சாமியார் ஆசையில் பள்ளி மாணவன்

Image

கவுன்சிலிங் கதை

பள்ளி மாணவர்களுக்கு படிப்பைத் தவிர வேறு எந்த பிரச்னையும் இல்லை என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கும் மன அழுத்தம் உண்டு என்பதை நிரூபிக்கும் ஒரு வாழ்க்கை சம்பவம்

தன்னுடைய மகனுக்கு ஒரு சிக்கலான பிரச்னை என்று சுந்தரேசனை அவரது தாயார் மரகதவள்ளி அழைத்து வந்தார்.

கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் சுந்தரேசன் அவ்வப்போது எங்காவது ஓடிப் போகிறான் என்பது தான் புகார். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து திரும்பி வருகிறான். ‘மனசு சரியில்லை, கோயிலுக்குப் போய் தங்கி நல்லா சாமி கும்பிட்டுத் திரும்பி வந்தேன் என்கிறான். மற்ற நாட்கள் எல்லாம் நன்றாக இருக்கிறான்.

எங்களிடம் சொல்லிவிட்டுப் போ, செல்போன் கொண்டுபோ, நாங்களும் வருகிறோம் என்று சொன்னால் கேட்பதில்லை. இவனது நடவடிக்கையைப் பார்த்தால் சாமியார் ஆகிவிடுவானோ என்று பயமாக இருக்கிறது என்று புலம்பினார்.

’’இதுக்காகவா கவலைப்படுறீங்க. நானும் கல்லூரி வயதில் நண்பர்களுடன் திடீரென ஊர் சுற்றப் போய்விடுவேன், வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் சொல்லாமல் போவேன். இதற்காக என் அப்பா மோசமாக அடிப்பார். ஆனாலும், அடுத்து நண்பர்கள் கூப்பிட்டால் ஓடிவிடுவேன். கல்லூரி வயதில் நிறைய பையன்கள் இப்படி செய்வதுண்டு. இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை’’ என்றபடி சுந்தரேசனைப் பார்த்தேன். அவன் முகத்தில் பிரகாசம் வந்தது.

ஆனால், ஒரு தவறான நபரிடம் கவுன்சிலிங் வந்திருப்பதாக நினைத்து கலங்கிவிட்டார் மரகதவள்ளி.

அதை பார்த்த சுந்தரேசன், ‘’இதெல்லாம் தப்பு கிடையாதுன்னு சொன்னா அம்மாவுக்குப் புரிய மாட்டேங்குது. தேவையில்லாம வருத்தப்படுறாங்க’’ என்று நான் சொன்னதை ஆமோதித்தான்.

‘’உங்க அம்மா பழைய காலத்து ஆளு. நான் உங்க அம்மாகிட்டே பேசிப் புரிய வைக்கிறேன், கொஞ்ச நேரம் வெளியே இருங்க’’ என்று சுந்தரேசனை வெளியே அனுப்பிவைத்தேன்.

பையன் வெளியே போனதும் நேரடியாக கோபத்தைக் காட்டினார். ‘’நீங்க இப்படி என்கரேஜ் செய்வீங்கன்னு தெரிஞ்சா கூட்டிட்டே வந்திருக்க மாட்டேன்’’ என்றார்.

’’பிள்ளைகளிடம் அவர்களுக்குப் பிடித்த பாஷையில் பேசினால் தான் உண்மையை அறிந்துகொள்ள முடியும். சரி, எப்போது முதல் இந்த மாற்றம், வேறு என்னென்ன பிரச்னைகள் என்பதை எல்லாம் விளக்கமாகச் சொல்லுங்கள்’’ என்றதும் பேசத் தொடங்கினார்.

‘’12ம் வகுப்பில் அவன் எதிர்பார்த்த மார்க் கிடைக்கலை. அவன் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் படிக்கிற காலேஜில் இவனுக்கு இடம் கிடைக்கலை. அந்த காலேஜ்ல மேனேஜ்மென்ட் கோட்டாவுல போக ஆசைப்பட்டான். ஆனால் என் வீட்டுக்காரர், ‘உன் மார்க்குக்கு எந்த காலேஜில் இடம் கிடைக்கிறதோ, அங்கே படி’ன்னு சொல்லிட்டார். அதனால கொஞ்ச நாள் ரொம்பவும் கோபமா இருந்தான். ஆனா, அதுக்குப் பிறகு ஒழுங்கா காலேஜிக்குப் போக ஆரம்பிச்சான்.

முதல் செமஸ்டர் வரைக்கும் நல்லா இருந்தான். அடுத்து ஒரு பரீட்சைக்கு சீரியசா நைட் எல்லாம் படிச்சிக்கிட்டு இருந்தான். நாங்க நல்லா தூங்கிட்டோம். காலையில எழுந்து பார்த்தா இவனை ஆளைக் காணோம். திருவண்ணாமலை கோயிலுக்குப் போகிறேன். தேட வேண்டாம்னு எழுதி வைச்சிட்டுப் போயிட்டான்.

எங்க வீட்டுக்காரர் உடனே கார் எடுத்துட்டு திருவண்ணாமலைக்குப் போனார், ஆனா, அவனை அங்கே கண்டுபிடிக்க முடியலை. ரெண்டு நாள் கழிச்சு வந்தான். திருவண்ணாமலைக்குப் போகலை, மதுரைக்குப் போயிட்டேன். சொக்கரையும் மீனாட்சியம்மனையும் தரிசனம் செஞ்சுட்டு வந்தேன்னு பிரசாதம் குடுத்தான். எப்படியோ திரும்பி வந்துட்டானேன்னு சந்தோஷப்பட்டோம். அதுக்கப்புறம் ஒழுங்கா காலேஜ் போயிட்டு இருந்தான். திரும்பவும் ஒரு நாள் காலையில் எழுந்து காணாமல் போயிட்டான்…இது வரைக்கும் நாலு தடவை ஓடிப் போயிட்டான்’’

‘’வீட்ல நீங்க ரொம்பவும் பக்தி, பூஜைன்னு இருப்பீங்களா..?’’

‘’அதெல்லாம் இல்லீங்க. தினமும் தீபம் ஏத்துறதோட சரி. எப்பவாது கோயிலுக்குப் போவோம். அவனும் அப்படித்தான். தினமும் சாமி கும்பிட மாட்டான். அவன் கோயிலுக்குத்தான் போறானான்னே தெரியலை. ஆனா, அவன் பேசுறது உண்மையா இருக்குது. டிக்கெட், பிரசாதம் எல்லாம் வைச்சிருக்கான். இவனை எப்படி தடுத்து நிறுத்துறதுன்னு புரியலை. எங்க டாக்டர்கிட்டே பேசுனோம். அவருதான் கவுனிலிங் கூட்டிட்டுப் போகச் சொன்னார்’’ என்றார்.

’’சரி… நீங்க வெளியே இருங்க. உங்க பையனை வரச்சொல்லுங்க. நான் உங்களைக் கண்டிச்சதா மட்டும் அவன்கிட்டே சொன்னா போதும்’’ என்று அனுப்பிவைத்தேன்.

அம்மாவிடம் பேசியதில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. அதாவது சுந்தரேசன் பக்திக்காக ஓடவில்லை. வேறு எதற்கோ பயந்து தப்பித்துப் போகிறான். என்ன பிரச்னை என்பதை அவன் தான் பேச வேண்டும். சுந்தரேசன் மிகவும் கேஷுவலாக வந்து அமர்ந்தான். அவனுடைய கல்லூரி குறித்து, ஆசிரியர்கள், நண்பர்கள் குறித்து பொதுவாக கொஞ்சநேரம் பேசிவிட்டு விஷயத்துக்கு வந்தேன்.

‘’எங்க அப்பாவுக்கு ஒவ்வொரு மாசமும் 7ம் தேதி சம்பளம். அந்த நேரத்துல மட்டும் நிறைய குடிச்சிட்டு வருவார். சண்டை போட்டு எங்க அம்மாவை அடிப்பாரு. அதைப் பார்க்கப் பிடிக்காமத்தான் நான் எங்காவது ஓடிப்போயிடுவேன். ரெண்டு மூணு நாள் கழிச்சு வருவேன். உனக்கும் அப்படி வீட்ல ஏதாவது பிரச்னை இருக்குதா..?’’ என்று கண்ணைப் பார்த்துக் கேட்டேன்.

அதுவரை ஜாலியாக இருந்த சுந்தரேசன் சட்டென சீரியஸாகி, ‘’என்ன இப்படி சொல்றீங்க… எனக்கு அப்படி பிரச்னை எதுவும் இல்லை. எங்க அப்பா குடிக்க மாட்டாரு, எங்க அம்மாவை அடிக்கவும் மாட்டார்’’ என்றான்.

‘’அப்படின்னா வேற எதுக்குப் பயந்து ஓடுறீங்க? காதல் விஷயம் ஏதாச்சும் இருக்குதா..?’’

இல்லை என்று தலையசைத்தான்.

‘’நீங்க பேசுறதை உங்க அம்மாகிட்டே சொல்ல மாட்டேன். உங்க பிரச்னையை சொல்லுங்க.…’’ என்று அழுத்திக் கேட்டேன்.

மீண்டும் அமைதியாக இருந்தான்.

‘’நான் கொஞ்ச நாள் ஓடிக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் தான், ஓடுறதால அந்த பிரச்னை தீரப்போறதில்லைன்னு புரிஞ்சது. அதனால, அம்மாவை எங்க அப்பா அடிக்க வந்தப்ப, தைரியா கையைப் பிடிச்சு நிறுத்தினேன். ’அம்மாவை அடிச்சீங்கன்னா இனிமேல் நான் சும்மா இருக்க மாட்டேன்’ன்னு எதிர்த்துப் பேசினேன். எங்க அம்மா அதுக்காக என்னை அடிச்சாங்க. ஆனா, அதுக்குப் பிறகு எங்க அம்மாவை அப்பா அடிச்சதே இல்லை. நீயும் என்ன பிரச்னைன்னு தெரிஞ்சு அதுல இருந்து தப்பிக்கணுமே தவிர, இப்படி ரொம்ப நாள் ஓடிக்கிட்டே இருக்க முடியாது’’ என்றேன்.

நிதானமாக யோசித்துப் பேசத் தொடங்கினான். ‘’நல்லா படிப்பேன். ஆனா, திடீர்னு ரொம்ப பிளாங்க் ஆயிடுது. எல்லாமே மறந்தது போல் தோணுது. பரீட்சை எழுதினாலும் ஃபெயில் ஆயிடுவேன். அதனால பரீட்சை எழுதப் பிடிக்கலை. மொத்தமா வீட்டை விட்டு ஓடிப் போறதா பிளான் செஞ்சேன். திருவண்ணாமலைக்குப் போறதா எழுதி வைச்சிட்டு சென்னையில தான் சுத்திக்கிட்டு இருந்தேன். என் ஃப்ரெண்ட்ஸ் ரூம்ல ஒரு நாள் தங்கினேன். வேற எங்காவது ஓடிப் போக நினைச்சாலும் தைரியம் வரலை. அதனால வீட்டுக்குத் திரும்பிட்டேன். அதுக்கப்புறம் பரீட்சை ஈசியா இருந்தா எழுதுவேன், இல்லைன்னா இப்படி ஊரை விட்டுக் கிளம்பிப் போயிடுவேன்…’’

‘’இப்படி ஓடிப்போய்க்கிட்டே இருந்தா பிரச்னை தீர்ந்துடுமா..?’’

‘’கடைசி வருஷம் மொத்தமா உட்கார்ந்து எழுதி பாஸ் பண்ணலாம். நிறைய பசங்க அப்படித் தான் எழுதுறாங்க, பாஸ் ஆயிடுறாங்க’’ என்றான்.

‘’நீ பரீட்சைக்குப் பயந்து தான் ஊரை விட்டு ஓடுறேங்கிறதை உங்க அம்மாவும் அப்பாவும் தெரிஞ்சிக்கிட்டா என்ன செய்வாங்க..?’’

‘’நீங்க சொல்லப்போறீங்களா..?’’

‘’ஒரு சில விஷயங்களை சொல்லத்தான் செய்யணும். உன்னை நினைச்சு அவங்க ரொம்ப காலம் இப்படி பயந்துட்டே வாழக்கூடாது. படிக்கிறதுக்குப் பிடிக்கலைன்னா நீ படிப்பை விட்டுட்டு உனக்குப் பிடிச்சதை செய்யலாம். இன்ஜினியரிங் இன்ட்ரஸ்ட் இல்லைன்னா வேற ஏதாச்சும் கோர்ஸ் சேர்ந்து படிக்கலாம். ஆனா, அதுக்காக வீட்டை விட்டு ஓடுறது சரியில்லை…’’

அமைதியாக இருந்தான்.

‘’உன்னோட அப்பா, அம்மாவுக்கு வயசாயிட்டே வருது. நீ ஓடிப்போற கவலையில் அவங்களுக்கு உடல் சரியில்லாமப் போயிட்டா என்ன செய்வ..?’’

‘’அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க’’ என்றான்.

‘’இந்த படிப்பு கஷ்டமா இருக்குதா… எதிர்காலத்தை நினைச்சு பயமா இருக்கா..?’’

‘’இல்லே, என்னோட கஸின் ரெண்டு பேர் அமெரிக்காவுல இருக்காங்க. பிஇ மட்டும் முடிச்சுடு, வேலையில சேர்த்துக்கிடுறேன்னு சொல்லியிருக்காங்க… ஆனா, ஒரு சில பாடம் படிக்கும் போது மட்டும் பயம் வருது. எழுத முடியாதுன்னு தோணுது. கேவலமா மார்க் வாங்குறதுக்குப் பதிலா அடுத்து எழுதிக்கலாம்னு நினைச்சுத்தான் தப்பிச்சு ஓடுறேன்’’ என்றான்.

அவனாகவே விஷயத்தை முழுமையாக ஒப்புக்கொண்ட பிறகு பிரச்னையைத் தீர்ப்பது ரொம்பவே சுலபம்.

‘’பரீட்சை எல்லாம் ஒரு விஷயமே இல்லை. மார்க்கை வைச்சு யாரும் யாரையும் ஜட்ஜ் பண்ணவே முடியாது. ஆனா, இதற்குப் பயந்து ஓடத் தொடங்கினால் அடுத்தடுத்து நிறைய விஷயங்களுக்கும் ஓட வேண்டியிருக்கும். பரீட்சைக்குத் தயாராகவில்லை என்றாலும் தைரியமாகப் போய் தெரிந்ததை எழுது. நீ எதுவுமே எழுதாமல் பூஜ்ஜியம் வாங்குவதை விட, எது கிடைத்தாலும் நல்லது தான். நீ பாஸ் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது. பிரச்னையை நேரடியாக மோதிப் பார். எத்தனை தூரம் தப்பி ஓடினாலும் என்றாலும் ஒரு நாள் நீ எழுதியே தீர வேண்டும். அந்த நாள் இன்றாக இருக்கட்டும். ஒரு வேளை பயம் தோன்றினால் என்னிடம் வாருங்கள். ஒரு மாத்திரை தருகிறேன். குழப்பத்தை அது தீர்த்துவிடும்’’

‘’அந்த மாத்திரையை இப்போதே கொடுங்கள்’’ என்றான்

‘’இப்போது தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறாய். ஆகவே, உனக்கு இப்போது மாத்திரை தேவை இல்லை. உனக்கு பயம் வரும் நேரத்தில் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறாய் என்பதை எங்கள் மருத்துவர் ஆய்வு செய்து, அதற்கேற்ப மாத்திரை தருவார். ஆனால், அது உனக்குத் தேவைப்படாது என்றே நினைக்கிறேன். அதையும் மீறி எங்காவது செல்ல வேண்டும் என்று தோன்றினால் உன் பெற்றோரிடம் தைரியமாக சொல்லிவிட்டே செல், ஊர் சுற்றச் செல்வது அல்லது நண்பர்கள் அறையில் இருப்பது தவறில்லை’’ என்றேன்.

அமைதியாக இருந்தான். அடுத்து அவனது அம்மாவையும் உள்ளே வரவழைத்துப் பேசினேன்.

‘’பிள்ளைகளுக்கு படிக்க வேண்டிய கடமை தவிர வேறு பிரச்னைகளே இல்லை என்றே எல்லா பெற்றோரும் நினைக்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கும்  எக்கச்சக்க பிரஸர்கள் இருக்கின்றன. காய்ச்சல், தலைவலி போன்று மன அழுத்தமும் வந்து போகவே செய்யும். உங்கள் பையனிடம் ஒரு பிரச்னையும் இல்லை. ஒரு வேளை எங்காவது செல்ல விரும்பினால் மகிழ்ச்சியுடன் அனுப்பி வையுங்கள். அவர் வந்தபிறகு அழுவது அல்லது குற்றம் சுமத்துவது வேண்டாம்… விரைவில் எதையும் நேரில் சந்திக்கும் தைரியமிக்கவராக மாறிவிடுவார்’’ என்று அனுப்பிவைத்தேன்.

அதன் பிறகு சுந்தரேசன் ஓடிப் போகவே இல்லை.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment