நுண்ணுயிர்களின் அடேங்கப்பா அதிசயம்

விஞ்ஞானத்துக்கு ஒரு சவால்

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு துணையுடன் விஞ்ஞானம் படுவேகமாக வளர்ந்துவருகிறது. ஏதாவது ஒரு வகையில் மனிதனின் ஆயுளை நீட்டிக்கவேண்டும் என்று மருத்துவம் ஆசைப்படுகிறது. இந்த உலகில் புதிய உயிர் உருவாக்க வேண்டும் என்றும் ஆய்வு நடத்துகிறது. இதற்கென இப்போது செயற்கை உயிரியல் எனப்படும் சிந்தடிக் பயாலஜி என்ற துறையே இயங்கி வருகிறது.

புதிய துறையில் இறங்கியவர்கள், உயிரின் ஆற்றலையும் தன்மையையும் கண்டு அதிர்ந்துபோய் நிற்கிறார்கள். ஏனென்றால் நம் விரலை உள்ளே விட்டால், அந்த கணமே தசையும், எலும்பும், நரம்பும் கரைந்துபோகும் அளவுக்கு வீரியமான திராவகங்களிலும் சில நுண்ணுயிரிகள் வாழ்கின்றன என்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். அணுக்கதிர் வீச்சையும் தாங்கிக்கொண்டு தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ளும் நுண்ணுயிர்களும் இருக்கின்றன.

மனிதன் மட்டுமல்ல எந்த ஒரு உயிருமே ஒரு நிமிடம்கூட தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு மோசமான சூழலிலும் நுண்ணுயிர்கள் திறமையாகச் செயல் புரிகின்றன. இவற்றை எல்லாம் அறிந்து ஆச்சர்யத்தில் மூழ்கி உள்ளார்கள். நாம் எப்படிப்பட்ட உயிரைப் படைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ… அதைவிட ஆயிரம் மடங்கு ஆற்றலுடன் கோடிக்கணக்கான உயிரிகளை இயற்கை படைத்துள்ளது. நாம் இதுவரை அறிந்திருக்கும் உயிரிகளின் எண்ணிக்கையானது, உண்மையில் ஒரு சதவிகிதம் கூட இல்லை என்கிறார்கள்.

விதைகளை வீரியமாக மாற்றுவதை உலகமே கொண்டாடியது. ஆனால் இப்போதுதான் அவை எல்லாமே மனிதகுலத்துக்கு ஆபத்து தரும் எதிர்விளைவுகளைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சூழலில் புதிய உயிர்களைக் கண்டறியமுடியும் என்று விஞ்ஞானிகள் கிளம்பி இருப்பது, இயற்கையுடன் போட்டி போடுவது போன்றுதான். ஆதில் நிச்சயம் நன்மை கிடைக்காது என்று சொல்பவர்கள்தான் இப்போது அதிகம்.

புதிய உயிர்களை உருவாக்குவது அத்தனை எளிதல்ல. ஏனென்றால் இந்த உலகம் இன்றைய நிலையை அடைவதற்கு சுமார் 400 கோடி ஆண்டுகளைத் தாண்டியுள்ளது. இத்தனை காலகட்டங்களைக் கடந்தே பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. இந்த வளர்ச்சியை எல்லாம் ஓர் ஆய்வுக் கூடத்தில் எட்டிவிட சாத்தியம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சமீபத்திய கால விஞ்ஞான சாதனையாக கருதப்பட்டது குளோனிங் முறை. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டாலி ஆடு, எதிர்பார்த்த எந்தப் பலனையும் தரவில்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி, தக்காளி, கத்தரி போன்றவையும் எதிர்விளைவையே ஏற்படுத்தி உள்ளன. அதனால் செயற்கை உயிர் என்ற ஆய்வில் நாம் அடையவேண்டிய தூரம் இன்னமும் எங்கேயோ உள்ளது என்பதுதான் உண்மை.

Leave a Comment