுவனத்தில் வேலை பார்த்த ஈவா, தன்னுடைய இள வயதில் ஹிட்லரை சந்தித்தார். அப்போது ஹிட்லருக்கும் ஈவாவுக்கும் 23 வயது வித்தியாசம்.

ஹிட்லரின் காதலி

திருமணம் செய்துகொண்டால் தனது கவர்ச்சி குறைந்துவிடும் என்று எண்ணிய ஹிட்லர், ஈவாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. ஆனாலும் அவளது காதலுக்கு மதிப்பளித்து, தனது அலுவலப் பணியில் சேர்த்துக்கொண்டார். ஹிட்லரை புகைப்படம் எடுக்கும் பணியைச் செய்துவந்த ஈவாவைப் பார்த்து, ஒரு மில்லிமீட்டர் கூட புன்னகைகூட சிந்தமாட்டார் ஹிட்லர். ஆனாலும் இருவருக்குள்ளும் காதல் மட்டும் பூத்துக்கிடந்தது. உலகத்தையே ஆள நினைத்த ஹிட்லருக்கும் சிக்கல் வந்தது. காலம் மாறியது. ஜெர்மானியப் படைகள் தோற்றுப் பின்வாங்கின.

ஹிட்லர் அரணமனைக்குள் முடங்கிப் போனார். அவருடன் இருந்த அத்தனை பெரிய மனிதர்களும் காணாமல் போனார்கள். தன்னுடன் இருந்தால் நிச்சயம் மரணம் வந்துவிடும் என்று ஈவாவை தப்பித்துப் போகச்சொன்னார் ஹிட்லர். ஆனால், மறுத்துவிட்ட ஈவா, தன்னைத் திருமணம் செய்துகொண்டு, தன்னுடைய காதலுக்கு மரியாதை கொடுக்கச் சொன்னார்.

காதலுக்கு மரியாதை

தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருப்பதைச் சொன்னார் ஹிட்லர். தானும் சந்தோஷமாக தற்கொலை செய்துகொள்ளக் காத்திருப்பதாகச் சொன்னார் ஈவா. கல் மனது கரைந்தது. அந்த இக்கட்டான தருணத்தில் ஈவாவை திருமணம் முடித்துக்கொண்டார். சில மணி நேரங்கள் மட்டுமே மனைவியாக வாழ்ந்த ஈவாவும் ஹிட்லரும் தற்கொலை செய்துகொண்டார்கள். ஈவா மறைந்து போனாலும் ஓர் அற்புதக் காதலியாக இன்னமும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள்.

தன்னுடைய சுகத்தில் மட்டும் காதல் இல்லை… தனக்குப் பிரியமானவருக்கு முடிந்த அளவுக்கு சந்தோஷம் தருவதுதான் காதல். இதனை ஆணும், பெண்ணும் புரிந்துகொண்டால் வாழ்க்கை சந்தோஷமே…

Leave a Comment