ஞானகுரு கவுன்சிலிங்
மகிழ்ச்சியான கனவு காணும் நேரத்தில் நிறைய பேருக்கு விழிப்பு வந்துவிடுகிறது. அதேபோல் உயிருக்குப் பயந்து ஓடும் கனவிலும் இடையில் விழிப்பு வந்துவிடும். இப்படிப்பட்ட நிலையில் கனவில் என்ன நடந்தது என்பது முழுமையாக ஞாபகம் இருப்பதில்லை. புகை படிந்த உருவம் போன்று கனவுகள் தெரியுமே தவிர, பளீச்சென எதுவும் புரியாது.
பொதுவாகவே, தூக்கத்தில் இருந்து விழித்ததும் பெரும்பாலான கனவுகள் நினைவில் இருப்பதில்லை. அதேநேரம், கண் விழித்ததும் படுக்கையில் அசையாமல் அப்படியே படுத்து யோசித்தால் கனவு நினைவுக்கு வந்துவிடும். எனவே, கனவை ஞாபகம் இருக்க வேண்டுமென நினைப்பவர்கள் படுக்கையில் இருந்து சட்டென ஒருபோதும் எழுந்துவிடக் கூடாது.
இரவு நேரத்தை விட பகலில் தூங்குபவர்கள் அதிகம் கனவு காண்கிறார்கள். பொதுவாக பகலில் தூங்குபவர்களுக்கு கெட்ட கனவுகளே வருகிறது. பகல் கனவு பலிக்காது என்று பலரும் சொன்னாலும், இந்த கனவுகள் நீண்ட நேரம் ஞாபகத்தில் நின்று வேதனை கொடுக்கிறது. இதற்கு பயந்தே நிறைய பேர் பகலில் தூங்குவதில்லை.
கனவு காணாத மனிதர் யாருமே இல்லை. எனவே, கனவு என்பதை நரம்புகளின் செயல்பாடு என்கிறது மருத்துவம். கனவை ஆழ்மன சிந்தனைகளின் பிரதிபலிப்பு என்கிறது உளவியல். ஆன்மீகம் மட்டுமே கடவுள் காட்டும் முன்னெச்சரிக்கை என்று சொல்கிறது.
கனவுகள் மூலம் யாருக்கும் நல்லது அல்லது கெட்டது நடந்ததாக ஆதாரங்கள் கிடையாது. கனவில் யாருடைய எதிர்காலமும் இறந்த காலமும் தெரிவதில்லை, தெரியப்போவதும் இல்லை. எனவே, கனவுகளை குப்பை போன்று தூக்கி எறியக் கற்றுக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
