என்ன செய்தார் சைதை துரைசாமி – 495
சைதாப்பேட்டை தொகுதியில் மீட்டிங் பேசுவதற்கு வந்த திமுக முதல்வர் கருணாநிதிக்கு எலுமிச்சம்பழம் மாலை போட்டே தீர்வது என்ற முடிவு கட்டியிருந்தார் சைதை துரைசாமி. மாலை போடுபவர்கள் மேடைக்குப் பின்புறம் வரலாம் என்றதும் மாலையுடன் சென்று வரிசையில் நின்று கொண்டார்.
அப்போது சைதை திமுக கிளைக்கழகச் செயலாளராக இருந்த சேகர் கையில் மாலையுடன் நின்ற சைதை துரைசாமியை பார்த்து அடையாளம் கண்டுகொண்டார். ஆனால், கையில் கலைஞர் படத்துடன் இருக்கும் மாலையைப் பார்த்ததும், சைதை துரைசாமி கட்சி மாற வந்திருப்பதாக நினைத்து சந்தோஷப்பட்டார். அந்த மகிழ்ச்சியுடன், ‘வா… துரை’ என்று அன்புடன் கூப்பிட்டார்.
மேடையில் இருந்த முதல்வருக்கு வரிசையாக மாலைகள் அணிவிக்கப்பட்டன. சைதை துரைசாமி முறை வந்ததும், வேகமாக மேடையில் ஏறி மைக்கைப் பிடித்தார். ‘வாக்காளர் பேரணி அன்று மனு கொடுக்கவந்த எங்களுக்கு எலுமிச்சம்பழம் கொடுத்து, எங்களைத் தெளிவில்லாதவர்கள் என்று ஏளனம் செய்த முதல்வர் கலைஞர் அவர்களே, ‘எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்கிய நீங்களும், அறிக்கையில் ஒப்பமிட்ட 26 செயற்குழு உறுப்பினர்களும்தான் தெளிவு இல்லாதவர்கள். அதனால் இந்த எலுமிச்சம்பழங்களைத் தேய்த்துக் குளியுங்கள்’என்று சொல்லிவிட்டு எலுமிச்சம்பழ மாலையை கருணாநிதி கழுத்தில் அணிவித்தார்.
அதோடு, நோட்டீஸ்களை கருணாநிதி தலையில் தூவினார். மேடையிலும் கீழேயும் நின்ற அத்தனை பேரும் அப்படியே அதிர்ந்து நின்றார்கள்.
ஒரு கணம் திகைத்துப்போன கருணாநிதி நோட்டீஸில் இருந்த வாசகத்தை படித்ததும், ’இவனை பிடியுங்கள்’’ என்று சத்தம் போட்டார்.
- நாளை பார்க்கலாம்.
