ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : பிள்ளைகளின் ஞாபகசக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்..?
- டி.பவினா துரைராஜ், முத்தால் நகர்.
ஞானகுரு :
கம்ப்யூட்டர் பாணியில் சொல்வது என்றால் ஒவ்வொரு நபரின் மனதிலும் ஆயிரம் ஜிபி அளவுக்குத் தகவல்கள் சேகரமாகி இருக்கிறது. அந்த தகவல்கள் சரியான ஆர்டரில் சேமித்து வைக்கப்பட்டிருந்தால், அவற்றை தேடி எடுப்பது மிகவும் சுலபமாக இருக்கும். எந்த தகவலும் ஒருபோதும் அழிவதே இல்லை என்பது மனித உடலின் மகத்தான சக்தி. ஆழ்ந்து யோசித்துக்கொண்டே இருந்தால், எத்தகைய நினைவுகளையும் மீட்டுவிட முடியும்.
முதலில் பாடங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு மிகவும் முக்கியம். ஞாபகசக்தி குறைவு என்று நம்புபவர்களால் ஒருபோதும் அதிக மதிப்பெண் பெற முடியாது. எனவே, ஞாபக சக்தி நிறைய இருக்கிறது என்பதை முழுமையாக நம்ப வேண்டும். டைம்டேபிள் போட்டு திட்டமிட்டுப் படிக்க வேண்டும்,
ஆழ்ந்து தெளிவாகப் படிப்பது, குறிப்புகள் எடுத்துவைப்பது மட்டும் போதாது. படிப்பதை எழுதிப் பார்ப்பதே மிக அதிக பலன் தருகிறது. படிப்பதை மூளையில் பதிய வைப்பதைவிட, அதை வெளியே கொண்டுவருவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். படித்ததை எழுதிப்பார்த்த பிறகே அடுத்த பாடத்தை படிக்கத் தொடங்கவேண்டும்.
இந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் வெறுமனே வெண்டைக்காய் சாப்பிடுவதும் விடிய விடியப் படிப்பதும் நீடித்த ஞாபகசக்திக்கு பயன் தராது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
……………………..
கேள்வி : தமிழகம் முழுக்க ஆங்கிலப் பள்ளிகள் அதிகரித்துவிட்டன. தமிழ் மொழி அழிவை நோக்கி நகர்கிறதா..?
- என்.மாரியப்பன், காந்திநகர்.
ஞானகுரு :
இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே அழியக்கூடியது. பூமியே அழிந்துபோகும் என்றால் மனிதரால் உருவாக்கப்பட்ட மொழியும் ஒரு நாள் அழிந்துதான் போகும். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி என்று பெருமைப்படுத்தும் தமிழ் மொழியும் ஒரு நாள் அழிந்துபோகும்.
இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகம் முழுவதும் ஒரே மொழி என்ற சிந்தனை நிச்சயம் உருவாகிவிடும். எல்லா நாட்டினருக்கும் எளிதான ஒரு மொழி, பொது மொழியாகப் பேசப்படும். தமிழ் மொழிக்கு அப்படி ஒரு வாய்ப்பு இல்லை என்பது கசப்பான உண்மை. எனவே, மெல்லத் தமிழ் இனி சாகும். இதனால் யாருக்கும் எந்த இழப்பும் கிடையாது.
தமிழ் மொழி இல்லாத காலங்களிலும் மனிதர்கள் வாழ்ந்தார்கள், தமிழ் இல்லாமலும் வாழ்வார்கள்.
