கோக்குமாக்கு காதல் இனிக்குதய்யா…

சீரிஸ் எனும் வாழ்க்கை – The Wonderfools

லூசுப் பொண்ணு, மக்கு நண்பன், உதவாக்கரை புருஷன் ஆகிய மூன்று பேருக்கும் சூப்பர் பவர் கிடைத்துவிட்டால் என்னாகும் என்ற வித்தியாசமான கதைக்களனுடன் வந்திருக்கும் தி வொண்டர்ஃபூல்ஸ் ரொம்பவே ஜாலி கலாட்டா.

கொரியன் கே டிராமஸ் வரிசையில் தி வொண்டர்ஃபூல்ஸ் சீரிஸ் சயன்ஸ்ஃபிக்‌ஷன் கலந்த காமெடி காதல் கொண்டாட்டம். 2000ம் ஆண்டு தொடங்கும்போது இந்த உலகம் அழிந்துவிடும் என்ற கிறிஸ்தவ மத நம்பிக்கையின் அடிப்படையில், 1999ம் ஆண்டு இந்த கதை நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது.

கோக்குமாக்கு நாயகி

நாயகி ஸென்னிக்கு இதயம் பலவீனமாக உள்ளது. எந்த நேரமும் செத்துப்போகலாம் என்ற வருத்தம் அடிமனதில் இருப்பதால், எல்லோருடனும் வம்பிழுத்து சண்டைக்குப் போகிறாள். அதனால், ஊரே அவளை கோக்குமாக்குக்காரி என்று கிண்டல் செய்கிறது.

ஸென்னியின் பாட்டி நடத்தும் ஹோட்டலில் வேலை செய்யும் நண்பன் ரோபின் மக்கு மனிதன். வெங்காயம் உரிப்பது தவிரத்து எந்த வேலையும் உருப்படியாக செய்யத் தெரியாது, எல்லோரையும் நம்பி ஏமாறுபவன். அதனால் முட்டாள் என்று எல்லோரிடமும் திட்டு வாங்குகிறான்.

அடிக்கடி சுகாதாரத்துறைக்கு பெட்டிஷன் போட்டுக்கொண்டிருக்கும் ஹூன் ஒரு வெத்துவேட்டு. மனைவி தொடங்கி எல்லோரும் அவனை உதவாக்கரை என்றே விரட்டுகிறார்கள். நட்பு வட்டத்தில் இருக்கும் இந்த மூன்று பேரும் எந்த விஷயத்தைத் தொட்டாலும், அது உருப்படாமல் போகிறது.

விபரீத ஆசை

மரணம் வருவதற்குள் உலகத்தை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறாள் ஸென்னி. ஆனால், பாசமும் கண்டிப்பும் நிறைந்த பாட்டி உடல்நிலையைக் காரணம் காட்டி, தடை போடுகிறாள். பாட்டியிடம் இருந்து பணம் வாங்குவதற்கு ஸென்னி ஒரு கடத்தல் திட்டம் போடுகிறாள். அதாவது, முகமூடி கடத்தல்காரர்களாக இரண்டு நண்பர்களை நடிக்க வைக்கிறாள். பணம் கொடுக்கவில்லை என்றால் தன்னை இருவரும் கொலை செய்துவிடுவார்கள் என்று அழுவதை வீடியோ எடுக்கிறார்கள். . 

முகமூடி அணிந்துகொண்டு நண்பர்கள் செய்யும் களேபரத்தில், ஸென்னி ஹார்ட் அட்டாக் வந்து நிஜமாகவே செத்துப் போகிறாள். இந்த அதிர்ச்சியை நண்பர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேநேரம் போலீஸுக்குப் பயப்படுகிறார்கள். அதனால், ஸென்னி உடம்பை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் சாக்கடைக்குள் தூக்கிப் போட்டுவிட்டால், போலீஸிடம் மாட்டாமல் தப்பித்துவிடலாம் என்று தூக்கிச் செல்கிறார்கள்.

அதிசய சக்தி

அந்த நேரம், அந்த சாக்கடையில் ஏதோ மர்மம் இருப்பதை கண்டுபிடிப்பதற்காக சிவில் சர்வண்ட் ஆக இருக்கும் கதாநாயகன் லீவூன் அங்கு வருகிறான். ஸென்னி உடலை தூக்கிப் போடுவதைப் பார்த்து, அவர்களை கையும் களவுமாகப் பிடிக்கிறான். அந்த போராட்டத்தில் ஸென்னியின் உடல் சாக்கடையில் விழுகிறது. தப்பிக்க நினைத்து இரண்டு நண்பர்களும் அந்த சாக்கடைக்குள் விழுகிறார்கள்.

ஆனால், சற்று நேரத்தில் அங்கு ஒரு அதிசயம் நடக்கிறது. செத்துப்போன ஸென்னி உயிருடன் எழுந்து வருகிறாள். அத்தனை பேரும் அலறுகிறார்கள். அதோடு, அந்த சாக்கடையில் விழுந்த மூன்று பேருக்கும் சூப்பர் பவர் கிடைக்கிறது.

ஸென்னிக்கு காற்றில் கரைந்து அவள் விரும்பும் இடத்துக்குப் போக முடியும் சக்தி கிடைக்கிறது. மக்கு நண்பனுக்கு கோபப்பட்டால் ஹல்க் போன்று உடலில் அதீத சக்தி வருகிறது. உதவாக்கரைக்கு கையும் காலும் ஃபெவிகால் போன்று ஒட்டிக்கொள்ளும் சக்தி கிடைக்கிறது. இந்த சக்தி எப்போது வரும், எவ்வளவு நேரம் இருக்கும், எப்போதும் போகும் என்றெல்லாம் தெரியாமல், நேரம் கெட்ட நேரத்தில் சக்தியைப் பயன்படுத்தி சிக்கலில் மாட்டிக்கொண்டு சிரிக்கவைக்கிறார்கள்.  

கொடூர வில்லன்

இதில் மெயின் கதை கொடூரமானது. அந்த ஊரின் கிறிஸ்தவ தேவாலயத்தில் ரகசிய மனித ஆராய்ச்சி நடக்கிறது. மரணமில்லாத சூப்பர் பவர் மனிதர்களை உருவாக்குவதற்கு டாக்டர் ஆய்வு செய்துவருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் உருவாக்கிய சூப்பர் பவர் சிறுவர்களில் ஒருவனே நாயகன். இன்னும் சில சூப்பர் பவர் மனிதர்களும் அவரிடம் இருக்கிறார்கள். அவர்களை வைத்து மரணமில்லாத மனிதருக்கு ஆய்வு நடத்துகிறார். இதனால் ஊரில் நிறைய மனிதர்கள் அவ்வப்போது காணாமல் போகிறார்கள்.

அசத்தல் காதல்

ஒரு குழப்பமான நேரத்தில் நாயகன் லீவூனுக்கு சூப்பர் பவர் இருப்பதை அறிந்துகொள்கிறாள் ஸென்னி. அவன் சூப்பர் பவரை திறமையாக கட்டுப்படுத்தி எல்லா வேலைகளும் செய்வதைப் பார்க்கிறாள். எனவே, அவனிடம் இருந்து சூப்பர் பவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று கற்றுக்கொள்ள விரும்புகிறாள். ஆனால், வேறு  ஒரு திட்டத்துடன் வாழ்ந்துவரும் லீவூன் முட்டாள் நண்பர்கள் மூவரையும் பார்த்து மிரண்டு ஓடுகிறான்.

‘’வாத்தியாரே, உனக்கு எங்களைப் பிடிக்கலைன்னு நல்லா தெரியுது, ஆனா, எங்களுக்கு உன்னைப் பிடிச்சிருக்கே…’’ என்றபடி நாயகன் எங்கு போனாலும் விடாமல் விரட்டுகிறாள் ஸென்னி.  

வில்லன் கும்பல் தேடிக்கொண்டிருக்கும் மரணமில்லாத இதயம் நாயகியிடம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்கிறான் நாயகன் லீவூன். யாரும் எதிர்பாராத தருணத்தில் ஸென்னியைப் பிடித்து வில்லன் கும்பலிடம் ஒப்படைத்துவிடுகிறான். அவளுடைய இதயத்தை எடுத்து மரணமில்லாத வாழ்வுக்கு ஆய்வு செய்வதற்குத் தயாராகிறார் டாக்டர். அதோடு, 2000ம் ஆண்டு பிறக்கும் டிசம்பர் 31ம் தேதி பேரழிவு ஏற்படுத்தி, ஊரில் இருக்கும் அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் கொல்வதற்குத் திட்டமிடுகிறார்.

எதிரிகளிடம் ஸென்னி சிக்கியதை அறிந்து மக்கு நண்பன் துடிக்கிறான். எதிரிகளிடம் அதீத சக்தி, அதிக பணம், செல்வாக்கு இருந்தாலும் தைரியமாக காப்பாற்ற முன்வருகிறான். ஸென்னியின் பாட்டியும் அவளுடைய டீமும் ஸென்னியைக் காப்பாற்றுவதற்குத் திட்டமிடுகிறார்கள்.

இவர்களுக்கு ஹீரோ உதவி செய்தானா..? வில்லன் கும்பலிடம் இருந்து ஸென்னி எப்படி தப்புகிறாள்..? ஸென்னியும் அவளது நண்பர்களும் சூப்பர் பவரை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டார்களா? வில்லன் திட்டம் எந்த அளவுக்கு நிறைவேறியது? என்பதை எல்லாம் நெட்ஃப்ளிக்ஸில் பாருங்கள்.

தன்னை வில்லனிடம் பிடித்துக் கொடுத்தது நாயகன் என்று தெரிந்த பிறகும், ‘ஏன் வாத்தியாரே என்னை பிடிச்சுக் கொடுத்தே..’ என்று காதலுடன் அப்பாவியாகக் கேட்டு மனதைக் கொள்ளையடிக்கிறாள் ஸென்னி. தன் நண்பர்களைக் காப்பாற்றும் முயற்சியில் தனது உயிருக்கு ஆபத்து இருந்தாலும், கொஞ்சமும் கவலைப்படாமல் அதகளம் செய்கிறாள்.

இதுதான் நட்பு

சக்தி கிடைத்திருக்கும் தைரியத்தில்தான் இப்படி செய்கிறாயா என்று லீவூன் கேட்கிறான். அதற்கு அவள், ‘என்னுடைய இதயம் முன்பு போன்று பழுதுபட்டதாக இருந்தாலும் இப்படித்தான் காப்பாற்றுவேன்’ என்று நட்புக்கு புதிய இலக்கணம் காட்டுகிறாள் ஸென்னி. அரிய சக்தி கிடைத்தவுடன், இதன் மூலம் என்னவெல்லாம் சாதனை செய்யலாம், எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சிந்திக்காமல், இந்த சக்தி தேவையில்ல்லாத குப்பை என்று மூவரும் நினைப்பதுதான் புத்தம்புதிய திரைக்கதை.

மனம் கவலையில் இருக்கும்போது இந்த சீரிஸைப் பாருங்கள், மூன்று பேரும் அடிக்கும் லூட்டியில் ரொம்பவே ரிலாக்ஸ் ஆக உணர்வீர்கள்.

ஸென்னியாக வரும் பார்க் யுன் பின் தேவதையாக வந்து மயக்குகிறார், காதலுக்கும் நட்புக்கும் இடையில் புகுந்து விளையாடுகிறாள். இவளது சிரிப்பையும் தைரியத்தையும் அத்தனை எளிதில் யாராலும் மறக்க முடியாது என்பதுதான், இந்த சீரிஸின் சக்சஸ்.

Leave a Comment