என்ன செய்தார் சைதை துரைசாமி – 490
புரட்சித்தலைவி ஜெயலலிதா அத்தனை சீக்கிரம் யாரையும் பாராட்டவே மாட்டார். அதேநேரம், அவர் எதிர்பார்ப்பை விஞ்சும் வகையில் செயலாற்றினால் மனம் திறந்து பாராட்டுவார்.
அப்படி புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பாராட்டு பெற்ற தருணங்களை விவரிக்கிறார் சைதை துரைசாமி. ’’நான் புரட்சித்தலைவியின் பெயரில் அம்மா இலவச திருமண மண்டபத்தைக் கட்டி அவரை திறந்துவைக்க அழைத்தேன். அப்போது புரட்சித்தலைவி, ‘என்னால் பயன் அடைந்த யாரும் செய்யாத ஒரு காரியத்தை என்னால் எந்த பயனும் அனுபவிக்காத நீங்கள் செய்திருக்கிறீர்கள். ’என்னுடைய வாழ்நாளில் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களில் இன்றைய நாளும் ஒன்று’ என்று நெகிழ்ச்சியுடன் என்னை பாராட்டினார்.
அதேபோல் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு மகத்தான வெற்றி கிடைத்தபோது, முதல் பூங்கொத்தை என்னிடமிருந்து பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் வாழ்த்து கூறியதும், ‘இந்த வெற்றிக்கு நீங்கள் தொடங்கிய அம்மா உணவகத்திற்கும் முக்கியப் பங்கு இருக்கிறது’ என்று பெருந்தன்மையுடன் பாராட்டினார்.
புரட்சித்தலைவர் பெயரில் நான் தொடங்கி நடத்திவரும் மனிதநேய அறக்கட்டளையின் செயல்பாடுகளையும் வெற்றியையும் அறிந்த புரட்சித்தலைவி, ‘எம்.ஜி.ஆருக்கு நீங்கள் தொடங்கிய அறக்கட்டளையைக் கண்டு பொறாமையாக இருக்கிறது. அதேபோன்று என் பேரில் ஒரு அறக்கட்டளை தொடங்கி தமிழகம் முழுக்க இளைய சமுதாயத்திற்கு உதவுங்கள்’ என்று கூறினார். அந்த அறக்கட்டளைக்கு என்னையும் பூங்குன்றனையும் நிர்வாகிகளாக நியமித்து, பல நூறு கோடி ருபாய் வைப்பு நிதி ஒதுக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்தார். உடல்நலம் காரணமாக அவரது ஆசை நிறைவேறவில்லை என்றாலும் புரட்சித்தலைவரின் வள்ளல்தன்மைக்கு வாரிசாகவே புரட்சித்தலைவியை நான் பார்க்கிறேன்…’’ என்கிறார்.
- நாளை பார்க்கலாம்.
