கவித்துவம்
ஆயிரம் வார்த்தைகளில் சொல்லவேண்டியதை, சுருக்கமான வார்த்தைகளில் நறுக்கென சொல்வதே கவிதை. சில கவிதைகள் மனசுக்குள் ஊடுருவி ஏதேதோ செய்துவிடும். அப்படிப்பட்ட சில கவிதைகள்.
வயிறு
ஆடுகளைப் போலவே
ஓநாய்களுக்கும் வயிறுள்ளது.
தாவரங்களிடம் விசாரித்தால்
கதை கதையாக சொல்லும்
ஆடுகளின் அத்துமீறல் குறித்து…
- கவிஞர் சாரதி
அதிதி
வாசலிலேயே பேசி
வழி அனுப்புவோர் வீட்டு இருக்கைகள்,
அழுக்காவதும் இல்லை,
அழகாவதும் இல்லை.
- M.பாஸ்கர்
பரிசு
‘கொஞ்சம் வெச்சுக்குங்க சார்’
ஓர் அன்பளிப்பு போல
குழந்தையைக் கொடுத்தார்கள்
நெரிசல் மிக்க பேருந்தில்
‘மாமாகிட்டே இரு’
எனக்கும் குழந்தைக்குமான
புது உறவையும் நிர்ணயித்தார்கள்
அலுப்பூட்டுகிற இந்த
அந்திப்பிரயாணம்
இத்தனை இதமாகுமென்று
எதிர்பார்க்கவே இல்லை!
- எஸ்.பாபு
