- எஸ்.கே.முருகன், ஞானகுரு ரிலேசன்ஷிப் கவுன்சிலிங்
காதல் தோன்றுவதற்கு வயது ஒரு தடையில்லை. ஆனால், டீன் ஏஜில் காதலில் விழும் பள்ளி மாணவர்களுக்கும், அவர்களை முறைப்படுத்த தெரியாத பெற்றோர்களுக்கும் கண்டிப்பாக ஆலோசனை தேவைப்படுகிறது.

முந்தைய காலகட்டத்தில் ஆணும் பெண்ணும் தனியே சந்தித்துப் பேசுவதும், தங்கள் எண்ணத்தை பரிமாறிக்கொள்வதும் மிகப்பெரும் சாகசமாகவும் சவாலாகவும் இருந்தது. அதனால் காதல் என்பது எங்கேயோ, எவருக்கோ நிகழ்வதாக இருந்தது.
ஆனால், தற்போது பள்ளி மாணவர்கள் அத்தனை பேர் கைகளிலும் செல்போன் இருக்கிறது. 143 என்று ஒரு மெசேஜ் அனுப்பி தங்கள் மனதை வெளிக்காட்டிவிட முடிகிறது. பெயர் போன்ற அடையாளங்களை மறைத்தும் காதலை சொல்ல முடிகிறது. அதனால் காதலில் விழும் டீன் ஏஜ் வயதினர் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு பெருகியுள்ளது.
அதேநேரம் காதலை லைட்டாக எடுத்துக்கொள்ளும் இளைஞர்கள், இளைஞிகளே அதிகம். அதாவது ஒருவர் காதலிக்கவில்லை என்றதும் வேறு ஒருவரை தேடும் அளவுக்கு டேக் இட் ஈசி பாலிசியாக நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த மாதிரியான நபர்களால் அவர்களுக்கும் பிரச்னை இல்லை, மற்றவர்களுக்கும் பிரச்னை கிடையாது. ஆனால், காதல் என்பதை புனிதமாகவும் சீரியஸாகவும் சிலர் எடுத்துக்கொள்வதே பல பிரச்னைகளுக்குக் காரணமாகிறது. அப்படி ஒரு மாணவியை சந்தியுங்கள்.
………
பிளஸ் 1 படிக்கும் கல்பனா பிரைட்டான மாணவி. படிப்பது, எழுதுவது, டியூசன் போவது என்று எப்போதும் துடிதுடிப்புடன் திரிவாள். அவள் திடீரென பள்ளிக்குப் போக மாட்டேன் என்று வீட்டுக்குள் முடங்கியதைக் கண்டு பெற்றோர் பயந்தே போனார்கள். எப்படியெல்லாம் கேட்டும் தெளிவான காரணம் சொல்லவும் மறுத்துவிட்டாள்.
பள்ளியில் ஆசிரியர் அல்லது வேறு யாரோ ஒருவர் ஏடாகூடமாக நடந்துவிட்டதால் பள்ளிக்குச் செல்ல அஞ்சுகிறார் என்றே பெற்றோர் முடிவுக்கு வந்தனர். அதனால் அவளுக்குத் தெரியாமல் பள்ளிக்குப் போய் விசாரித்தார்கள். அங்கே கல்பனாவுக்கு ஒரு பிரச்னையும் இல்லை என்பது உறுதியாகவே, குழம்பிப் போனார்கள். இந்த நேரத்தில் நண்பர் மூலமாக எங்கள் கவுன்சிலிங் சென்டரைப் பற்றி கேள்விப்பட்டு கல்பனாவை கூட்டி வந்தார்கள்.
கல்பனாவிடம் தனியே பேசிக்கொள்வதாகச் சொல்லி, பெற்றோரை அனுப்பிவிட்ட பிறகும், அவர் மனம் திறந்து பேசுவதற்கு முன்வரவில்லை. எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். கல்பனா போன்ற வசதியான வீட்டுப் பெண் பிள்ளைகளுக்கு இரண்டே பிரச்னைகளே அதிகம் வருகின்றன. ஒன்று படிப்பு, இரண்டாவது காதல்.
கல்பனா நன்றாக படிப்பவள். அதில் பிரச்னை இல்லை என்று பள்ளியிலும் உறுதிபடுத்திவிட்டார்கள். ஆகவே, காதல் பிரச்னையாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதை உறுதிபடுத்திக்கொள்வதற்காக பூடகமாகப் பேசினேன்.
நீ பள்ளிக்குச் செல்ல விரும்பாதது பற்றி உன் பெற்றோர் என்னிடம் இரண்டு நாட்களுக்கு முன்னரே சொல்லிவிட்டார்கள். அதனால் உன்னுடைய தோழியை சந்தித்துப் பேசினேன். அவள் உன்னுடைய பிரச்னையை முழுமையாகச் சொல்லிவிட்டாள். நான் அதை கண்டிப்பாக உன் பெற்றோரிடம் சொல்ல மாட்டேன். ஆகவே, நீ தைரியமாக மனம் விட்டுப் பேசலாம் என்று சொன்னதும், எதிர்பார்த்தது போலவே அதிர்ந்து போனாள்.
’’யாருகிட்டே பேசினீங்க… கண்டிப்பா எங்க அப்பாகிட்டே சொல்ல மாட்டீங்கதானே..?’’ என்று மிரண்டாள். நான் உறுதியளித்ததும் மளமளவென பேசத் தொடங்கினாள்.
கல்பனாவுக்கு அவளுடன் படிக்கும் ராகவன் மீது காதல் வந்திருக்கிறது. ஆனால், அவனிடம் நேரில் பேசுவதற்கு தயக்கம். அதனால் தோழி ராஜலட்சுமியிடம் அவளுடைய விருப்பத்தைச் சொல்லியிருக்கிறாள். ராஜலட்சுமியும் ராகவனும் ஒரே தெருவில் வசிப்பதால், எப்படியாவது எங்களை சேர்த்துவை என்று அவளிடம் கெஞ்சியிருக்கிறாள்.
பேசுகிறேன், பேசுகிறேன் என்று நாட்களை தள்ளிப்போட்டிருக்கிறாள் ராஜலட்சுமி. ஒரு நாள் திடீரென, ‘ராகவன் என்னைத்தான் காதலிக்கிறான்… அதனால் தேவையில்லாமல் நீ மனதில் ஆசையை வளர்த்துக்கொள்ளாதே.. பிறகு உன் வீட்டில் சொல்லிவிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறாள்.
நான் காதலித்த ராகவனை நீ எப்படி காதலிக்கலாம் என்று ராஜலட்சுமியிடம் கல்பனா சண்டை போட்டிருக்கிறாள். அதற்கு அவள், எனக்கு அவன் மீது ஆரம்பத்தில் இன்ட்ரஸ்ட் இல்லை, நீ கூறிய பிறகுதான் எனக்கு காதல் வந்தது. அவனும் ஏற்றுக்கொண்டான் என்று சொல்லியிருக்கிறாள்.
ஆனால், இதை நம்பமுடியாமல் தவித்திருக்கிறாள் கல்பனா. தன்னுடைய முதல் காதலை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் முடிவெடுத்திருக்கிறாள்.
ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ராகவனிடம் பேசியிருக்கிறாள். அவன் மிகவும் தெளிவாகப் பேசியிருக்கிறான். ‘எனக்கு ராஜலட்சுமியை சின்ன வயதிலிருந்தே பிடிக்கும். அவள் என்னை காதலிக்கிறாள், அதனால் நானும் அவளை காதலிக்கிறேன். உன்னை எனக்கு எப்போதுமே பிடிக்காது, அதனால் காதல் என்று பேசாதே…’ என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி இருக்கிறான்.
தன்னை ராகவன் ரொம்பவும் கேவலமாகப் பேசிவிட்டான், மட்டமாக நினைத்துவிட்டான் என்று கல்பனா அதிர்ந்தே போனாள். இந்த அவமானத்துடன் எப்படி பள்ளிக்குப் போக முடியும் என்றே பள்ளிக்குப் போகாமல் மட்டம் போட்டிருக்கிறாள்.
’’ராஜலட்சுமியிடம் தோற்றுப்போன நான் எப்படி அந்த பள்ளிக்கு திரும்பப் போக முடியும்… என் காதல் போய்விட்டது, என் வாழ்க்கை முடிந்துவிட்டது…’’ என்று அழுதாள்.
ஒரு பொருளை திருடியவர் தான் அதற்காக அவமானப்பட வேண்டும். நீ காதல் செய்தது தவறு இல்லை, அதை தோழி மூலம் சொல்லியதும் தவறு இல்லை. அவள் சந்தர்ப்பவாதியாக மாறிவிட்டாள் என்றால், அவளே உன்னை பார்த்து கலவரப்பட வேண்டும்.
நீ நிஜமாக ராகவனை காதலிக்கிறாய் என்றால், அவனை பிடித்துவைக்க நினைக்க வேண்டாம். அவன் சந்தோஷமாக இருக்கட்டும் என்று விலகிவிடு. அதுவே உண்மையான காதலாக இருக்கும். உன் மீது விருப்பம் இல்லாத ஒருவனைக் கண்டு நீ எதற்கு தோற்றுப்போனதாகக் கருத வேண்டும். உன்னைப் போன்ற ஒரு பெண் கிடைக்கவில்லை என்று அவனே பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டும்.
இவற்றை எல்லாம் விட்டுத்தள்ளு. இப்போது உனக்கு காதலிப்பதற்கான வயது இல்லை. இப்போது வருவதெல்லாம் இனக்கவர்ச்சி மட்டுமே. முதலில் நீ படித்து முடித்து, உன்னை காப்பாற்றிக்கொள்ளும் அளவுக்கு பொருளாதார சுதந்திரம் பெற்றுக்கொள். அதன்பிறகே காதலிக்கும் தகுதி உனக்கு வந்து சேரும், அதன் பிறகே ராகவனுக்கும் ராஜலட்சுமிக்கும் அந்த தகுதி வரும். நாளை வா… காதலுக்கு என்னவெல்லாம் தகுதிகள் தேவை என்று சொல்கிறேன் என்று அடுத்த நாள் வரச் சொன்னேன்.
ஆர்வமுடன் வந்தாள். காதல் செய்வதற்கு முதலில் உடல் தகுதி வேண்டும். அது இன்னமும் உனக்கு வரவில்லை, வளரவும் இல்லை. அடுத்ததாக பொருளாதார தகுதி வேண்டும் அதுவும் உனக்கு வரவில்லை இவை எல்லாவற்றையும் தாண்டி உன்னை மதிக்கும் ஒரு நபரை நீ காதலிக்க வேண்டும். இதுபோன்ற எந்த தகுதியும் இல்லாத ஒரு பையனுக்காக உன் படிப்பையும் எதிர்காலத்தையும் வீணாக்கப் போகிறாயா என்று அடுத்தடுத்த நாட்களில் பேசியதும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டாள்.
நீ விரும்பினால் வேறு பள்ளிக்கு மாற்றுவதற்கு உன் பெற்றோரிடம் பரிந்துரைக்கிறேன் என்று சொன்னதும், ‘’அந்த பள்ளியில் எனக்கு என்ன பிரச்னை? எனக்கு ராகவன்னால் ஒரு ஜூஜூபி…’’ என்று தைரியமாகச் சிரித்தாள் கல்பனா.
அதன்பிறகு கல்பனாவின் பெற்றோர்களையும் அழைத்துப் பேசினேன். கல்பனாவிடம் குழப்பம் இருப்பது அறிந்ததும் ஆலோசகரிடம் கூட்டிவந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தேன்.
ஏனென்றால், இந்த இடத்தில் தான் நிறைய பெற்றோர்கள் குழம்பிவிடுகிறார்கள். தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். டீன் ஏஜ் வயது குழப்பங்கள் நிறைந்தது என்பதை அத்தனை பெற்றோர்களும் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களும் டீன் ஏஜ் வயதை கடந்தே வந்திருப்பார்கள் என்றாலும், தங்கள் காலத்தைப் போலவே இன்றும் இளையவர்கள் இருப்பார்கள், இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது.
இந்த காலத்தில், பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று ஒரு பிள்ளை அடம் பிடிப்பது தெரிந்தால் அடிப்பது, மிரட்டுவது போன்ற வழிகளில் ஈடுபடக்கூடாது. முதலில், அவர்களுக்கு தனிமை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பெரும்பாலான பிள்ளைகள் அந்த தனிமையிலே தெளிவு பெற்று மனம் மாறிவிடுவார்கள். அதையும் தாண்டி அடம் பிடிக்கும் பிள்ளைகளை மருத்துவர் அல்லது ஆலோசகர்கள் மூலம் பேசுவதே சரியாக இருக்கும்.
முளைச்சு மூணு இலை விடலை… அதுக்குள்ள காதல் கேட்குதா என்று மிரட்டுவதும் விரட்டுவதும் காதல் மீது அவர்களுக்கு மேலும் மேலும் பிடிமானத்தையும் பிடிவாதத்தையும் உருவாக்கிவிடும். இந்த வயதில் காதல் வரவில்லை என்றால்தான் அச்சப்பட வேண்டும். பள்ளி வயதில் காதல் செய்கிறார்கள் என்றால் அவர்கள் உடலில் ஹார்மோன் நன்றாக செயலாற்றுகிறது என்றே அர்த்தம்.
காதல் வயப்பட்ட டீன் ஏஜ் வயதினர் காற்றில் மிதப்பார்கள். இந்த உலகிலேயே தங்களைவிட பாக்கியசாலிகள் யாருமில்லை என்று நினைப்பார்கள். தங்களை விதவிதமாக அலங்கரித்துக்கொள்வார்கள். அவ்வப்போது சிரிப்பார்கள்.
இப்படிப்பட்ட அறிகுறி பிள்ளைகளிடம் தெரியவந்தவுடன் பெற்றோர்கள் அறிவுரை சொல்லாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால், பெற்றோர்கள் எல்லோருமே காதலுக்கு எதிரிகள் என்ற எண்ணமே பிள்ளைகளிடம் இருக்கும். நீங்கள் எத்தனை நல்லவிதமாகச் சொன்னாலும், அதன்பின்னே வில்லத்தனம் ஒளிந்திருக்கிறது என்றே நினைப்பார்கள்.
ஆகவே, உங்கள் குடும்பத்தில் மிகவும் தெளிவான ஒரு நபர் மூலம் பேசுவதற்கு முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், வயதும் அனுபவமும் மட்டும் இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கான தகுதி இல்லை. நல்ல தெளிவும் புரிதலும் உள்ள நபர் கிடைக்கவில்லை என்றால் மருத்துவர் அல்லது ஆலோசகர்களை சந்தித்துப் பேசுங்கள். அவர்கள் காதல் தவறு அல்ல, இந்த வயதில் காதலிப்பது மட்டுமே தவறு என்று புரியவைப்பார்கள்.
தொடர்புக்கு : 9840903586