ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி ; தாயை விட சிறந்த தெய்வம் இல்லை எனும்போது கோயில்கள் எதற்காக? தாயை வணங்கினால் போதுமா..?
- இ.மணிவண்ணன், மாத்தநாயக்கன் பட்டி
ஞானகுரு :
கோயில் எழுப்பச் சொல்லி எந்தக் கடவுளும் மனிதரிடம் வந்து மன்றாடவில்லை, மனிதர்களே கடவுளுக்குக் கோயில் கட்டுகிறார்கள்.
தாய் மீது மதிப்பும் மரியாதையும் இளம் வயதில் பிள்ளைகளுக்கு ஏற்படுவதில்லை. அவர்களே வளர்ந்து திருமணம் முடித்து ஒரு பிள்ளைக்கு பெற்றோராக மாறும் நேரத்தில்தான், தாயின் மதிப்பை உணர்கிறார்கள். அதற்குள் தாய்க்கு வயதாகிவிடுகிறது.
அதேநேரம், தாயினால் அன்பைத் தவிர வேறு எதையும் கொடுக்க முடியாது. அந்த காலகட்டத்தில் மனிதர்களுக்குத் தேவை அன்பு அல்ல. அவர்கள் விரும்புவது பணம், புகழ். அதை தாயினால் தரமுடியாது என்பதால் கண்ணுக்குத் தெரியாத கடவுளை நம்புகிறார்கள்.
முன்னோர்களுக்குக் கோயில் கட்டி குல தெய்வமாகக் கொண்டாடுபவர்கள் கூட, பெற்ற தாயை கண்டுகொள்வதில்லை. இது, காலம் காலமாக நடப்பதுதான். இதை எதிர்பாராமல் அன்பு செலுத்துவதுதான் தாயின் பெருமை.
………………
கேள்வி : அதிக பணம் ஆபத்து என்பதை உணராமல், பணம் மீது பேராசை வைப்பவர்கள் பைத்தியம்தானே?
- ஆர்.ராஜ்குமார், திருப்பத்தூர்.
ஞானகுரு :
உண்மை சொல்வது என்றால் பணத்துக்கும், கடவுளுக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. ஏனென்றால் ஆசைப்பட்டதை எல்லாம் பணம் மூலம் பெற்றுவிட வேண்டும். கடவுள் அருள் வேண்டுமா அல்லது பணம் வேண்டுமா என்று கேட்டால், பணம் வாங்குவதுதான் புத்திசாலித்தனம். ஆனால், பண ஆசை எந்த அளவுக்கு இருக்கவேண்டும் என்பதில்தான் வாழ்க்கைத் தத்துவம் இருக்கிறது. எத்தனை சம்பாதித்தாலும் மூன்று வேளை மட்டுமே சாப்பிட முடியும், ஒரு அறையில்தான் படுக்க முடியும்.
எனவே, உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அளவு பணம் தேடுவது அர்த்தமுள்ளது. ஆனால், பிள்ளைக்கும், பரம்பரைக்கும் சேர்த்து பணம் சேர்த்துவைக்க நினைப்பதுதான் தவறு. இது, பைத்தியக்காரத்தனம் அல்ல, பணத்துக்கு அடிமைத்தனம்.
