ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : வாழ்க்கைக்கு ஆதாரம் உறவுகளா… பணமா?
- டி.ராஜ்குமார், சங்ககிரி
ஞானகுரு :
உறவு, பணம் வாழ்க்கைக்குப் போதும் என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் உறவுகள், பணத்தால் எந்த உபயோகமும் இருப்பதில்லை. எல்லோருக்குமான ஆதாரம், உயிர் வாழும் போராட்டம் மட்டுமே.
……………….
கேள்வி : எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வழி இருக்கிறதா?
- எஸ்.சுந்தரம், ஒரத்தநாடு
ஞானகுரு :
எது கிடைத்தாலும் மகிழ்ச்சி அடையமாட்டேன் என்ற எதிர்மறை மனநிலையில்தான் மனிதர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இரண்டாம் பரிசு கிடைத்தவர், அதற்காக திருப்தி அடையாமல், நூலிழை வித்தியாசத்தில் முதல் பரிசை இழந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறார். ஆசைப்பட்டு வாங்கிய துணியில் இருந்து காதலித்து கட்டிக்கொண்ட கணவன், மனைவி வரையிலும் யாரும் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைவதில்லை.
என்ன இருக்கிறதோ அதில் மகிழ்ச்சி இருக்கிறது. இல்லாதவற்றில் மகிழ்ச்சியைத் தேடினால் ஏமாற்றமே கிடைக்கும். ஒரு கட்டத்தில் ஆனால் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக எடுத்துக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எத்தனை பெரிய சங்கடம் நேரும்போதும், மாபெரும் ஆனந்தமான தருணங்களிலும், ‘இந்த நிலை மாறிவிடும்’ என்று மனதார நம்புங்கள். வருத்தம் தொட்டும் பார்க்காது.
