உளவியல் உண்மை
கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை இப்போது நடைமுறையில் இல்லை. பணம், வேலை, வாழ்க்கைச்சூழல், தம்பதியர் உறவு போன்ற பல்வேறு காரணங்களால் பெற்றோரை கவனிக்க முடியாத சூழ்நிலை, நிறைய பேருக்கு குற்றவுணர்வு தருகிறது. திருமணம் செய்துகொண்டதாலே இந்த பிரிவு என்று குடும்ப வாழ்க்கையை சபிக்கிறார்கள்.
பிள்ளைகள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்ன தெரியுமா?
பெற்றோரை கவனிக்க வேண்டிய பொறுப்பு பிள்ளைக்கு இல்லை என்பது தான். ஏனென்றால், இயற்கை அப்படி எந்த உயிர்களையும் படைக்கவில்லை. மனிதனைத் தவிர எந்த உயிரினமும் வயதான பெற்றோரை கவனிப்பதில்லை.
உதவி யார் பொறுப்பு?
அப்படி என்றால் முதுமையில் பெற்றோர் எப்படி வாழ முடியும்? தள்ளாத காலத்தில் யார் உதவியாக இருப்பது..?
பிள்ளையின் படிப்புக்கும், திருமணத்துக்கும், எதிர்காலத்துக்கும் திட்டமிடும் பெற்றோர்கள் தான், தங்கள் எதிர்காலத்திற்கும் சரியாகத் திட்டமிட வேண்டும்.
பெற்றோரை கவனிக்கவேண்டிய கடமை பிள்ளைக்கு உண்டு என்று சட்டம் இருக்கிறது என்று வாதாடலாம். ஆனால், உண்மையான அன்பு, அக்கறை, நேரம், பணம் இல்லாதவர்களால் பெற்றோரை எப்படி கவனிக்க முடியும்..? எனவே, பிள்ளைகளை தொந்தரவு செய்யாமல் தனிமையில் வாழப் பழகுவதே பெற்றோருக்கு அழகு.
உயிரைக் கொடுத்து வளர்த்த தாய், உழைப்பைக் கொடுத்த தந்தை என்பதெல்லாம் உண்மை. ஆனாலும் கவனிக்கவில்லை என்று பிள்ளைகளை குறை சொல்லாதீர்கள். ஏதாவது நடக்கும் என்பதில் நம்பிக்கை வையுங்கள், நல்லதே நடக்கும்.
இந்தக் காலத்திலும் சிலர் பெற்றோரை நிஜமாக மதிக்கிறார்கள், கவனிக்கிறார்கள் என்றால், அவர்கள் பிள்ளைகள் அல்ல… அதற்கும் மேலான மனித நேயர்கள். . அப்படிப்பட்டவரை எந்த குறையும் சொல்லாமல் கொண்டாடுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
