மந்திரச்சொல்
குழந்தைகள் தினமும் அறிவுரைகள் கேட்டு வளர்கின்றன. பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது என்பது போன்ற அறிவுரைகளை யாரும் மதிப்பதே இல்லை. ஆனால், அதையே கதையின் மூலம் சொல்லுங்கள். ஆழ்மனதில் பதிந்துவிடும். அந்த கதைகள் வாழ்நாள் முழுவதும் ஞாபகம் இருக்கும். உதாரணத்துக்கு ஒரு குட்டிக் கதை.
திருவிழாவுக்காக அம்மா நிறைய லட்டு செய்தார். கண்ணனுக்கும் தங்கை மாலாவுக்கும் ஆளுக்கு ஒரு லட்டு கொடுத்துவிட்டு மீதத்தை தனியாக எடுத்து வைத்தார். கண்ணனுக்கு லட்டு ருசி பிடித்துவிட்டது. அதனால், இரண்டு லட்டுகளை திருடி கால்சட்டை பைக்குள் போட்டுக்கொண்டு விளையாடப் போனான். அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டும் முடித்துவிட்டான்.
வீட்டுக்குத் திரும்பிய கண்ணனிடம் அம்மா கேட்டபோது, ‘நான் எடுக்கவில்லை’ என்று சொல்லிவிட்டான். தான் லட்டு திருடியதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்துடன் கண்ணன் பாடம் படிக்கத் தொடங்கினான். கொஞ்ச நேரத்தில் கால்களில் எறும்புகள் ஏறி கடிக்கத் தொடங்கவே அழ ஆரம்பித்தான்.
அம்மா வந்து அந்த எறும்புகளை அப்புறப்படுத்தினார். அவன் கால் சட்டைப் பைக்குள் இருந்த லட்டு துகள்களைத் தேடியே எறும்புகள் வந்தன என்பதை அம்மா அறிந்துகொண்டார். அப்போதுதான் தவறு செய்தால் அது எப்படியாவது தெரிந்துவிடும் என்பதை புரிந்துகொண்டான் கண்ணன். அதனால், ‘’என் தவறுக்கு எறும்புகள் தண்டனை கொடுத்துவிட்டன, இனி நான் பொய் சொல்ல மாட்டேன், திருட மாட்டேன்’’ என்று மனம் வருந்தி திருந்திவிட்டான்.
இந்த கதை நேரடியாக திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது என்பதை சொல்லவில்லை. ஆனால், திருடுபவரும் பொய் சொல்பவரும் கண்டிப்பாக மாட்டிக்கொள்வார் என்ற நீதியைப் போதிக்கிறது. கதை குழந்தைக்கு பாடத்தைத் திணிப்பதில்லை. ஆனால், நீதியைக் கண்டுபிடிக்கச் செய்கிறது. இதுதான் கதையின் வலிமை.
கதையில் குழந்தை தனக்கான பிரதிபலிப்பைக் கண்டுகொள்கிறது. அந்தச் சிறுவனைப் போல நானும் தப்பு செய்திருக்கிறேன் என்று குழந்தை நினைக்கும் நொடியில், அது அறிவுரையாக மாறிவிடுகிறது.
எனவே, குழந்தை தவறு செய்யும்போது, சேட்டை செய்யும்போது, அடம் பிடிக்கும்போது, அவர்களை கண்டிப்பதற்குப் பதிலாக ஒரு கதை சொல்லுங்கள். உன்னைப் போன்று ஒரு சிறிய பையன் இருந்தான். அவனும் உன்னைப் போலவே அவசரப்பட்டு சில தவறுகளைச் செய்வான் என்று கதையை ஆரம்பியுங்கள்.
குழந்தை உடனே தன்னை அந்தக் கதையில் இணைத்துக்கொள்ளும். ஒரு நல்ல கதை குழந்தைக்கு, என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லாது. இப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்பதையும் சொல்லிக்கொடுக்கும். அறிவுரை குழந்தையின் காதில் நுழைகிறது. ஆனால், கதை குழந்தையின் மனசுக்குள் நுழைகிறது.
அறிவுரை குழந்தையை மாற்ற முயற்சிக்கிறது. கதை குழந்தைக்குள் மாற்றத்திற்கான எண்ணத்தை உருவாக்குகிறது. அதனால் குழந்தையின் உலகத்துக்குள் செல்ல விரும்பும் பெற்றோர், ஆசிரியர், பெரியவர்கள் அனைவருமே அறிவுரைகளை குறைத்துக்கொள்ள வேண்டும், கதைகளை அதிகரிக்க வேண்டும்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
