ஸ்டீபன் ஹாக்கிங் உதாரணம்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இல்லாத பணமா… எல்லா கோடீஸ்வரர்களும் செத்துத்தானே போகிறார்கள், அதனால் பணம் வாழ்க்கையில் முக்கியமே இல்லை என்று ஒருசிலர் தத்துவம் பேசுவார்கள். அதை ஒருபோதும் நம்பிவிடாதீர்கள்.
ஏனென்றால், அரசு மருத்துவமனைகளில், தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் நிகழ்வுகளை கொஞ்ச நேரம் பார்த்தாலே, மனிதருக்குப் பணம் எத்தனை முக்கியம் என்பது புரியும்.
உயிர் காக்கும் மருந்து
அறுவை சிகிச்சை செய்தால் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில், பணம் இல்லாமல் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் எத்தனையோ பேர் தினமும் உயிர் இழக்கிறார்கள். சகல வசதிகளும் பொருந்திய மருத்துவமனைக்குப் போனால் பிழைக்கலாம், ஆனால் அங்கு செல்வதற்குப் பணம் இல்லாமல் எத்தனையோ பேர் உயிர் இழக்கிறார்கள்.
சத்துக்கள் நிறைந்த உணவு சாப்பிட முடியாமல் நிறைய பேர் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் இழக்கிறார்கள். மருந்துகள் வாங்க முடியாமல், ஓய்வு எடுக்க முடியாமல், மருத்துவமனைக்குச் செல்வதற்கு பணம் இல்லாமல் எத்தனையோ பேர் உயிர் இழக்கிறார்கள்.
பணத்தால் நிரந்தரமாக யாருடைய உயிரையும் காப்பாற்ற முடியாது என்பது உண்மை. அதேநேரம், ஆயுளை நீட்டிக்க மருத்துவத்தால் முடியும் என்பதும் நிஜமான உண்மை. ஏனென்றால் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பணம் முக்கியப் பங்காற்றுகிறது.
வசதியான வாழ்வு
ஒரு மனிதன் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு உணவு, மருத்துவ வசதி, பாதுகாப்பான சூழல், மன அமைதி போன்றவை அவசியம். இவை எல்லாமே நேரடியாக அல்லது மறைமுகமாக பணத்துடன் தொடர்புடையவை. பணம் உள்ளவர்களுக்கு சிறந்த மருத்துவர்களை அணுகும் வாய்ப்பு, மேம்பட்ட சிகிச்சைகள், தொடர்ச்சியான பராமரிப்பு ஆகியவை எளிதாக கிடைக்கிறது. இதனால் அவர்கள் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தி, வாழ்நாளை நீட்டிக்க முடிகிறது.
இதற்கு எல்லோருக்கும் தெரிந்த உதாரணம், உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். அவருக்கு ஏற்பட்ட கடுமையான நரம்பியல் நோயான ஏ.எல்.எஸ். காரணமாக, அவர் மிகக் குறுகிய காலமே உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கணித்தனர்.
ஸ்டீபன் ஹாக்கிங் மந்திரம்
ஏனென்றால், ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு Amyotrophic Lateral Sclerosis (ALS) எனப்படும் ஒரு அரிதான நரம்பியல் நோய் இருந்தது. இந்த நோய் மெதுவாக தசைகளை கட்டுப்படுத்தும், நரம்புகளை சேதப்படுத்தும். இதனால் உடல் இயக்கங்களான நடப்பது, பேசுவது தொடங்கி சுவாசம் வரையிலும் படிப்படியாக பாதிக்கப்படும்.

ஹாக்கிங்கிற்கு இந்த நோய் சுமார் 21 வயதில் கண்டறியப்பட்டது. இன்றைய காலகட்டத்திலும் ஏ.எல்.எஸ். நோயை முழுமையாக குணமாக்கும் சிகிச்சை இல்லை. எனவே, அவர் அதிகபட்சம் 25 வயது வரை வாழ்வார் என்று கூறினார்கள்.
ஆனால், அவருக்குக் கிடைத்த மேம்பட்ட மருத்துவப் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகள்தான் ஹாக்கிங்கை நீண்ட காலம் வாழவைத்தது. ஹாக்கிங் பேச முடியாத நிலையில், கணினி மற்றும் குரல் உருவாக்கும் கருவி மூலம் மற்றவர்களைத் தொடர்பு கொண்டார். தொடர் மருத்துவக் கவனிப்பு காரணமாக சராசரி மனிதர்களை விட அதிகமாக 76 வயது வரையிலும் வாழ்ந்தார்.
சில ஆண்டுகள் மட்டுமே வாழ்வார் என்று கூறப்பட்ட ஹாக்கிங் அதற்கடுத்த 50 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தது மிகவும் அபூர்வமானது. இதற்கு மருத்துவ உதவி, மன வலிமை, வாழ்க்கை நோக்கம் போன்றவை எல்லாம் முக்கிய காரணம் என்றாலும், இவற்றைப் பெறுவதற்கான பணம் அவரிடம் இருந்ததுதான், முக்கியமான காரணம்.
பணம் உள்ளவர்கள் தங்கள் உடல் நிலையைப் பற்றி அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். எந்த பிரச்சினை வந்தாலும் அதை பணத்தால் சமாளிக்க முடியும் என்ற மனநிலை அவர்களுக்குக் கிடைக்கிறது. இந்த நம்பிக்கை, மன அழுத்தத்தை குறைத்து, உடல் ஆரோக்கியத்தை நேர்மறையாக மாற்றுகிறது.
பணம் இல்லாத மனிதர்களிடம் பயம், பதட்டம், மன அழுத்தம் அதிகரிப்பதால் உடல் நலமும் குடும்ப ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. பணம் நேரடியாக வாழ்க்கையை நீட்டிக்காது என்றாலும், அது மனிதர் கூடுதல் நாட்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. சிறந்த சிகிச்சை, பாதுகாப்பான வாழ்க்கை, மன அமைதி ஆகியவை மூலம், பணம் மனிதனின் ஆயுளை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சராசரி ஆயுள்
இதற்கு உதாரணமாக நாடுகளின் சராசரி ஆயுளை உதாரணமாகக் காட்ட முடியும். அதாவது பணக்கார நாடுகளில் மனிதர்கள் அதிக ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஏழை நாடுகளில் குறைவான ஆண்டுகளே வாழ்கிறார்கள்.
மனிதர்களின் வாழ்நாள் சராசரி அமெரிக்காவில் 79 ஆண்டுகள், இங்கிலாந்தில் 81 ஆண்டுகள், ஜப்பானில் 85 ஆண்டுகள், சீனாவில் 78 ஆண்டுகள், ஜெர்மனியில் 81 ஆண்டுகள் என ஆயுட்காலம் இருக்கிறது.
முன்னேறிக்கொண்டிருக்கும் நம் இந்தியாவில் மனிதர்களின் சராசரி ஆயுள் 70 ஆண்டுகள். அதேநேரம், ஏழ்மையில் தவிக்கும் நைஜீரியாவில் 55 ஆண்டுகள், சூட் நாட்டில் 54 ஆண்டுகள் மட்டும்தான். எனவே, பணத்துக்கும் ஆரோக்கியத்திற்கும் வாழ்நாளுக்கும் முக்கிய தொடர்புகள் உள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
அதனால், சம்பாதிக்கும்போதே எதிர்கால நிதி, அவசர நிதி, மருத்துவ நிதி என பணத்தை சேமித்துக்கொள்ளுங்கள். அந்த பணம் எவ்வளவு என்பது இருக்கவேண்டும் என்பது முக்கியமே இல்லை, எல்லா நிதியும் ஓரளவு இருந்தாலே போதும். அந்த பணம் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு நம்பிக்கை கொடுக்கும். அதுவே, மகிழ்ச்சி.
