கட்டுக்கதை, உண்மை தகவல்கள்
விண்ணிலிருந்து பார்க்கும்போது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றே ஒன்று கண்ணுக்குத் தெரியும் என்பார்கள். சீனப் பெரும் சுவரின் மொத்த நீளம் சுமார் 21,196 கிலோமீட்டர் என்பதால் தெரியும் என்பார்கள்.
உண்மை என்னவென்றால், விண்ணிலிருந்து பார்க்கும்போது இந்த பெருஞ்சுவர் தெரியாது. ஆம், தெரியும் என்று சொல்வது ஒரு கட்டுக்கதை. உலக அதிசயமாக கருதப்படும் சீனப்பெருஞ்சுவருக்குப் பின்னே புதைந்திருக்கும் உண்மைகளைப் பார்க்கலாம்.
பல சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த சீனாவை ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட சீனாவாக உலகுக்குத் தந்த மன்னனின் பெயர் ஷி ஹூவாங்டி (Shi Huangdi). சிற்றரசுகளை எல்லாம் ஒடுக்கி சீனப் பேரரசாக முடிசூட்டிக் கொண்டதும், சீனாவை 36 மாநிலங்களாக பிரித்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரை நியமித்தார். நாடு முழுவதும் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டன. நாணய முறையை அறிமுகப்படுத்தினார்.
ஆனாலும் அவ்வப்போது பல அரசுகள் அடிக்கடி தாக்குதல் தொடுத்தார்கள். அதனை தடுத்து நிறுத்த ஆங்காங்கே சின்னஞ்சிறு சுவர்கள் அமைக்கப்பட்டன. அந்த சுவர்களை எல்லாம் இணைத்துத்தான் பெருஞ்சுவர் கட்டப்பட்டது. இதனை கட்டுவதற்காக மக்கள் மீது கடுமையான வரி விதிக்கப்பட்டது. இவர் அமைத்த ‘சின்’ பேரரசின் ஆட்சி பலம் பொருந்தியதாக இருந்ததால்தான் அதன் பெயரிலேயே அந்த தேசம் சீனா என்று அழைக்கப்படுகிறது.
சீனப் பெரும் சுவர்உலகின் மிகப் பெரிய மனிதக் கட்டிட அதிசயங்களில் ஒன்று. ஆனால் இதைப் பற்றி பலர் அறியாத ஆச்சர்யமான தகவல்கள் ஏராளம்
இது ஒரே சுவர் அல்ல!
“சீனப் பெரும் சுவர்” என்று சொன்னாலும், உண்மையில் இது ஒரே தொடர்ச்சியான சுவர் அல்ல. பல காலங்களில் பல அரசர்களால் கட்டப்பட்ட சுவர்கள், கோட்டைகள், பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டுத்தொகைதான் இது. (
2,000 ஆண்டுகளாக கட்டப்பட்டது
இந்த சுவரின் ஆரம்ப கட்டுமானம் கிமு 7-ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. பல அரச வம்சங்கள் இதை தொடர்ந்து விரிவுபடுத்தின. அதனால் இதை கட்டி முடிக்க 2,000 ஆண்டுகளுக்கும் மேலான காலம் எடுத்தது.
ஸ்டிக்கி ரைஸ்
சில பகுதிகளில் கற்களை ஒட்ட பயன்படுத்திய சுண்ணாம்பு கலவையில் “ஒட்டும் அரிசி” (Sticky Rice) கலந்து பயன்படுத்தியதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் சுவர் இன்னும் பலமாக இருப்பதாக கருதப்படுகிறது.
பலியான மக்கள்
சுவரை கட்டுவதற்காக வீரர்கள், விவசாயிகள், கைதிகள் என பலர் வேலைக்கு அழைக்கப்பட்டனர். கடுமையான உழைப்பு, பசி, குளிர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக வரலாறு கூறுகிறது. இதனால் இதை உலகின் நீளமான கல்லறை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த சுவர் எதிரிகள் வருகிறார்கள் என்பதை தெரிவிக்க புகை, தீ, கொடி போன்ற சைகைகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு கோபுரத்தில் எழுப்பிய புகை, அடுத்த கோபுரத்திற்குச் செய்தியாக சென்றது. சமீபத்திய ஆய்வுகள் படி, சில பகுதிகளில் வளரும் பாசி, நுண்ணுயிர்கள், பச்சை படலம் போன்றவை சுவரை அரிப்பிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. இதை “Living Skin” என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
காலநிலை மாற்றம், மணல் புயல்கள், மனித சேதம், கற்கள் திருடப்படுதல் போன்ற காரணங்களால் சுவரின் பல பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. சில கணக்குகளின்படி மிங் வம்ச கால சுவரின் 20% க்கும் மேல் காணாமல் போயுள்ளது.
சமீபத்தில் நடந்த அகழாய்வுகளில் பழமையான பீரங்கிகள், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள், விலங்கு எலும்புகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் சீனச் சுவர் வெறும் பாதுகாப்பு சுவர் மட்டுமல்ல; அக்கால மக்களின் வாழ்க்கை மையமாகவும் இருந்தது தெரியவந்துள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்று
யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாகவும், உலகின் “New Seven Wonders” பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்க்க செல்கிறார்கள்.
மேலிருந்து பார்க்கும்போது, மலைகளின் மீது நீளமாகச் சுருண்டு செல்லும் இந்த சுவர் ஒரு பிரம்மாண்டப் பாம்பைப் போல தோன்றும். அதனால்தான் உலகின் மிக அழகான மனிதக் கட்டிடங்களில் ஒன்றாக இதை புகைப்பட கலைஞர்கள் கருதுகிறார்கள்.
