வெயில், வெயிலறிய ஆவல்

ஆசிரியர் பக்கம்

கோடை காலம் உச்சத்திற்கு வந்துவிட்டது. இந்த வெயில் காலத்தில் மிகவும் ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்று ஹீட் ஸ்ட்ரோக். இது சாதாரண சூடு பிடித்தல் பிரச்னை இல்லை, உடல் வெப்பநிலை கட்டுப்பாட்டை இழக்கும் அசாதாரண பிரச்னை.

நாங்கள் பார்க்காத வெயிலா என்ற அசட்டை நிறைய பேரிடம் இருக்கிறது. இளம் வயதில் சுற்றியதற்கும், வயதான காலத்துக்கும் வெயில் பாதிப்பு வித்தியாசமானது. குறிப்பாக உடல் வெப்பநிலை 40°C (104°F) என்பதைத் தாண்டி உயரும்போது வியர்க்கும் திறன் குறைவதுடன் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை தாமதமானால் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

முதியவர் ஜாக்கிரதை

பொதுவாக வயதானவர்கள், குழந்தைகள், வெயிலில் வேலை செய்பவர்கள், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், நீரிழிவு, இதய நோய் உள்ளவர்கள் பாதிக்கப்படலாம்.

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு காரணமாக உடல் சூடு அதிகரிக்கும். தலைசுற்றல், மயக்கம் ஏற்படலாம். தோல் சிவப்பாக மாறும் அல்லது உலர்ந்துபோகும். அதோடு வேகமான இதய துடிப்பு, குழப்பம், பேச முடியாத நிலை ஏற்படலாம்.

எனவே தாகம் இல்லாவிட்டாலும் இரண்டு முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் ஓ.ஆர்.எஸ். கரைசல், எலுமிச்சம் சாறு, நீர் மோர் குடிப்பது நல்லது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே போகாமல் இருப்பது நல்லது.

அப்படி வெளியே போகும் சூழல் இருந்தால் குடை, தொப்பி, காட்டன் ஆடை பயன்படுத்தலாம். தர்பூசணி, வெள்ளரிக்காய், ஆரஞ்சு போன்றவை எடுத்துக்கொண்டு காரம், எண்ணெய் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

வெயிலை சாதாரணமாக நினைக்காதீர்கள். எச்சரிக்கையுடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள், மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment