பெண் விழிப்புணர்வு கடிதம்
சமூகவலைதளங்களில் அவ்வப்போது சில முத்துக்கள் தென்படும். அப்படியொன்று இந்த கடிதம். ஒரு பெண்ணின் மனக்குமுறல். ஒரு சில ஆண்களுக்கு அதிர்ச்சி வைத்தியமே தேவைப்படுகிறது. இதோ அந்த கடிதம். படித்துப் பாருங்கள்.
கல்யாணம் முடிந்தது. அவர் சொன்னார் என்பதற்காக ஒவ்வொன்றாக விட்டுக் கொடுத்தேன். வேலை வேண்டாம் என்றார் விட்டுவிட்டேன். போன் நம்பரை மாற்றச் சொன்னார் மாற்றிவிட்டேன். இன்ஸ்டாகிராம் வேண்டாமென்றார் முடக்கிவிட்டேன். ஆண் நண்பர்கள் நட்பு கூடாது என்றார் விலகிவிட்டேன்.
பெண்ணுக்குத் தடை
உடையிலும் அவர் ரசனையே என் விருப்பமானது. லெக்கின்ஸ் போட்டால் கால் தெரியும் என்றார், சுடிதாருக்கு மாறினேன். ஹீல்ஸ் வேண்டாமென்றார், தூக்கி எறிந்தேன். ஜாக்கெட்டில் டிசைன் வேண்டாமென்றார், கழுத்து வரை மூடிக்கொண்டேன். மேக்கப் வேண்டாம் என்றார் போடவில்லை. உதட்டுச் சாயம் கூட பூசவில்லை. வீட்டில் இருக்கும் பாலாடை, தயிரே போதும் என்று இருந்துவிட்டேன்.
கொஞ்ச நாள் சந்தோஷமாக இருக்கலாம். அப்புறம் குழந்தை பற்றி யோசிக்கலாம்’ என்றார். அதுவரை மாதாந்திர மாத்திரைகளைத் தவறாமல் விழுங்கினேன். ஏழு நாளும் அவருக்குப் பிடித்ததைச் சமைத்தேன். ஆனால் அவர்? வார இறுதியில் நண்பர்களுடன் சுற்றிவிட்டு நள்ளிரவுதான் வருவார்.
ரகசியக் காதலி
ஒருநாள் இரவு ஒரு மணிக்கு, ஒரு பெண்ணின் பெயரில் இருந்து ‘Reached?’ என்று மெசேஜ் வந்தது. மறுநாள் கேட்டேன். ‘யார் அது?’ என்று. ‘என் பழைய காதலி’ என்றார்.
அவளை விட்டுவிடுங்கள்’ என்றேன். ‘முடியாது’ என்றார்.
‘முயற்சி செய்தால் முடியும், நான் துணையாக இருக்கிறேன்’ என்றேன்.
‘நீயும் அவளும் ஒன்றா?’ என்று கேட்டு என் கன்னத்தில் அறைந்தார்.
‘உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டேன், எனக்காக இதை ஒன்றை மட்டும் விடுங்கள்’ என்று அழுதேன்.
‘முடியாது, அது உண்மைக் காதல்’ என்றார் பிடிவாதமாக.
ஆத்திரத்தில் நானும் சொன்னேன், ‘எனக்கும் கூட ஒரு உண்மைக் காதலன் இப்போதும் இருக்கிறான்’ என்று சொன்னேன்.
உண்மையை மறைத்ததற்காக ஒரு வாரம் அடி விழுந்தது. தாங்கிக்கொண்டேன். ஆனால் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. உடனே நான் என்னை மாற்றிக் கொண்டேன்… மீண்டும் இன்ஸ்டாகிராம் ஆரம்பித்தேன். லிப்ஸ்டிக் போட்டேன். எனக்குப் பிடித்த உடைகளை உடுத்தினேன். தன் வீட்டுச் சொத்து கைமீறிப் போய்விடுமோ என்ற பயத்தில், லீவு நாட்களில்கூட அவர் இப்போது வெளியே போவதில்லை.
கள்ளக் காதலன்
எப்படியாவது என் கள்ளக் காதலனை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்று என்னைச் சுற்றியே வட்டமடிக்கிறார். பாவம், எந்த ஜென்மத்திலும் அவரால் அவனைக் கண்டுபிடிக்க முடியாது. காரணம், அப்படி ஒருவன் என் வாழ்வில் இல்லவே இல்லை! ஆனால், அந்த இல்லாத ஒருவன் இப்போது என் வாழ்வின் மிக முக்கியமான ஆளாகிவிட்டான்.
நிஜத்தில் இருந்த அந்தப் பழைய காதலியை விட, கற்பனையில் இருக்கும் என் காதலன் தான் என் வாழ்க்கையை மீட்டெடுத்திருக்கிறான். அவனுக்கு முகவரி இல்லை, உயிர் இல்லை, ஆனால் என் குடும்பத்தைக் காப்பாற்றும் மந்திர சக்தியாக மட்டும் இருக்கிறது. இல்லாத ஒருவனைத் தேடித் தேடியே அவர் என்னை கவனிக்கத் தொடங்கிவிட்டார்; என் மீது அக்கறை காட்டத் தொடங்கிவிட்டார்; அவர் அறியாமலேயே என்னோடு நெருக்கமாகிவிட்டார்.
என் கணவர் தேடும் ‘காதலன்’ மிகத் திறமையானவன்; அவனைத் தேடித் தேடியே என் கணவர் என் கூடவே சுற்றுகிறார். என் போனில் மெசேஜ் வந்தால் ‘யாரது?’ என்று பதறுகிறார், லேப்டாப்பில் பாஸ்வேர்டு இருந்தால் ‘யாரிடம் பேசுகிறாய்?’ என்று துடிக்கிறார். எந்த பாவமும் அறியாத ‘என் காதலன்’ தான் இப்போது என் கணவரை என்னிடம் கட்டிப் போட்டிருக்கிறான். உண்மையான அன்புக்கு போராடிய என்னை, ‘என் காதலன்’ நிம்மதியாக வாழ வைத்திருக்கிறான். என் கற்பனை வாழ்க்கையை நிஜமாக்கிய என் கற்பனை காதலனே… அவருடைய அன்பு எனக்கு மட்டுமே என்று என் மனதுக்கு தோணும் வரை உன்னை விடமாட்டேன்.
