ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : குழந்தைகளும், முதியவர்களும் ஒன்று என்கிறார்களே… அது உண்மையா.. எப்படி?
- பி.பாலமுருகன், குடியாத்தம்.
ஞானகுரு :
முதியவருக்கு உடல்ரீதியில், மனரீதியில், சமூகரீதியில் ஏராளமான பிரச்னைகள் உருவாகின்றன. நினைவுகள் மறந்துபோகிறது. பார்க்கும் திறன், கேட்கும் திறன், பேசும் திறன் குறைகிறது. எப்போதும், எதற்கும் பிறரை சார்ந்து இருக்கும் நிலைமை உருவாகிறது. அதனால்தான் முதியவரும் குழந்தையும் ஒன்று என்கிறார்கள்.
ஆனால், எத்தனை தொந்தரவு கொடுத்தாலும் தன் பிள்ளையை யாரும் அனாதை ஆசிரமங்களில் விடுவதில்லை. ஆனால், பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளுகிறார்கள். கொடூரமாகப் பேசி தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள். வெளியூருக்கு அழைத்துசென்று அனாதையாக விட்டு வருகிறார்கள்.
முன்பு, ‘தலைக்கோதல்’ என்ற சடங்கை முதியோருக்குச் செய்தார்கள். முதியவர் தலையில் நிறைய நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி, வயிறு நிறைய இளநீர் கொடுத்து இரண்டே நாட்களில் ஜன்னி கண்டு இறக்கவைக்கும் சம்பவம் இப்போது குறைந்துவிட்டது என்றாலும், அந்த எண்ணம் குறையவில்லை.
……………………….
கேள்வி : நல்ல காதல் என்பது எப்படி இருக்கவேண்டும்?
- ஏ.ஜானகி, சாத்தூர்
ஞானகுரு :
ஆரோக்கியமான உடல் நலம், மன வளம், பொருளாதார சுதந்திரம் பெற்றவர் மட்டுமே காதல் செய்யத் தகுதியானவர். காதல் என்பது ஒருவரையொருவர் மதிப்பதில் தொடங்கவேண்டும். தன்னைப் பற்றி பேசும்போது பொய்யும், வீண் புகழ்ச்சியும் கூடாது. ஆயிரம் பொய் சொல்லி காதலிப்பவர் நிச்சயம் அவஸ்தைப்படுவார்கள்.
அடுத்தவரின் உணர்வுகள், திறமைகள், விருப்புவெறுப்புகளை புரிந்துகொண்டு, ஆதரிப்பது காதல். தன்னால் அடுத்தவரை அன்பாகவும், ஆதரவாகவும் பார்த்துக்கொள்ள முடியுமா என்று யோசிப்பது காதல். தன்னைவிட வேறு ஒருவரிடம் அடுத்தவர் இன்னமும் சிறப்பாக வாழ்வார் என்று தெரிந்தால் விட்டுக்கொடுப்பது காதல்.
அழகான பெண், வசதியான பையன் என்று குறிவைத்து, திட்டம்போட்டு பழகுவதன் பேர் காதல் அல்ல, கணக்கு. இது, விரைவில் தோற்றுப்போகும்.
