மருத்துவப் புரட்சி
உடல் எடையைக் குறைத்து அழகூட்டுவதற்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியை மறந்து, ஒஸம்பிக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள் பிரபலங்கள்.
சினிமா பிரபலங்கள், மாடலிங், தொழிலதிபர்கள் என்று பணம் படைத்தோர் மத்தியில் ஒஸம்பிக் கலாச்சாரம் பெருகிவருகிறது. வாரம் ஒரு ஊசி அல்லது மாத்திரை மூலம் அழகு, இளமையை தக்கவைக்கிறார்கள். வெளிநாடுகளில் ஒஸ்ம்பிக் பயன்படுத்துவதை பிரபலங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், நம் பிரபலங்கள் இதை ரகசியமாகப் பயன்படுத்துகிறார்கள்.
அது என்ன ஒஸம்பிக்
டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மருந்து அழகு தரும் மருந்தாக மாறியிருக்கிறது. அதாவது, டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறிய பெப்டைட் மூலக்கூறு. டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ என்ற மருந்து நிறுவனம் உருவாக்கிய ‘செமக்ளூடைடு’ என்ற மூலக்கூற்றின் பிராண்ட் பெயர்தான் ஒஸம்பிக். இந்த மருந்தின் பக்கவிளைவு காரணமாக உடல் எடை குறைவு ஏற்பட்டது. இதனாலே இன்று ஒஸம்பிக் உலகம் முழுக்க பாப்புலராகிவிட்டது. ஊசியாக வாரம் ஒரு நாள் போட்டுக்கொள்ளும்படி கண்டுபிடிக்கப்பட்ட ஒஸம்பிக், இப்போது மாத்திரை வடிவத்திலும் கிடைக்கத் தொடங்கிவிட்டது.
ஒஸம்பிக் என்ன செய்கிறது?
உணவு ஓரளவு சாப்பிட்டு வயிறு நிரம்பியதும், சாப்பிட்டது போதும் என்று மூளைக்கு ஹார்மோன் சிக்னல் அனுப்புகிறது. வழக்கமாக இந்த சிக்னல் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். ஆனால், ஒஸம்பிக் எடுத்துக்கொண்டால் வயிறு நிரம்பிவிட்டது என்ற சிக்னல் மூளைக்கு சென்றுகொண்டே இருக்கும். இதனால் உணவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே மூளைக்கு வராது.
அதோடு, உணவு இரைப்பையில் நீண்ட நேரம் தங்கியிருப்பதற்கும் ஒஸம்பிக் உதவுகிறது. இதனாலும் பசி எண்ணம் வருவதில்லை.
சுருக்கமாக சொல்வது என்றால் இது ஜிஎல்பி1 ஹார்மோன் போன்று செயல்பட்டு மனிதரின் வயிற்றுப்பசியைக் குறைக்கிறது, வயிற்றில் உணவு ஜீரணத்தை மெதுவாக்குகிறது. மேலும் ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் குறைவாக சாப்பிட்டாலே போதும் என்ற நிலை உருவாகிறது. இதனால் உடல் எடை அதிவேகமாக குறைகிறது
ஹாலிவுட் கலாச்சாரம்
இந்த ஒஸம்பிக் ஊசியை வாரம் ஒரு நாள் எடுத்துக்கொள்வதாக வெளிநாட்டு பிரபலங்கள் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக ஓப்ரா வின்ஃப்ரே, எலான் மாஸ்க், கிறிஸ்சி டெய்கன், ஷரான் ஓஸ்போன்மே, டிரேசி மார்கன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதன் காரணமாக வெளிநாட்டு பணக்காரர்கள் மத்தியில் மிகப்பெரும் கலாச்சார மாற்றம் உருவாகிவிட்டது.
உடல் எடை குறைப்பதற்கு நீண்ட காலம் போராடிய ஓப்ரா வின்ஃப்ரே இந்த மருந்து பயன்படுத்தியதில் எந்த அவமானமும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்த பிறகே மற்ற பிரபலங்களும் ஒப்புக்கொள்ளத் தொடங்கினார்கள்.
இந்தியாவில் கள்ளச்சந்தை
இந்தியாவில் ஒஸம்பிக் ஊசிக்கு அங்கீகாரம் இல்லை என்பதால் கள்ளச்சந்தையில் கிடைக்கிறது. ஒரு ஊசி ஒரு லட்சம் ரூபாய் என்றாலும் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனை மாத்திரையாக வாங்கிக் கொடுத்து மருத்துவர்கள் அட்டகாசமாக பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த மருந்துகளை இந்தியாவின் முன்னணி மருத்துவ நிறுவனங்கள் இப்போது தயாரிக்கத் தொடங்கிவிட்டன. அடுத்த ஆண்டுக்குள் சட்டபூர்வமாக கிடைக்கத் தொடங்கும் என்கிறார்கள்.
நீரிழிவு, உடல் பருமன், இதயநோய்க்கு இந்த மருந்து பயன்படுகிறது என்றாலும், அழகுக்காக மட்டுமே இதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவருகிறது.
பக்கவிளைவுகள்
உடலுக்குத் தேவையில்லாமல் மருந்து எடுத்துக்கொள்ளும்போது, பக்கவிளைவும் தவிர்க்க முடியாது. இந்த மருந்து பயன்படுத்துபவர்களில் பெரும்பாலோர் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், சோர்வு போன்ற தொந்தரவுகளை அனுபவிக்கிறார்கள் அதோடு அதிரடி எடை குறைப்பு காரணமாக முடி உதிர்வு உண்டாகிறது. இரைப்பையின் இயக்கம் குறைக்கப்படுவதால் எதையும் எளிதில் செரிக்க முடியாத அளவுக்குச் சிக்கல் உருவாகலாம்.
கணையம் அதீதமாகத் தூண்டப்படுவதால், உயிருக்கு ஆபத்தான கணைய அழற்சி மற்றும் பித்தப்பைக் கற்கள் உருவாகவும் வாய்ப்பு உண்டாகிறது. கொழுப்போடு சேர்ந்து தசைகளும் கரைந்துபோவதால் உடல் பலவீனத்திற்கு உள்ளாகிறார்கள். அதோடு தைராய்டு குடல்வாய் அழற்சி ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
மீட்புச் சிக்கல்
இந்த மருந்து உடல் எடையைக் குறைத்து அழகு தருவதுடன் ஆபத்தும் தருகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு கட்டத்தில் இந்த மருந்து பயன்படுத்தியது போதும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். அதனால் உடனடியாக உடல் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவதில்லை. ஹார்மோன் குளறுபடி, இரைப்பை செரிமானச் சிக்கல் ஏற்படுவதால் நிரந்தரச் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். எனவே, இந்த மருந்தை மருத்துவர் கண்காணிப்பில் மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
நிறைய பிரபலங்கள் இதனை பயன்படுத்துவதால், இந்த மருந்து பாதுகாப்பானது என்று அர்த்தமில்லை. உடல் பருமன், நீரிழிவு, இதய நோயாளிகள் சிலருக்கு நன்மை கிடைக்கிறது என்றாலும் கடுமையான பக்கவிளைவுகளுக்கும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இதை அழகு சாதனப் பொருள் போன்று பயன்படுத்தினால், மிகப்பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
