ஆன்மிக விசித்திரம்
கடவுளை நம்புகிறார்களோ இல்லையோ, பேய், பிசாசு மீது மனிதர்களுக்கு அளவுக்கு அதிகமான நம்பிக்கை உண்டு. நம்மூரில் பேய் என்றால் வெளிநாட்டில் சாத்தான்.
அந்த சாத்தான் வேதம் எழுதியதாக ஒரு கதையே இருக்கிறது. அதாவது, ரோமானியாவில் வாழ்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கெஞ்சிக் கேட்டதால், தண்டனையில் இருந்து தப்புவதற்கு ஒரு மார்க்கம் சொல்லப்பட்டது. அதாவது, உலகம் வியக்கும்வண்ணம் அற்புதமான புத்தகத்தை ஒரே இரவில் எழுதினால் விடுதலை கிடைக்கும் என்று சொன்னார்கள்.
வேகவேகமாக எழுத தொடங்கினாலும் பக்கங்கள் நிரம்பவில்லை. அதனால் கடவுளை அழைத்து உதவி கேட்டாராம். கடவுள் வரவில்லை. அதனால் சாத்தானை அழைத்தாராம். உடனே ஓடிவந்த சாத்தான் ஒரே இரவில் எழுதிக்கொடுத்ததுதான் கோடெக்ஸ் கிகாஸ் எனப்படும் வேதம். இப்போதும் ஸ்வீடன் நாட்டில் இந்தப் புத்தகம் இருக்கிறது. சாத்தானால் எழுதப்பட்ட வேதத்திற்கும் கடவுள் அருளிய வேதத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதுதான் ஆச்சர்யம்.
இப்போது, தகுதியில்லாத நபர்கள் அறிவுரை சொல்வதை சாத்தான் வேதம் ஓதுகிறது என்கிறார்கள். அப்படிப்பார்த்தால், இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதருக்கும் அறிவுரை சொல்வதற்குத் தகுதி இல்லை. ஏனென்றால் எல்லா மனிதர்களும் ஒரு வகையில் கடவுள் என்றால், இன்னொரு வகையில் சாத்தான். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
