ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : மனிதப் பிறவி அதிர்ஷ்டமா… பாவமா?
- எஸ்.ராஜா, சிவகாசி.
ஞானகுரு :
இந்தப் பூவுலகில் வாழும் உயிர்களில் மனிதர்கள் மட்டுமே அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால்தன் வயிற்றுக்கான உணவை தானே தேடவேண்டிய அவசியம் இல்லை. பெற்ற பாவத்துக்கு அம்மா, கட்டிய கடமைக்காக கணவன் அல்லது மனைவி பொறுப்பேற்கிறார்கள். அரசுகளும் உணவு, வீடு தருகிறது. இலவச கல்வி, இலவச மருத்துவம் தருகிறது. இத்தனை வசதிகள் வாய்ப்புகள் வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லை.
மேலும் தன் நன்மைக்காக உலகில் உள்ள அனைத்து உயிர்களையும், இயற்கை வளங்களையும் மனிதன் தன் விருப்பத்திற்கு அழிக்கிறான். இத்தனை சொகுசுப் பேர்வழியான மனிதர்கள் தங்களுடைய பிறப்பு அதிர்ஷ்டமா அல்லது பாவமா என்று தெரியாமல் தடுமாறுவதுதான் பரிதாபம்.
………………………
கேள்வி : அவசியச் செலவுகளைக் கண்டுகொள்ளாமல், ஆடம்பர செலவுகளில் கவனம் செலுத்துபவர்களை என்னவென்பது?
– டி.மாணிக்கம், லால்குடி.
ஞானகுரு :
அவசியம், ஆடம்பரம் என்று ஒன்றை தீர்மானிப்பது அவரவர் உரிமை. ஒரு காலத்தில் மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், தொலைக்காட்சி போன்ற அனைத்துமே ஆடம்பரச் செலவாக இருந்தது. ஆனால் இன்று ஏசி, கார் போன்றவையும் அத்தியாவசிய பட்டியலுக்குள் வருகிறது. அதனால் அடுத்தவர்களுக்கு எது அவசியம், எது ஆடம்பரம் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டாம்.
