சினிமாவில் எம்.ஜி.ஆரின் உலக சாதனை

தலைமைக்கு இலக்கணம்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சினிமாவிலும் அரசியலிலும் வெற்றி மேல் வெற்றி பெற்றவர். அதேநேரம் அவர் சினிமாவில் நிகழ்த்திய சாதனை உலக அளவில் யாராலும் முறியடிக்க முடியாத ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா..?

உலகம் முழுக்கவே சினிமா வணிக நோக்கத்தில் தயாரிக்கப்படுகின்றன. அதனால் வெற்றி தரும் கதைக்கு ஏற்ற நடிகர்களை பயன்படுத்துவதே சினிமாவின் இலக்கணம்.

ஆனால், எம்.ஜி.ஆர். படங்களுக்கு மட்டும் அந்த இலக்கணம் பொருந்தாது. ஏனென்றால் எம்.ஜி.ஆர் என்ற நடிகருக்காகவே பிரத்யேகமாக கதை, வசனம், பாடல், காட்சியமைப்புகள் உருவாக்கப்பட்டன.

மனிதாபிமானம்

சினிமாவில் எம்.ஜி.ஆரின் கேரக்டர் இப்படித்தான் இருக்கும் என்று சுலபமாக சொல்லிவிட முடியும். எல்லா படங்களிலும் எம்.ஜி.ஆர். நேர்மையான, திறமையான, பாசமான நாயகனாக இருப்பார். எம்.ஜி.ஆர். திருட மாட்டார். எம்.ஜி.ஆர். குடிக்க மாட்டார். எம்.ஜி.ஆர் யாரையும் ஏமாற்ற மாட்டார். தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் மீது பாசமாக இருப்பார்.

எம்.ஜி.ஆரின் படங்கள் எல்லாமே நேர்மை, நியாயத்தைப் போதிக்கும். உழைப்புக்கும் மூத்தோருக்கும் மரியாதை கொடுக்கும். தவறு செய்யும் வில்லன்கள் கடைசியில் திருந்திவிடுவார்கள். அதோடு கதை, வசனம், பாடல்கள், கேமரா, எடிட்டிங் என எல்லாவற்றிலும் எம்.ஜி.ஆருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

நேர்மைக்கு மரியாதை

ஏழை, எளிய மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலே எம்.ஜி.ஆர். ஒவ்வொரு படத்தையும் ஒரு வாழ்க்கைப் பாடமாகவே எடுத்தார். அதனாலே எம்.ஜி.ஆரை வாத்தியார் என்று அழைத்தார்கள். எம்.ஜி.ஆர். எங்கள் வீட்டுப் பிள்ளை என்று கொண்டாடினார்கள். எம்.ஜி.ஆர். போன்ற பிள்ளை, எம்.ஜி.ஆர். போன்ற சகோதரர், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர் வேண்டும் என்று மக்கள் நினைத்ததாலே அவருக்கு வெற்றி மேல் வெற்றி கொடுத்தார்கள். 

1954ம் ஆண்டு மலைக்கள்ளன் படம் வெற்றி அடைந்தபிறகு கிட்டத்தட்ட 100 படங்கள்  எம்.ஜி.ஆருக்காகவே உருவாக்கப்பட்டன. உலகில் வேறு எந்த ஒரு நடிகருக்காகவும் இத்தனை படங்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதில்லை என்பது ஒரு மகத்தான சாதனை. இப்படி ஒரு நடிகர் உலகம் முழுக்க வேறு எங்கேயும் இல்லை, இனியும் உருவாக முடியாது என்பது எம்.ஜி.ஆரின் தனித்தன்மை. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment