ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : கிராம வாழ்வு, நகர வாழ்வு எது சிறப்பு?
- மு.ராஜேஸ்வரி, இந்திரா நகர்.
ஞானகுரு :
மன நிறைவில்தான் சிறப்பு உள்ளது. அது கிராமத்தில் கிடைக்கலாம், நகரத்தில் கிடைக்கலாம், வெளிநாட்டில் கிடைக்கலாம். இவை எல்லாவற்றையும் விட, எங்கிருந்தாலும் அது சிறப்பு என்று எண்ணுவதே சிறப்பான மனநிலை.
……………….
கேள்வி : சிலர் ஆசைப்படு என்கிறார்கள், சிலர் ஆசைப்படாதே என்கிறார்கள். வாழ்க்கைக்கு ஏற்றது எது?
- ஏ.ராஜாமணி, காரைக்கால்.
ஞானகுரு :
வெற்றி வேண்டுமென்றால் ஆசைப்படுங்கள், நிம்மதி வேண்டுமென்றால் ஆசைப்படாமல் நிம்மதியாக இருங்கள். ஆனால், எல்லோரும் இரண்டுக்கும் ஆசைப்படுவதுதான் சிக்கலோ சிக்கல்.
ஆசைக்கும் ஆசைப்படாமைக்கும் சமநிலையைப் புரிந்துகொள்வதுதான் வாழ்க்கை பக்குவம். ஏனென்றால் ஆசை இல்லாத மனிதன் வளர்ச்சியடைய முடியாது.
ஒரு நல்ல வாழ்க்கை வேண்டும், குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும், சாதிக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும் என்பதெல்லாம் ஆசையிலிருந்தே பிறக்கின்றன.
அதேநேரம் அளவுக்கு மீறிய ஆசை பேராசையாக மாறும், அது மனஅழுத்தத்தை கூட்டும். அதனாலே புத்தர் “ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்று சொன்னார். அதேநேரம், வாழ்க்கைக்கு ஏற்ற ஆசை நல்லது.
அதாவது நிறைய கற்றுக்கொள்ள ஆசைப்படுவது நல்லது. ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுவது நல்லது. குடும்பத்தை உயர்த்த ஆசைப்படுவது நல்லது. ஆனால், எல்லோரையும் மிஞ்ச வேண்டும், எப்படியாவது பணம் சேர்க்க வேண்டும், பிறரை விட பெரியவன் ஆக வேண்டும் என்ற பேராசை துன்பத்தின் தொடக்கம்.
ஆசையைக் கட்டுப்படுத்தினால் ஆனந்தமாக வாழலாம்.
