தம்பதிக்குள் ரகசியம் இருக்கலாமா..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : கணவன், மனைவிக்குள் ரகசியங்கள் இருக்கக்கூடாதா..? எல்லா விஷயங்களையும் மனைவியிடம் சொல்ல வேண்டுமா..?

  • கே.பார்த்திபன், கீரனூர்.

ஞானகுரு :

அன்பான மனைவி, நம்பிக்கையான துணைவி என்றாலும் அவரிடம் மனதில் இருக்கும் எல்லாவற்றையும் சொல்லக்கூடாது. குடும்ப ஒற்றுமைக்கு மனைவியிடம் பேசக்கூடாத ஐந்து விஷயங்களை அறிந்துகொள்ளுங்கள்.

  1. என் அம்மாவின் ருசியான கைப்பக்குவம் உனக்கு வரவில்லை என்பது போன்ற ஒப்பீடு செய்யவே கூடாது.
  2. கணவனுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று மரியாதையைக் கேட்டு வாங்கக்கூடாது.
  3. ஆடை கவர்ச்சியாகத் தெரிகிறது என்று குற்றம் சாட்டக்கூடாது. ஏனென்றால் உடல் என்பது அவரது உரிமை.
  4. உன் குடும்பத்தில் எல்லோரும் முட்டாள் என்பது போன்று பெண் பிறந்த வீட்டினரை அவமானப்படுத்தக்கூடாது.
  5. கடந்த காலத் தவறுகள், காதல் போன்றவைகளை மனைவி கூறியிருந்தால், அவற்றை ஒருபோதும் குத்திக்காட்டி பேசக்கூடாது.

கணவன், மனைவி உறவு புனிதமானது என்றாலும் மனதில் பட்டதை எல்லாம் பேசக்கூடாது. ஒவ்வொரு பெண்ணிடமும் பிடிக்காத சில விஷயங்கள் இருக்கவே செய்யும். அந்த குறைகளுடன் மனைவியை ஏற்றுக்கொள்வதே நல்ல கணவனுக்கு அழகு. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

கேள்வி : இந்த உலகில் நிலையான ஒன்று என்றால் எதை சொல்லலாம்..?

– பி.துரைப்பாண்டி, மார்டன் நகர்.

ஞானகுரு :

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற தத்துவம் மட்டுமே நிலையானது. துக்கம், கவலை, மகிழ்ச்சி, ஆசை, கோபம் போன்ற எல்லாமே கொஞ்ச நேரம் மட்டுமே தாக்குப்பிடிக்கும். இளமை, புகழ், ஆரோக்கியமும் கொஞ்ச காலம்தான். எனவே மாற்றத்தை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய மாற்றத்தை பயமாக எதிர்கொள்ளாமல் வாய்பாகக் கருத வேண்டும். மாற்றத்தை எதிர்ப்பவர் தோற்றுப் போகிறார். மாற்றத்தை ஏற்றுக்கொள்பவர் வெற்றி அடைகிறார்.

Leave a Comment