மனசுக்கு கென்யா மொழி தெரியாதுங்க…

ஆசிரியர் பக்கம்

கடல் அலை போன்று மனித மனமும் ஒரு நொடி கூட ஓய்வெடுப்பதில்லை. தூங்கும் நேரத்திலும் கனவு காணவும், உள்ளுறுப்புகளை ஒருங்கிணைக்கவும் மனம் வேலை செய்துகொண்டே இருக்கிறது.

பெரும்பாலும் கடந்த கால துயரம் அல்லது எதிர்கால அச்சம் பற்றியே மனம் அசை போடுகிறது. இந்த எண்ணங்களே கவலையாக மாறுகின்றன. புத்தகங்கள், ஆறுதல்களால் இந்த கவலைகள் முழுமையாகக் கரைவதில்லை.

ஏன் தெரியுமா..?

மனதின் மொழியை நாம் கற்றுக்கொள்ளவில்லை. கென்யா மொழி மட்டுமே தெரிந்தவரிடம் தமிழ் பேசினால் அவருக்குப் புரியாது. ஆனால், சைகையில் பேசினால் புரிந்துகொள்வார். அதேபோல் மனம் எல்லாவற்றையும் காட்சி வடிவத்தில் மட்டுமே எஈதாகப் புரிந்துகொள்கிறது.  

அம்மா, விபத்து, இனிப்பு என்று ஒவ்வொரு வார்த்தையும் ஒரு காட்சியைக் காட்டும்.  மகிழ்ச்சி, துக்கம், பயம், கவலை எல்லாமே காட்சியாகவே ஆழ்மனதில் பதிந்திருக்கிறது. இப்படி, காட்சியாகப் பதிந்திருக்கும் கவலைகளை எழுத்து, பேச்சு மூலம் களைவதைவிட, வேறு ஒரு காட்சியின் மூலம் எளிதில் அழித்துவிட முடியும்.

அம்மா என்று நினைத்தால் பலருக்கும் கஷ்டப்படும் அம்மா காட்சியே கண்ணுக்குத் தெரியும். வேலை என்றால் மேலதிகாரியின் கடுகடு முகம் ஞாபகம் வரும். அம்மா என்றால் அவரது பாசம், வேலை என்றால் பாராட்டு கிடைத்த தருணத்தை நினைக்கத் தொடங்கினால், கவலையே இன்பமாக மாறிவிடும்.  

​இப்படி மாறுபட்ட காட்சி வடிவில் மனதை அணுகும்போது தீர்வு எளிதாக இருக்கும். எனவே, எந்த கவலை வந்தாலும் பாசிடிவ் காட்சியாக மாற்றி உருவகப்படுத்துங்கள். இதை செய்வது குழப்பமாக இருந்தால் கவலையை பேப்பரில் எழுதி, அது கரைவது போன்று காட்சிப்படுத்துங்கள். கவலை காணாமல் போய்விடும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment