பழி வாங்கும் ஆசை வருகிறதே..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : சின்னச்சின்ன விஷயங்களுக்கும் பழி வாங்கும் எண்ணம் வருகிறது, இதை மாற்றுவது எப்படி?

  • பி.வனிதா, நீடாமங்கலம்.

ஞானகுரு :

தெரிந்தோ அல்லது தெரியாமலோ தவறு செய்யும்போது, ஆசிரியர், மேலதிகாரி, கடவுள் என எல்லோரும் மன்னிக்க வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். பூமியை வெட்டித் தோண்டும்போதும் பூமாதேவி வாழ்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

கோபம் காட்டினாலும் மற்றவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் பிறர் செய்த தவறை மட்டும் மன்னிக்கும் பக்குவம் இருப்பதில்லை. எப்படியாவது பழி வாங்கத் துடிக்கிறார்கள்.

பழி வாங்கும் எண்ணம் என்பது பாம்பு விஷம் போன்றது. அது உடலுக்குள் நுழையும்போது பெரிதாக வலியும் வேதனையும் இருக்காது. ஆனால், நேரமாக நேரமாக கொஞ்சம் கொஞ்சமாக உடலை அழிக்கத் தொடங்கிவிடும் எதிரி அழிகிறாரோ இல்லையோ பழி வாங்கும் குணம் இருப்பவர் நிச்சயம் அழிந்துவிடுவார். மன்னிப்பது மனித குணம், மறப்பது கடவுளின் குணம்… நீங்கள் மனிதனாக இருங்கள், அதுவே போதும்.

கேள்வி : முதல் கல்யாணம் தோற்றுவிட்டது. இரண்டாவது கல்யாணம் முடிக்கலாமா..?

  • சி.பார்வதி. பொள்ளாச்சி.

ஞானகுரு :

திருமணம் என்பது விருப்பம் சார்ந்த ஒன்று. கட்டாயம் கிடையாது. பொருளாதார சுதந்திரம், தனிமையில் மகிழ்ச்சி, வாழ்க்கை நிம்மதியாக இருக்கிறது என்றால், திருமணம் அவசியம் இல்லை.

அதேநேரம், வாழ்க்கைக்கு ஒரு துணை இருப்பது மிகவும் நல்லது. இன்பம், துன்பம் வரும்போது ஆதரவு ஒருவரால் கிடைப்பது அர்த்தமுள்ளதாக இருக்கலாம். இதை நண்பர்கள், உறவு மூலம் பெற முடியும் என்றாலும், வாழ்க்கைத் துணை என்றால் ஸ்பெஷலாக இருக்கும்.

எனவே, உண்மையில் ஒரு வாழ்க்கை துணை தேவைப்படுகிறதா? தனியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேனா? மீண்டும் ஒரு உறவில் செல்ல தயாரா என்ற மூன்று கேள்வியையும் கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்களுக்கே விடை கிடைத்துவிடும். இதில் வேறு ஒருவர் தலையிட அனுமதிக்காதீர்கள்.

Leave a Comment