ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : பெண்களை ஏன் தெய்வமாக மதிக்க வேண்டும்?
- சி.ராஜேந்திரன், உசிலம்பட்டி.
ஞானகுரு :
மாட்டுக்கு புல் போடுவது அதன் மீதான கருணையில் அல்ல, நிறைய பால் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதுபோன்று பெண்ணை தெய்வமாக மதிப்பது அவள் மீதான மரியாதையால் அல்ல, அவளிடம் நிறைய ஆதாயம் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தினால்தான்.
பெண்ணை அடிமையாக கொடுமைப்படுத்தி பெண்ணிடம் வாங்குவதைவிட, அவளை வணங்கி ஏமாற்றி வேலை வாங்குவது எளிது. இப்படித்தான் காலம் காலமாக பெண்ணை ஆண் ஏமாற்றி வருகிறான். பெண்ணை மனுஷியாக மதித்தால் மட்டும் போதும்.
………………………….
கேள்வி : திரைப்படங்களும், பாடப் புத்தகங்களும் வாழ்க்கையைத்தானே போதிக்கிறது?
- டி.சிந்துஜாவைரம், பாளையம்பட்டி
ஞானகுரு :
ஆயிரமாயிரம் ஞானியர் உபதேசம், வேதம், இதிகாசங்களும்கூட வாழ்க்கைப் பாடம்தான். கண் திறந்து பார்ப்பவருக்கு புல்லும், எறும்பும்கூட வாழ்க்கை வழிகாட்டிகள். திரைப்படமும் பாடப்புத்தகமும் பார்ப்பவர் கண்களைப் பொறுத்து பாடம் புகட்டும் அல்லது பொழுதைப் போக்கும்.
