வாழும் வரை மகிழ்ச்சி
பிறந்ததில் இருந்து படிப்பு, வேலை, திருமணம், குழந்தை வளர்ப்பு என்று மனிதர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். உண்மையில் மனித வாழ்க்கையில் ஓய்வு காலமே மிகவும் சிறப்பானது. ஏனென்றால் நிறைய பேர் இத்தனை காலம் வரையிலும் உயிர் வாழ்வதில்லை என்பதால் முதுமையை அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
- அனுபவம் எனும் மிகப்பெரும் சொத்து இருக்கிறது என்பதை உறுதியுடன் நம்புங்கள். அதேநேரம், கேட்காமல் யாருக்கும் ஆலோசனை வழங்காதீர்கள்
- நோபல் பரிசு பெற்றவர்களில் பெரும்பாலோர் 60 வயதை தாண்டியவர்கள். எனவே வாழும் வரையிலும் உழைக்கவும் சாதிக்கவும் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
- முதுமையில் பெரிய பொறுப்புகள் இருப்பதில்லை. இழப்பதற்கும் எதுவுமில்லை. ஆகவே, முழு நேரத்தையும் தங்கள் மகிழ்ச்சிக்காக செலவிடுங்கள்.
- இசை, விளையாட்டு, நட்பு என்று எத்தனையோ விஷயங்களை இளமையில் இழந்திருக்கலாம். ஆசைப்பட்ட எல்லாவற்றையும் இந்த காலத்தில் அனுபவியுங்கள்.
- குடும்பத்தினர் மதிக்கவில்லை என்பதை குற்றமாகக் கருதாதீர்கள். அவரவருக்கு ஆயிரம் வேலைகள். எனவே, தங்கள் மகிழ்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.
முதுமை என்பதும் இனிமையான பக்கம் என்பதைப் புரிந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
