ஞானகுரு பதில்
கேள்வி : பணத்துக்காக தாய் நாட்டை விட்டு அயல் நாட்டுக்கு பிழைப்பு தேடிப் போவது சரியா..?
- எம்.மதன், வண்ணாரப்பேட்டை.
ஞானகுரு :
பொதுவாக தன்னை விட தன் குடும்பம் முக்கியம் என்று பொறுப்பை கையில் எடுத்துக்கொள்பவர் வெளிநாடு போகிறார். குடும்பத்தைப் பிடிக்காமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுபவர்கள் உண்டு. அதேபோல் திறமைக்கு இங்கு மதிப்பு இல்லை என்று வேறு நாடு செல்பவர்களும் இருக்கிறார்கள். மனிதரின் கால்களுக்கு வேர்கள் கிடையாது என்பதால் பிடித்த இடத்திற்கு எல்லாம் செல்லலாம்.
குறைந்த வருடங்களில் அதிக பணம் சம்பாதிக்கும் வழி என்பதாலே நிறைய பேர் வெளிநாட்டு வேலைக்குச் செல்கிறார்கள். பணத்துக்காக தங்கள் இளமை, உறவு, அன்பு, பொழுதுபோக்கு, திருவிழா, கொண்டாட்டம், ஆரோக்கியம் போன்றவற்றை தியாகம் செய்கிறார்கள்.
அதேநேரம், குழந்தைகளுடன் நேரம் செலவிட நினைப்பவர்கள், தனிமையை வெறுப்பவர்கள், பெற்றோர் நெருக்கடிக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு, அது நிச்சயம் சிறையாகத் தெரியும். எனவே மன அழுத்தம் இல்லாமல், பாதுகாப்பான வேலை என்றால் மட்டும் வெளிநாடு செல்லலாம். மற்றவர்கள் சொந்த நாட்டிலே சுகமாக வாழலாம்.
