நெஞ்சை அமுக்கும் பேய்

ஞானகுரு பதில்கள்

கேள்வி : பேய் இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால், தூக்கத்தில் பேய் என்னை அமுக்கி கொல்ல முயன்றதை நிஜமாக உணர்ந்தேன். இந்த பேயை விரட்டுவதற்கு என்ன பரிகாரம்?

  • ஆர்.கந்தசாமி, கள்ளக்குறிச்சி.

ஞானகுரு :

பேய் என்றால் செத்துப்போன மனிதர்களின் ஆவி என்பதே உலகம் முழுவதும் உள்ள மக்களின் நம்பிக்கை. ஆனால் பேயை ஆதாரபூர்வமாக இதுவரை யாரும் நிரூபித்தது இல்லை.

கடவுளைப் பார்த்ததாக யார் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அதேநேரம், பேயைப் பார்த்தேன், பேய் அமுக்கியது என்று சொன்னால் மக்கள் நம்புவார்கள். ஏனென்றால் கடவுள் நம்பிக்கையைவிட பேய் நம்பிக்கை அதிகம் பேருக்கு உண்டு.

விசித்திர நம்பிக்கை

பேய் பற்றிய மனிதர்களின் நம்பிக்கை விசித்திரமானது. அதாவது நிறைய சக்திகள் இருப்பதாக சொல்லப்படும் பேய் இருட்டுக்குள் ஒளிந்திருக்கும், காலில் சலங்கை கட்டியிருக்கும், கண் இமைக்கும் நொடிக்குள் மனிதருக்குப் பின் ஓடும், பூனைக்குப் பயப்படும் என்பதெல்லாம் காலம் காலமாக சொல்லப்பட்டு வருபவை.

உண்மையில் பேய் என்று ஒன்று இருந்தால் என்ன செய்யும், அதன் உருவம் எப்படியிருக்கும், அது பூமியில் என்ன செய்கிறது என்பதெல்லாம் யாருக்கும் பதில் தெரியாது. அதேநேரம், நிறைய மனிதர்கள் பேய் அமுக்குவதை உணர்ந்திருக்கிறார்கள். அதற்கு பரிகாரம் செய்து விரட்டுகிறார்கள்.

பேய் விளையாட்டு

தூக்கத்தில் பேய் அமுக்குவதாக நிறைய பேர் சொல்கிறார்கள். பேய் அமுக்கும்போது உடல் அசையாது, குரல் எழுப்ப முடியாது, நெஞ்சில் யாரோ உட்கார்ந்திருப்பது போல் இருக்கும், மூச்சுவிடுவது கஷ்டமாக இருக்கும், படபடப்பு, வியர்வை தோன்றும். அறையில் யாரோ இருப்பது போன்ற உணர்வுகள் வரும். 

உண்மையில் இது பேய் அமுக்குவதால் வரும் பிரச்னை இல்லை. Sleeping Paralysis எனப்படும் தூக்கத்தில் விழிப்பு குறைபாடு. இது ஒரு நோய் அல்ல, தூக்கக் கட்டுப்பாட்டில் வரும் ஒரு சாதாரண பிரச்னை.

மனிதர்களின் தூக்கத்தை நியூரான்ஸ் செல்கள் கட்டுப்படுத்துகின்றன. உடல் தூங்கினாலும் மனிதரின் ஆழ்மனம் விழிப்புடன் இருக்கும்போது இதுபோன்ற பிரச்னைகள் உண்டாகிறது.

காரணங்கள்

போதிய காற்றோட்டம் இல்லாத அறை, போதிய தூக்கமின்மை, மன அழுத்தம் காரணமாக பேய் போன்ற மாயை உருவம் தென்படுகிறது. இதற்கு பெயர் Hallucinations. இதனால் உயிருக்கு ஆபத்து வராது என்றாலும் நிறைய பேர் பயந்துவிடுகிறார்கள்.

இந்த பிரச்னையை சிம்பிளாகத் தீர்த்துவிட முடியும். அதாவது, மல்லாந்து படுப்பவர்களுக்கே இதுபோன்ற பிரச்னை வருகிறது. எனவே, பக்கவாட்டில் படுப்பது எளிய தீர்வு. ஏதோ ஒன்று அழுத்துவதாக தோன்றும்போது அச்சப்பட வேண்டாம். உடல் முழுவதையும் அசைக்க முயற்சி செய்யாமல் கை விரல் அல்லது கால் விரலை மட்டும் அசைக்க முயற்சி செய்தால் போதும், சில நொடிகளில் இந்த மாயையில் இருந்து விடுபடலாம்.

இதற்கு எந்த மருந்தும் தேவையில்லை. பேய் என்று எதுவும் இல்லை. அப்படியே பேய் இருந்தாலும் அதற்கு நெஞ்சில் ஏறி விளையாடுவது ஒரு நல்ல விளையாட்டாக இருக்க வாய்ப்பு இல்லை..

வாழ்க்கை தத்துவத்தை சிம்பிளாக சொல்ல முடியுமா..?

  • கே.வினோத்குமார், மன்னார்குடி

ஞானகுரு :

மனதருக்கு உயிர் மட்டுமே இயற்கை கொடுத்து அனுப்புகிறது. அதேபோன்று உயிரை மட்டும் திரும்பவும் எடுத்துக்கொள்கிறது. இடையிலான வாழ்க்கையில் அன்பு, பணம், புகழ், கோபம், உறவு, பொறாமை, கொலை போன்ற எதற்குமே முக்கியத்துவம் இல்லை என்பதே உண்மை. எனவே, வாழ்க்கைப் பயணத்தை டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்வதே நிம்மதிக்கு வழி.

Leave a Comment