வாய்ப்புகளில் சிறிது, பெரிது என எதுவுமில்லை
எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் மிகப்பெரும் சக்சஸ் அடைந்திருப்பேன் என்று பலரும் கூறுவதுண்டு.
உண்மை என்னவென்றால், எல்லோருக்கும் வாய்ப்புகள் கண்ணுக்கு எதிரில் இருக்கவே செய்கின்றன. அவற்றை பலர் சரியாக அடையாளம் கண்டுகொள்வதில்லை. தெரிந்தாலும் சிலர் மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொள்வது இல்லை.
குறிப்பாக, சின்னஞ்சிறிய வாய்ப்புகளை மதிக்காமல் அலட்சியம் செய்கிறார்கள். உண்மையில் வாய்ப்புகளில் சிறிது, பெரிது என எதுவும் இல்லை. கிடைக்கும் வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்துபவரே, வெற்றியாளராக மிளிர்கிறார்.
நகைச்சுவை நடிகர் நாகேஷ்க்குக் கிடைத்த சின்ன வாய்ப்புதான், அவரது சினிமா வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
நாகேஷ் ஒரு டயலாக்
நடிப்பதற்கு ஆசைப்பட்டு சென்னைக்கு ஓடிவந்த நாகேஷ் ஒரு நாடக கம்பெனியில் கெஞ்சிக் கூத்தாடி வேலைக்குச் சேர்ந்தார். நல்ல கேரக்டர் வாய்ப்புக்காக காத்திருந்தார். அப்படி எதுவும் உடனடியாக கிடைப்பதாகத் தெரியவில்லை. ஒரு நாள், நாடகத்தில் ஒரே ஒரு காட்சியில் வரும் வயிற்று வலிக்காரன் கேரக்டருக்கு ஆள் வரவில்லை. அதை செய்யலாமா என்று நாகேஷிடம் கேட்டதும், சட்டென சம்மதித்தார்.
டாக்டர் பரிசோதிக்கும்போது, ‘வயிறு வலிக்கிறது’ என்று சொல்லவேண்டியது மட்டும்தான் நாகேஷுக்கு கொடுக்கப்பட்ட டயலாக்.
ஆனால், அந்த ஒரு வரியை நாகேஷ் சொன்ன ஸ்டைலில் நாடகக் கொட்டகையில் அத்தனை பேரும் சிரித்தார்கள். அதாவது நிஜமான வயிற்று வலிக்காரன் போன்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு உடலை வளைத்து, நெளித்து நடித்ததைப் பார்த்து நாடகக் கொட்டகையே கை தட்டியது.
அன்றைய நாடகத்துக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எம்.ஜி.ஆர்., ‘ஒரே காட்சியில் வந்தாலும் எல்லோரையும் சிரிக்க வைத்துவிட்டார்’ என்று நாகேஷைப் பாராட்டினார். அதன்பிறகு நாகேஷ் இல்லாத நாடகம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
ரஜினி ஒரு காட்சி
வாய்ப்புகள் சிறியது, பெரியது என்று பாரபட்சம் பார்க்காமல், கிடைத்ததை சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது என்ற உதாரணம் நடிகர் ரஜினிகாந்துக்கும் பொருந்தும். சினிமா கல்லூரியில் படித்துவிட்டு வாய்ப்புகள் தேடிக்கொண்டு இருந்தார். இயக்குனர் பாலசந்தரின் கண்களில் பட்டார். அப்போது அவர் இயக்கிக்கொண்டிருந்த அபூர்வ ராகங்கள் படித்தில் அனைத்து கேரக்டர்களுக்கும் நடிகர்கள் தேர்வு முடிந்துவிட்டது.
சில நிமிடங்களே திரையில் வரும் ஸ்ரீவித்யாவின் கணவர் வேடத்தில் நடிக்கிறாயா என்று கேட்டதும் ரஜினி சட்டென்று ஒப்புக்கொண்டார். எந்த தயக்கமும் இல்லாமல் தன்னுடைய ஸ்டைலில் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார்.
சில நொடிகளே வரும் காட்சி என்றாலும், கதவைத் திறந்துகொண்டு உள்ளே வரும் ஸ்டைல், அவரது தனித்துவத்தைக் காட்டியது. அதன்பிறகு கோலிவுட்டின் அத்தனை கதவுகளும் அவருக்காகத் திறந்தன.
அம்பானி ஒரு வேலை
அம்பானியின் வெற்றிக் கதையும் இப்படிப்பட்ட ஒன்றுதான். ஏமனில் சிறிய பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்தார் அம்பானி. அங்கு கற்றுக்கொண்டதே அவருக்கு வணிக அறிவைக் கொடுத்தது. அந்த அனுபவத்தை வாய்ப்பாக மாற்றியே ரிலையன்ஸ் எனும் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். சிறிய வேலை கூட பெரிய கனவுக்கு அடித்தளம் ஆகலாம்.
பலருக்கும் வாய்ப்பு கிடைக்காதது பிரச்சனை அல்ல. கிடைத்த சிறிய வாய்ப்பை, இது போதாது என்று கைவிடுவதுதான் உண்மையான பிரச்சனை. எனவே, பெரிய வாய்ப்பு, நல்ல வாய்ப்பு என்று காத்திருக்க வேண்டாம். சின்ன வாய்ப்பும் பெரிய வெற்றி தரலாம். சின்ன வாய்ப்பில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், இழப்பதற்கு எதுவுமில்லை. அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும்.
நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்.
