வயது பார்த்து வருவதில்லை சக்சஸ்

சூர்யகுமார் யாதவ் சாதனை மேப்

எம்.எஸ். டோனி, ரோகித் சர்மா வரிசையில் இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பை பெற்றுக் கொடுத்து கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இந்த ஆண்டு டி20 கோப்பை இந்தியாவின் கைக்கு வரும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் யாரும் நம்பவில்லை. ஏனென்றால் டோனி, ஹோலி, ரோகித் சர்மா போன்று நட்சத்திர கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இல்லை.

அதனால் இந்திய அணி ஃபைனலுக்குப் போகும் என்பதையே நிறைய பேர் எதிர்பார்க்கவில்லை. நம்பிக்கை தரும் பேட்ஸ்மேன்களான ரோகித், விராட் கோலி போன்றவர்கள் ஓய்வு பெற்றுவிட்டதால், எதிர்காலத்துக்கான கத்துக்குட்டி அணி என்றே இந்த டீம் கருதப்பட்டது.

சரித்திர சாதனை

ஆனால், சூர்யகுமார் யாதவ் சரித்திரம் படைத்துவிட்டார். யாரும் எதிர்பார்க்காத ஒரு சாதனையை அட்டகாசமாக நிகழ்த்திக் காட்டிவிட்டார். இந்த சாதனையை எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவரது வெற்றிக்குப் பின் மிகப்பெரும் போராட்டம், நிராகரிப்பு, வேதனைகள் நிரம்பியிருக்கின்றன.

மும்பையைச் சேர்ந்த சூர்யகுமார் யாதவ், 2010களின் ஆரம்பத்திலேயே உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கினார். ரஞ்சி டிராபியில் தொடர்ந்து நல்ல சராசரியில் ரன்கள் வைத்திருந்தார். அதோடு ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்கு 35 ரன்கள் சராசரியுடன் நிறைய ரன்கள் சேகரித்தார். நம்பகத்தன்மையான பேட்ஸ்மேன் என்றாலும் தேசிய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவே இல்லை. ஆனாலும், அவர் நம்பிக்கை இழக்காமல் பொறுமையுடன் காத்திருந்தார்.

இளவயது சோதனை

இது குறித்து சூர்யகுமார், ‘’இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும்பாலும் 18 முதல் 20 வயதிலேயே நிறைய வீரர்கள் அறிமுகமாகிறார்கள், ஆனால் எனக்கு அந்த வயதில் வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை.  

இந்தியா ஏ அணி, தேசிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்படும் போதெல்லாம் என் தந்தை எல்லா வலைத்தளங்களையும் பார்ப்பார். அதைப் பார்த்து ஏமாற்றத்துடன் எனக்கு போன் செய்து என் பெயர் லிஸ்டில் இல்லை என்று சொல்வார்.

அப்பாவின் வருத்தம்

அவர் வருத்தத்தைப் புரிந்துகொண்டாலும் நான் நம்பிக்கையுடன் இருந்தேன். அதானால், ‘பரவாயில்லை, அடுத்த வாய்ப்பு வரும்’ என்று அவருக்கு நம்பிக்கை கொடுப்பேன். 29 வயது வரை நான் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமாகவில்லை என்பதில் என்னை விட என் தந்தைக்கு மிகுந்த ஏமாற்றம். ஆனாலும் நான் ஒருபோதும் நம்பிக்கை இழந்ததே இல்லை’’ என்கிறார்.

அவரது மனவலிமை சாதாரணது அல்ல. ஏனென்றால் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்நாட்டு கிரிக்கெட்டில் காத்திருந்தார். அணிக்கு தேர்வு நடக்கும் நேரத்தில் எல்லாம் சூர்யகுமாரின் பேர் தவறவிடப்பட்டது. 25 வயதுக்குப் பிறகு அணியில் நுழைவது எளிது அல்ல என்று சொல்லப்பட்டாலும், தன்னால் முடியும் என்று காத்திருந்தார். அவர் தன்னம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை. மேலும் மேலும் தனது விளையாட்டை மேம்படுத்தினார்.

30 வயதினிலே

சூரியகுமாருடைய கிரிக்கெட் வாழ்க்கை உச்சம் தொடுவதற்கு 30 வயது வரை காத்திருக்க வேண்டியிருந்தது. 30 வயதில் அறிமுகமான சூரியகுமார் இரண்டு T20 உலகக்கோப்பை அணியில் இருந்திருக்கிறார். அதில் ஒன்றில் அவர் தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

அவர் 2021ம் ஆண்டு டி20 போட்டியில் அறிமுகமான நேரத்தில் சூர்யகுமாரின் வயது 30. அந்த முதல் போட்டியிலேயே அவரது ஸ்ட்ரைக் ரேட் 150+. 2021 – 2023 காலத்தில் அவரது டி20 சராசரி 45 ரன்கள். இந்த காலகட்டத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 170க்கும் அதிகம். இது எப்படி சாத்தியமானது என்றால் அவரது வித்தியாசமான விளையாட்டு முறை. அதாவது, 360° ஷாட்களும் ஆடும் அபாயகரமான வீரர். இந்த ஆட்டம்தான் சூர்யகுமாரை அடையாளப்படுத்தியது, அவரை தனித்துவப்படுத்தியது.

அதனால் 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் ஐசிசி டி20 ரேங்கிங்கில் உலக நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆக மாறினார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியில் சூர்யகுமார் யாதவ் பங்கு முக்கியமானது. தேவையான தருணங்களில் அணிக்கு துணை நின்றார்.

நடுப்பகுதியில் அதிக ரன்கள் எடுக்கவேண்டிய அழுத்தம் இருக்கும் நேரங்களில், வேகமாக ரன்கள் எடுத்து எதிரணி பவுலர்களை மன அழுத்தத்தில் ஆழ்த்திய அதிரடி வீரர்.  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பவுண்டரி லைன் அருகே அவர் பிடித்த கேட்ச் அந்த போட்டியின் திருப்புமுனையாக மாறியது. அந்த ஒரு நொடியில் அவர் காட்டிய தன்னம்பிக்கை, இந்திய அணிக்கு உலகக் கோப்பையை உறுதி செய்தது.

கேரியர் கிராப்

அந்த வகையில் சூர்யகுமார் யாதவ் ஒரு சாதாரண கிரிக்கெட் வீரர் அல்ல.
அவர் ஒரு வெற்றியின் சின்னம். வாய்ப்பு கிடைத்தால் மட்டுமல்ல, தயாராக இருந்தால் தான் வெற்றி கிடைக்கும் என்பதற்கு சான்று இவர்.  

சூர்யகுமார் கேரியர் கிராப் வித்தியாசமானது.

வயது 30 – டி20 அறிமுகம். சந்தித்த முதல் பந்திலேயே ஆறு ரன்கள் அடித்து அசத்தியவர்.

வயது 31 – முதல் டி20 சதம்

வயது 32 – உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ரேங்க்

வயது 32 – டி20 போட்டிகளில் 900 மதிப்பீட்டுப் புள்ளிகள்.

வயது 32 – சிறந்த வீரருக்கான ஐசிசி விருது.

வயது 33 – இரண்டாவது முறை சிறந்த வீரருக்கான ஐசிசி விருது.

வயது 33. – டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் முக்கிய வீர்ர்.

வயது 33 – இந்திய அணிக்கு டி20 கேப்டன்

வயது 34 – கேப்டனாக ஆசியக் கோப்பையை வெற்றி

வயது 35 – கேப்டனாக டி20 உலகக் கோப்பையை வெற்றி.

எல்லோருக்கும் சீக்கிரமாக வெற்றி தொடங்குவதில்லை, சில சமயங்களில் விடாமுயற்சியால்தான் வாய்ப்பையும் வெற்றியையும் பெற முடியும் என்பதற்கு சூர்யகுமார் வாழ்க்கையே உதாரணம்.

புதுமையான கேப்டன்ஸி

சூரிய குமார் பேட்டிங் மட்டுமல்ல, அவரது கேப்டன்சியும் வித்தியாசமானது.  அந்தந்த நேரத்துக்கு ஏற்றார் போல் பேட்டிங் வரிசையை மாற்றிக் கொண்டே வந்தார். யாருக்கும் நிலையான பேட்டிங் ஆர்டர் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தாலும், அதுவே அவருக்கு பல முறை வெற்றி தேடி தந்தது.

திலக் வர்மாவை நம்பர் 3ல் விளையாட வைத்தார். அபிஷேக் சர்மா உடன் சில முறை கில் ஓப்பனிங் செய்தார். ஜித்தேஷ் சர்மாவை கீப்பராக விளையாட வைத்தார்.  இஷான் கிஷனுக்கும் ஓப்பனிங் விளையாட வாய்ப்பு கிடைத்தது. பேட்டிங் மட்டுமில்லாமல் பவுலிங்கிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவந்தார்.

எப்போதும் பும்ரா ஓப்பனிங் மற்றும் டெத் ஓவர்களில் பந்து வீசுவார் ஆனால் சூரியா அவரை மிடில் ஓவரில் ஓவர் வீச வைத்தார். சிவம் துபேவை ஓவர் போட வைத்தார். யார் எப்போது பந்து வீசுவார்கள், யார் எப்போது பேட்டிங் செய்ய வருவார்கள் என்பது எதிரணிக்குத் தெரியவே தெரியாது. இப்படி பல தைரியமான முடிவுகளை எடுத்ததுதான் சூர்யகுமார் யாதவின் சீக்ரட் ஆஃப் சக்சஸ்.

நம்பிக்கை உள்ளவர்கள் ஒருபோதும் தோற்பதில்லை.

Leave a Comment