இந்த நிமிடத்தில் வாழுங்கள் என்றால் என்ன அர்த்தம்..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : இந்த நிமிடத்தை ரசித்து வாழ்வது எப்படி?

  • யு.மீனா, முத்துராமன்பட்டி.

ஞானகுரு :

ஒரு நதியில் இரண்டு முறை கால் நனைக்க முடியாது என்பார்கள். இரண்டாவது முறை கால் நனைக்கும்போது, முதல் முறை உன்னை நனைத்த நீர் காணாமல் போயிருக்கும். இதுதான் இந்த நிமிடத்தில் வாழ விரும்புபவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய தத்துவம்.

ஒரு சினிமாவுக்குச் செல்கிறீர்கள் என்றால், முன்கூட்டியே எந்த விமர்சனமும் படிக்காமல், யாரிடமும் அபிப்ராயம் கேட்காமல் பார்க்க வேண்டும். அப்போதுதான் அந்த சினிமாவை ஒரு புதிய அனுபவத்துடன் பார்க்க முடியும். அந்த படம் பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் உங்கள் விருப்பமாக இருக்க வேண்டும். இதுதான் ரசனை. இப்படித்தான் ரசிக்க வேண்டும்.

உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது, கடந்தகால அனுபவங்களை முற்றிலும் மறந்துவிடுங்கள். எந்த ஆசைகளையும் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். புதிய அனுபவத்தை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்.

சுற்றுலா, புதிய கல்லூரி, புதிய வேலையிலும் பழைய அனுபவங்களை ஒப்பிட்டால் ஏமாற்றமே மிஞ்சும். அதனால் தினமும் புதிதாய் பிறப்பது போல் எழுந்துகொள்ளுங்கள். அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகளை புத்தம்புது நபர்களாகப் பாருங்கள். கடந்த கால கசப்புகளை மறந்துவிட்டு புதிதாகப் பிறந்ததாக எண்ணிக்கொள்ளுங்கள். நிகழ்காலத்தில் வாழ முடியும்.

Leave a Comment