ஏழை என்பதே நிஜம்..!
பொருளாதார நிபுணர்கள் மக்களை ஏழைகள், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கம் என்று மூன்று ஜாதிகளாகப் பிரிக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் ஏழை, பணக்காரர்கள் என இரண்டு வர்க்கம் மட்டுமே உலகில் உள்ளனர் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
ஆம், நடுத்தர வர்க்கம் என்பது ஒரு கற்பனை. அதாவது, தங்களை பணக்காரர்களாக எண்ணிக்கொள்ளும் ஏழைகள் இவர்கள். விரைவில் தாங்கள் பணக்காரர்களாகி விடுவோம் என்று நம்புவார்கள். ஆனால், சம்பளத்துக்கு வேலை செய்வதை விடவே மாட்டார்கள்.
மாத சம்பளத்துக்காரரால் ஒருபோதும் பணக்காரர் ஆகமுடியாது என்ற தியரி இவர்களுக்கு ஒருபோதும் புரியாது. ஆனாலும், தங்கள் வாழ்க்கை ஏழைகளை விட மேம்பட்டது என்று எண்ணிக்கொள்வதால் அதில் கொஞ்சம் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.
ஆனால், அந்த மகிழ்ச்சி உண்மை அல்ல. நடுத்தர வர்க்கத்தினர் ஒருபோதும் பணக்காரர்கள் போல் நடந்துகொள்ளவே மாட்டார்கள். அதற்கு சில உதாரணங்கள் இங்கே.
- எதிர்பாராமல் பணம் கிடைத்தால் உடனடியாக அதை வங்கியில் நீண்ட நாளுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் போட்டு வைப்பார்களே தவிர, விரும்பிய இடங்களுக்கு டூர் செல்வது, விருப்பமான பொருள் வாங்குவது என்று மனதுக்குப் பிடித்த வகையில் அந்த பணத்தை செலவழிக்க மாட்டார்கள்.
- கார் வீட்டில் இருக்கிறது, நேரம் இருக்கிறது என்றாலும், திட்டமிடாமல் ஒரு அவுட்டிங் போக முயற்சிக்க மாட்டார்கள்.
- அறையை விட்டு கொஞ்சநேரம் வெளியே போவதாக இருந்தாலும் ஏசியை அணைத்துவிட்டே செல்வார்கள்.
- ஹோட்டலில் ஆர்டர் செய்தது மீந்துவிட்டால், மீதமானதை பொட்டலம் கட்டி வீட்டுக்கு வாங்கிவருவார்கள்.
- எப்போது ஆஃபர் வரும் என்று காத்திருந்து பொருட்கள் வாங்குவார்கள்.
- தங்க நகைக்கு ஏதேனும் டிஸ்கவுண்ட் கிடைக்குமா என்று மேனேஜரிடம் கெஞ்சுவார்கள். இதற்காக நாலைந்து ஃபுளோர் ஏறி இறங்குவார்கள்.
- ஒன்று வாங்கினால் ஒன்று ஃப்ரீ என்று தகவல் தெரிந்தால், தேவை இல்லை என்றாலும் அந்த பொருட்களை வாங்கிப் போடுவார்கள்.
- தீபாவளி, பொங்கலுக்கு இலவசமாக வேட்டி, சேலை, பணம் கொடுத்தால் தயக்கமே இல்லாமல் ரேஷன் கடை வரிசையில் நின்று வாங்குவார்கள்.
- வீணாகிப் போன கடிகரம், பழைய பாத்திரம், பேப்பரை வெளியே வீச மாட்டார்கள். மிகவும் பத்திரமாக சேமித்து ஒட்டுமொத்தமாகப் போட்டு காசாக்குவார்கள்.
- கிரிக்கெட் மேட்ச், சினிமா விழாக்களுக்கு ஓசி டிக்கெட் கேட்டு பலரிடமும் கெஞ்சி வாங்குவார்கள்.
- இரவு நேரத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்தால் ரேட் குறைவு என்பது போன்ற விஷயங்களில் தெளிவாக இருப்பார்கள்.
- வாக்கிங் போவதற்கு ஷூ வாங்கியிருந்தாலும் சாதா செருப்பு அணிந்தே போவார்கள். அது ஷோ ரூமில் மட்டுமே இருக்கும்.
- பிராண்டட் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள், அதே நேரம் எந்த பிராண்ட் ரேட் குறைவானது என்று கூகுளில் ஒப்பிட்டுப் பார்த்தே வாங்குவார்கள்.
- ஆர்கானிக் என்று சொல்லிவிட்டாலே கூடுதல் விலை கொடுத்து வாங்குவார்கள். அதன் பெருமையை பேசிக்கொண்டே இருப்பார்கள்.
- வேறு எந்த நிறுவனத்திலாவது ஆட்களை பணி நீக்கம் செய்வது தெரியவந்தாலே பதறிவிடுவார்கள். தங்கள் வேலைக்கும் ஆபத்து வரும் என்று அச்சப்பட்டு செலவுகளை குறைக்கத் தொடங்குவார்கள்.
- கடன் வாங்கியாவது திருமணம், நிச்சயம் போன்றவற்றை பிரமாண்டமாக செய்வார்கள்.
நடுத்தர வர்க்கத்தினருக்கு திடீரென பெரிய மருத்துவச் செலவு அல்லது வேலை இழப்பு ஏற்பட்டால் ஒட்டுமொத்தமாக சரிந்து ஏழ்மை நிலைக்கு வந்துவிடுவார்கள். வீடு, கார் போன்றவற்றை தவணையில் வாங்கி கட்ட முடியாமல் விற்கும் எல்லோரும் ஏழைகளே தவிர, நடுத்தர வர்க்கம் அல்ல.
பணக்காரர்கள் போன்று நடிப்பது மனப்பிறழ்வு நோய் என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். எனவே, ஏழையாக இருப்பதில் எந்த தவறும் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். பணக்காரர்கள் போன்று நடிப்பதற்கு ஆசைப்பட்டு மகிழ்ச்சியை இழந்துவிடாதீர்கள்.
இந்த கட்டுரை வெளியாகியிருக்கும் ஞானகுரு மகிழ்ச்சி ஜூன் மாத இதழ் முழுமையாகப் படிப்பதற்கு இந்த லிங்க் தொட்டுச் செல்லுங்கள். அட்டையைத் தொட்டால் இதழ் விரியும். படியுங்கள் பரப்புங்கள்.