மறுபிறவிக்கு அச்சமாக உள்ளதே..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : மனிதர்கள் மறுபிறவியைக் கண்டு அஞ்சுவதற்கு என்ன காரணம்..?

  • எல்.நர்மதா, பாண்டிச்சேரி.

ஞானகுரு :

அடுத்த பிறவியில் இளவரசன், இளவரசியாக வசதியுடன் பிறப்பார்கள். கடவுள் போன்று அதிக சக்தியுடன் பிறப்பார்கள் என்றெல்லாம் ஆருடம் சொன்னால், அத்தனை பேரும் மறுபிறவிக்கு ஆசைப்படுவார்கள்.

ஆனால் வேதங்கள், சாமியார்கள், ஜோதிடர்கள் அடுத்த பிறவி பற்றி அவநம்பிக்கை விதைக்கிறார்கள். பிறருக்குத் துன்பம் தருபவர்கள் கழுதையாகப் பிறப்பார்கள், ஏமாற்றுபவர்கள் பாம்பாகப் பிறப்பார்கள் என்றெல்லாம் நெகடிவ் சிந்தனை விதைத்து பயம் காட்டுகிறார்கள். அதனால் இந்த மனித வாழ்க்கையை விட மோசமான வாழ்வு மீண்டும் வேண்டாம் என்று அஞ்சுகிறார்கள்.

இந்த அச்சத்தை ஆன்மிகவாதிகள் பக்தியாக மாற்றி வியாபாரம் செய்கிறார்கள். முக்தி அடைவதே மனிதருக்கு முக்கியம் என்று போகாத ஊருக்கு வழி காட்டுகிறார்கள். எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது. முக்தி, மறுபிறவி எல்லாமே கற்பனை மட்டுமே. இந்த வாழ்க்கை மட்டுமே நிரந்தரம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

……………….

கேள்வி : என்னுடைய ஹோட்டலில் தீ பிடித்து ஒரே நாளில் ஏழையாகிவிட்டேன். என் தலையெழுத்து காரணமா… எப்படி மாற்றுவது..?

– என்.தனசேகரன், முத்தால்நகர்.

ஞானகுரு :

இது ஒரு விபத்து, யாருக்கும் இப்படி நிகழலாம். புயல், தீ, பூகம்பம் போன்றவை எத்தனையோ உயிர்களை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்திருக்கிறது. எத்தனையோ மனிதர்களை ஒரே நாளில் ஏழையாக்கியுள்ளது. அதேபோல் முன்னெச்சரிக்கையுடன் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தாலும், யாராவது ஒரு போதை ஆசாமியால் விபத்து நேரலாம், நிரந்தர ஊனமாகலாம். 

இதுபோன்ற தருணங்களில் தலையெழுத்தை நம்பி முடங்கிவிடாதீர்கள். பணம் இழந்ததற்கு கவலைப்படுவதை விட, உயிர் பிழைத்ததற்கு மகிழ்ச்சி அடைய வேண்டும். உயிரை விட உயர்வானது வேறு எதுவும் இல்லை. மீண்டும் பணம் சம்பாதிக்க முடியும். வசந்தம், இலையுதிர்காலம் போன்று வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். மனவலிமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

Leave a Comment