நோய்க்கு மருந்தல்ல, நோயாளிக்குத்தான் மருந்து

ஹோமியோபதி மருத்துவர் கோவிந்தராஜ்

மாற்று மருத்துவ முறையில் ஹோமியோபதி என்பது பக்க விளைவுகள் இல்லாதது. தனித்துவமிக்க ஹோமியோ மருத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஹோமியோபதி எப்படி உங்களை ஈர்த்தது?

அதன் எளிமைதான் என்னை ஈர்த்தது. முதலில் சித்த வைத்தியம் சில ஆண்டுகள் கற்றுக்கொண்டிருந்தேன். தொடர முடியவில்லை. பழ. வெள்ளைச்சாமி அவர்களிடம் ஹோமியோபதி மருத்துவம் கற்றுக்கொண்டேன். அதன் பின்னர் கல்லூரிக்குச் சென்று கற்றுக்கொண்டேன். என் அம்மாவிற்கு வந்த தொண்டைப்புற்று ஹோமியோபதி மருத்துவம் மூலம்தான் குணமானது. டாக்டர் கைலாசம் அவர்கள் தான் குணமாக்கினார். அதன் பின்னர் ஹோமியோபதியின் மேல் கூடுதலான ஈர்ப்பு வந்தது.

ஹோமியோபதி தோன்றிய வரலாறு சுருக்கமாக ?

ஹோமியோபதி மருத்துவமுறை, மருத்துவர் ஹானிமன் அவர்களால் 1796 ம் வ்ருடம் உருவாக்கப்பட்டது. இவர் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர். அக்கால கட்டத்தின் மருத்துவ முறையிலிருந்த போதாமை, மற்றும் சிகிச்சை முறையிலிருந்த கடுமைகளைக் கண்டு அதைத் தவிர்க்கும் பொருட்டு ஹோமியோபதி மருத்துவ முறையை உருவாக்கினார். புதிய முயற்சிகளை எதிர்ப்பதும், விமர்சனம் செய்வதும் வரலாறு முழுவதும் நடப்பது தான். அது ஹோமியோபதி முறையிலும் நடக்கிறது.

ஹானிமனுக்குப் பிறகு அது வளர்ந்த விதம் எப்படி? குறிப்பிடத்தக்க மாற்றங்கள், முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகள் ?

எந்த ஒரு முறையும் தனிமனிதர் சார்ந்துதான் தொடங்கும். அதன் பின்னர் மக்களும் காலமும் சுவீகரித்துக்கொள்ளும் போது ஒரு மகத்தான பாய்ச்சலை அடையும்.

மருத்துவர் ஹானிமன் அவர் காலத்தில் 99 மருந்துகளை நிரூபணம் செய்தார். இப்பொழுது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகள் இந்தியாவில் கிடைக்கின்றன, உலகளவில் 3000 முதல் 7000 மருந்துகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. உலக மருத்துவ வரலாற்றில் இளைய பிள்ளையாய் வளர்ந்து வருவது ஹோமியோபதி மட்டுமே. ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளையும் மாற்றங்களையும் தன்னகத்தே கொண்டு வளர்ந்து வருகிறது.

ஹோமியோபதி பற்றிய மக்களின் புரிதல் எவ்வாறு உள்ளது?

முன்னெப்போதும் இல்லாத அளவு விழிப்புணர்வு இருக்கிறது. இது நம்பிக்கையான மாற்று மருத்துவம் என்கிற கருத்து மக்களிடம் உள்ளது. பக்க விளைவுகள் இல்லாதது என்ற நம்பிக்கையும் உள்ளது. உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் தான் ஹோமியோபதி பற்றி புரிதலுடன் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். ஆனாலும் ஹோமியோபதி மருந்து பயன்படுத்தியவர்கள் மீண்டும் எங்களிடம் வந்து கொண்டே இருக்கிறார்கள். எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் ஹோமியோபதி காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். ஏன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் வந்தால் கூட அறுவை சிகிச்சை இல்லாமல் ஹோமியோபதி மருந்து கொடுக்க முடியாதா என்று கேட்கிறார்கள். அந்த அளவிற்கு எங்கள் மருந்தை நம்புகிறார்கள். ஆனாலும் அறுவை சிகிச்சை என்று தேவைப்படுகிற போது நாங்கள் அதற்குப் பரிந்துரை செய்கிறோம். அந்தச் சிகிச்சை முடிந்து வந்து மீண்டும் இந்த மருந்தைத் தொடர்கிறார்கள்.

ஹோமியோபதி மருந்துகளில் இடம்பெறும் மூலப் பொருள்களில் முக்கியமானவை எவை?

தாவரங்கள் தாது உப்புக்கள், உலோகங்கள், விலங்குகள் கழிவுகள் எனப் பலவிதமான பொருட்களிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.மலர்களும் பயன்படுத்தப்படுவதுண்டு.

சித்த மருத்துவம் ஆயுர்வேதம் மருத்துவ முறைகளில் கூட ரசாயனங்களின் பயன்பாடு உள்ளது. ஹோமியோபதி மருந்துகளில் உள்ளதா?

ஆம். இரசாயனங்களில் இருந்து ஹோமியோபதி மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், நீங்கள் புரிந்து கொள்வது போல் இரசாயனங்கள் நேரடியான வடிவில் பயன்படுவதில்லை. ஹோமியோபதி மருந்துகள் தயாரிப்பில் தொடர்ந்து நீர்க்க வைப்பதன் மூலம், விஷப்பொருட்களின் உள்ள தன்மை மாறிவிடுகிறது. அதனால் தீங்கின்றி அதைப் பயன்படுத்த முடிகிறது.

ஹோமியோபதி மருத்துவ முறை எம்மாதிரியான பிரச்சினைகளுக்கு அற்புதப் பலனளிக்கும்?

நோய்களின் குறிகள் மற்றும் நோயாளியின் தன்மை, வாழ்க்கைச் சூழல் இவற்றைப்பொறுத்தே மருந்துகள் தேர்வு செய்யப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் நோய்களுக்கு மருந்து கொடுப்பதை விட நோயாளருக்குத்தான் மருந்து கொடுக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நோயும் ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரியான தாக்கங்களை அளிக்கக்கூடியது. கொரோனா காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாலு பேருக்கு நாலு விதமான மருந்துகளைக் கொடுத்தேன். ஏனென்றால் ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு உலகம் போன்றது.

ஹானிமன் சொல்வது நோயாளரை உன்னிப்பாக கவனித்துத்தான் மருந்து கொடுக்க முடியும். சிக்கன் குனியா வந்தபோது நான் 15 விதமான மருந்துகள் கொடுத்தேன். ஒரே நோய்க்கு ஒரே மருந்து என்பது ஹோமியோபதியில் கிடையாது. நோயாளியைப் பொறுத்துதான் மருந்து அமையும். காய்ச்சலுக்கு ஒன்று, சளிக்கு ஒன்று, வீக்கத்துக்கு ஒன்று என்று இங்கே மருந்து தரப்படுவதில்லை. யாருக்கு காய்ச்சல்? யாருக்கு என்ன விதமான வீக்கம்? என்றுதான் பார்க்கிறோம். எனவே தனி மனிதர் தான் இங்கே முக்கியம், நோயல்ல.

குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கான நோய்கள் என்ற வகையில் செயல்படுவதும் உண்டு. நான் திருப்பூரில் இருக்கும்போது மூலநோய் பிரச்சினைகளை அதிகமாகக் கையாண்டது உண்டு. சில பகுதிகளில் ஆஸ்துமா சில பகுதிகளில் தோல் நோய்கள், சிலர் விஷக்கடிகளுக்கு மட்டும் மருத்துவம் பார்க்கிறார்கள். 

சிறப்பு சிகிச்சை என்பதைக் குறிப்பிட்ட சூழலில் உருவாகும் தேவைதான் தீர்மானிக்கிறது. Auto immuno disorder எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் பிறழ்வுகளுக்கு ஹோமியோபதி மருந்து பலனளிக்கிறது.

அலோபதி ஒரு அறிவியலாகப் பார்க்கப்படுகிறது. ஹோமியோபதி எப்படிப் பார்க்கப்படுகிறது?

நான் ஏற்கெனவே சொன்னது போல் ஹோமியோபதியில் மருந்துப் பொருட்களை தொடர்ந்து கரைத்து நீர்த்துப்போவதன் மூலம், மருந்துப் பொருட்களை வீரியப்படுத்துகிறோம்.

ஹோமியோபதி மருத்துவ முறையின்மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு, அதில் மருந்துப் பொருள் இல்லை, வெறும் பிளாஸிபோ எஃபெக்ட்  என்பதுதான். ஆனால் நேனோ தொழில் நுட்பம் வந்தபின்னர், அப்படிச் சொல்ல முடியவில்லை. நேனோ தொழில் நுட்பம் ஹோமியோபதியின் எல்லா வீரியங்களிலும் மருந்துகள் இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

ஹோமியோபதியைச் சரியாக புரிந்துகொள்ள அறிவியல் இன்னும் ஒருபடி நுட்பமாக மாற வேண்டி இருக்கிறது. நாங்கள் மருத்துவ ஆய்வுக்கூடங்களில் எடுக்கப்படும் ரிப்போர்ட்டுகளைப் புறம் தள்ளுவதில்லை. அவற்றையும் கவனிக்கிறோம். கொரோனாவுக்கு மருந்து கொடுத்தபோது குணமாகிறதா என்று இந்த ரிப்போர்ட்டுகளை வைத்து தான் நாங்கள் முடிவு செய்தோம்.

நோயாளிகளை அணுகுமுறையில், அறிகுறிகளை ஆய்வு செய்யும் முறையில் அறிவியலை விட உளவியல் அதிக இடம் வகிக்கிறதா?

ஒரு நோயாளியை முதலில் பார்க்கும் போது அவர் உடலை உள்ளத்தைப் புரிந்து கொள்ள பொறுமையாகக் கூர்ந்து நோக்குகிறோம். அதற்கு ஒரு மணி நேரம் கூட ஆகலாம். ஒரு தீர்வுக்காக வருகிற ஒருவர் காலைத் தொங்க போட்டுக் கொண்டிருந்தால் இதமாக இருக்கிறது என்றால் அவருக்கு வேறு மாதிரியான மருந்து கொடுப்போம். காலை மடக்கினால் நன்றாக இருக்கிறது என்றால் அவருக்கு வேறு மருந்து.காய்ச்சலின் போது தண்ணீர் தாகம் எடுத்தால் அது வேறு மாதிரியான தன்மை கொண்டவர் .தாகம் எடுக்கவில்லை என்றால் அவர் வேறு மாதிரியானவர். அதனால் அவர் இரண்டு பேருக்கும் ஒரே மருந்தைக் கொடுப்பதில்லை. இப்படியே உடல் சார்ந்து, மனம் சார்ந்து, நோய் உருவாகிற குறிப்பிட்ட சூழல் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் மருந்து தேர்வு செய்ய முடியும்.

பொதுவாக எப்படிப்பட்ட நோயாளிகள் ஹோமியோபதியர்களிடம் தீர்வு தேடி வருகிறார்கள்?

ஏற்கெனவே ஹோமியோபதியில் அறிமுகம் உள்ளவர்கள் ஒவ்வொரு சிறிய பிரச்சினைக்கும் ஹோமியோபதி மருத்துவரை அணுகுவார்கள். பலநேரங்களில் பிரச்சினை அதிகமாகி வேறு மருத்துவ முறைகளில் கைவிடப்பட்ட நிலையில், வருபவர்களும் உண்டு.

ஹோமியோபதியின் வெற்றியாக எந்தத் தீர்வு முறை உள்ளது?

முதலில் வெற்றி என்று நான் பார்ப்பது ,மருந்து என்றாலே கசப்பு என்பதை மாற்றியமைத்ததுதான். எட்டிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் ஹோமியோ மருந்து கூட இனிக்கும் என்கிற வகையில் இதன் மருந்து தயாரிப்பு முறை வேறுபாடு ஆனது. நமது பாரம்பரியமான மருத்துவ முறைகளில் மருந்துகள் எளிமையாய் இருந்ததில்லை.

ஹோமியோபதி மருத்துவ முறையில் நோயறிதல் முறை  மிகவும் நுட்பமான அளவில் மாற்று மருத்துவ முறைகளில் இருந்து வேறுபட்டது. மனநிலைக்கும் நோய்க்கும் உள்ள இணைவைக்கொண்டு, உரிய மருந்து தேர்வை செய்வது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

உங்கள் இலக்கிய அனுபவம் மருத்துவத்தில்  பயன்படுகிறதா?

நிச்சயமாகப் பயன்படவே செய்கிறது . இந்த வாழ்க்கையையும், மனிதர்களையும் புரிந்து கொள்ள இலக்கியம் உதவுகிறது. பல  நேரங்களில் மருந்துகளைப் படிக்கும் போது, நாம் ஏற்கெனவே வாசித்த கதை மாந்தர்கள் கவனத்தில் வருவார்கள். துயரர் ஆய்வின் போது மனித மனங்களை புரிந்து கொள்ள இலக்கிய வாசிப்பு உதவியாக இருக்கும்.

– அருள்

Leave a Comment